பலமிழந்த முஸ்லிம் அரசியலில் – எம்.ஜி.ஆர்களும், நம்பியார்களும்.

ஒரு தடவை நம்பியார் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து சிலர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவருடைய சாரதி தெரியப்படுத்தினான்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஒரு இடத்தில் சற்று முன்னால் சென்று வாகனத்தை நிறுத்தினார்கள்.

என்னவென்று புரியாத நம்பியார் கீழே இறங்கினார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ‘நீங்கள் எங்கள் தலைவரை ஏன் அடிக்கின்றீர்கள்?’ என்று கேட்டனர். நம்பியாருக்குப் விளங்கவில்லை.

‘நாங்களும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம் நீங்கள் எங்களது தலைவருக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுக்கின்றீர்கள், அவருக்கெதிராக திட்டம் தீட்டுகின்றீர்கள். இதுவெல்லாம் நல்லதற்கல்ல. இனியும் அப்படிச் செய்தால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்’ என்று கடுந்தொனியில் கூறினார்கள்.

நம்பியார் ‘உங்கள் தலைவர் யார்?’ என்று மட்டும் கேட்டார்.
‘எம்.ஜி.ராமச்சந்திரன’; என்றார்கள்.

‘அது திரைப்படம் தம்பிமார். நாங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அவ்வாறு நடிக்கின்றோம். அது நிஜமல்ல’ என்ற தொனியில் விளக்கமளித்தார். ஆனால் அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நம்பியாரை எச்சரித்துவிட்டுச் சென்று விட்டனர்.

இந்திய சினிமா, அந்நாட்டின் அரசியலுக்கு நல்ல பல அரசியல் தலைமைகளைக் கொடுத்திருக்கின்றது. இலங்கை அரசியல் சிறந்த நடிகர்களை உருவாக்கியிருக்கின்றது. இதில் ஹீரோக்கள், வில்லன்கள் மட்டுமன்றி, நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்களும் உள்ளனர். சிலர் டி. ராஜேந்தர் போல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என எல்லா வேலைகளையும் செய்து தமக்கு விரும்பிய ‘காட்சிகளை’ ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வரிவையில் முஸ்லிம் அரசியலிலும் எம்.ஜி.ஆர்களும் நம்பியார்களும் இருக்கின்றார்கள். சில முஸ்லிம் அரசியல்வாதிகள் நிஜத்தில் வில்லனாக இருந்து கொண்டு ‘எங்கவீட்டுப் பிள்ளை’ எம்.ஜி.ஆர்.போல வெளியில் காட்டிக் கொண்டு, அந்த திரைப்படத்தில் வரும் எம்.என். நம்பியார் போல வில்லத்தனமான வேலைகளை திரைமறைவில் செய்து கொண்டிருக்கின்றனர். உண்மையான ஹீரோ யார், நிஜ வில்லன்களான அரசியல்வாதிகள் யார் என்பதை முஸ்லிம் சமூகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

குறிப்பாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், போராளிகள், மேலே குறிப்பிடப்பட்ட கதையில் வருகின்ற முட்டாள் ரசிகர்களைப் போலவே, அரசியல் நடிகர்களையும் அவர்களது அற்புதமான நடிப்பையும் விளங்கிக் கொள்ளாமல் தமக்கிடையே சண்டைபிடித்துக் கொள்வதையும் காண முடிகின்றது. முஸ்லிம் அரசியலில் ஒரு ‘காட்சி’ மாறிய பிறகு, எம்.ஜி.ஆர்.கள் நம்பியார் வேலை பார்க்கின்றார்கள் என்பதையும் வில்லன்கள் நிஜத்தில் மோசமானவர்கள் இல்லை என்பதையும் விளங்கிக் கொள்ள முடியாத அரசியல் மடமை முஸ்லிம்களை ஆட்கொண்டிருக்கின்றது. இதனைச் சொல்வதற்கான காரணத்தை இந்தக் கட்டுரையை வாசித்து முடிக்கும் போது விளங்கிக் கொள்வீர்கள்.

அரசியல் பின்னடைவு

இலங்கையில் பல தசாப்தங்களுக்குப் பிறகு, சிங்கள மக்களை மையமாகக் கொண்ட பெருந்தேசிய அரசியல் மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. எஸ்.டபள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க போல ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை முன்னிறுத்தி இன்னும் ஒரு சுற்று வருவதற்காக வகுக்கப்பட்ட வியூகங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. சமகாலத்தில், தமிழர்களின் அரசியல் விழுந்தும் ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலையில் தப்பிப் பிழைத்திருக்கின்றது. ஆனால் இன்று முஸ்லிம்களின் அரசியல் எல்லாப் பக்கங்களிலும் மரியாதையையும், பலத்தையும் இழந்து நிற்கின்றது.

இதற்குப் பிரதான காரணம் முஸ்லிம் கட்சித் தலைவர்கள், தளபதிகள் கடந்த காலத்தில் மேற்கொண்ட புத்திசாலித்தனமற்ற தீர்மானங்களும் நகர்வுகளும் ஆகும். ஆனால், அவர்கள் மட்டுமே இந்த நிலைமைக்கு காரணமல்ல, மாறாக, பெருந்தேசியவாதம், இனவாதம், சஹ்ரான் போன்ற பயங்கரவாதிகளின் செயற்பாடுகள், மதபோதனை என்ற பெயரில் அளவுக்கதிமாக பிரசாரங்களில் ஈடுபடும் காளான் அமைப்புக்கள், பொறுப்பை நிறைவேற்றாத இஸ்லாமிய கட்டமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள், பல்கலைக்கழக சமூகம், அரசியல்வாதிகளில் குருட்டு நம்பிக்கை வைத்துள்ள ஆதரவாளர்கள் தொடங்கி சாதாரண பொது மகன் வரை எல்லோருக்கும் இதில் பங்கிருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.

ஒரு காலத்தில் முஸ்லிம்களின் அரசியல் பெருந்தேசியக் கட்சிகளுடன் பின்னிப் பிணைந்திருந்தது. அதில் பலம்பொருந்திய தூண்களாக முஸ்லிம் தலைமைகள் இருந்தார்கள். பின்னர், இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் மாறினார்கள். முஸ்லிம் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கும் கட்சியே ஆட்சியமைக்கும் நிலை இருந்தது. ஆனால், அந்த வசந்தகாலம் இப்போது மலையேறிப் போய்விட்டதாகவே தோன்றுகின்றது.

முஸ்லிம் அரசியல் கட்சிகள்தான் ஆட்சியை தீர்மானிக்கும் என்ற நிலை மாறியிருக்கின்றது. அதுமட்டுமன்றி, ஆட்சியில் பலமிக்கதொரு பங்காளராக, கௌரவத்துடன் அங்கம் வகிப்பது கூட கேள்விக்குறியாக ஆகியிருக்கின்றது. பத்தோடு பதினொன்றாக வேண்டுமென்றால் இருந்து விட்டுப் போங்கள் என்ற தோரணையிலேயே பெரும்பான்மைக் கட்சிகள் முஸ்லிம் கட்சிகளை வைத்திருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளையும் முஸ்லிம்களுக்கான ஒட்டுமொத்த அரசியலையும் மழுங்கடிக்கச் செய்யும் பாங்கிலான கூட்டு நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவும் இதனைப் பார்க்கலாம். 

அமைச்சுக்கள் இல்லை

இப்போது, ஆளும் தரப்பிலும் சரி எதிர்த்தரப்பிலும் சரி முஸ்லிம்களின் அரசியல் முதலாவதாக மரியாதையும் அந்தஸ்தும் இழந்திருக்கின்றது. இரண்டாவதாக, மிகவும் பலமிழந்து போய்க் கொண்டிருக்கின்றது.

16 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட இந்த நாட்டில் ராஜபக்சக்களுக்கு விசுவாசியான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவுக்கோ அல்லது அவர் போன்று மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் ஒருவருக்கோ அமைச்சு வழங்கப்படவில்லை. எனவே ஆளும் தரப்பில் முஸ்லிம் அரசியல் பலமானதாக இல்லை என்றே கூற வேண்டும்.

மறுபுறத்தில், பல இலட்சம் வாக்குகளை கடந்த இரு தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்திக்குப் பெற்றுக் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகள் தேசியப்பட்டியல் தொடர்பில் சஜித் அணியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக வழக்கம்போல கதைவிட்ட போதும், ஒரு எம்.பி. தானும் இக்கட்சிகளுக்கு வழங்கப்படவில்லை.

இதில் நியாயங்கள் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியென்றால் அதனை முன்னமே விட்டுக் கொடுத்திருக்கலாம். முட்டி மூக்குடைபடத் தேவையில்லை. இந்தப் பின்புலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடனான ஆட்சியில் கூட்டுக் கட்சிகளை உள்ளடக்கிய எதிரணியிலும் முஸ்லிம்களின் அரசியல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாதுள்ளது.

முக்கிய பாராளுமன்றம்

கடந்த பாராளுமன்றங்களில் சுமார் 20 வரையான முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தனர். இதில் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளடக்கம். ஆனால், முஸ்லிம் சமூகத்திற்காக, தமது வரப் பிரசாதங்களைப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மிகக் குறைவு. சிலர் பாராளுமன்றத்தில் தமது கன்னி உரைக்குப் பிறகு: உரையாற்றியதே ஞாபகத்தில் இல்லை. இன்னும் சிலர் பல அமர்வுகளுக்கு சமூகமளிக்கவில்லை. இப்படித்தான் அவர்கள் காலத்தைக் கடத்தினார்கள்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் முஸ்லிம் எம்.பி.க்கள் பலர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். சில புதிய முகங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அத்துடன், முன்னொரு காலத்தில் ஒரு வகுப்பில்; கற்கும் மாணவனை வேறு வழியின்றி அடுத்த தரத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தால், ‘நிபந்தனையுடன் வகுப்பேற்றப்பட்டுள்ளார்’ என்று மாணவர் பதிவேட்டில் எழுதுவதைப் போல, சில அரசியல்வாதிகள் இந்த தேர்தலிலும் முறை நிபந்தனையுடன் வெற்றிபெறச் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள இலங்கையின் 9ஆவது பாராளுமன்றம் மேலே குறிப்பிட்டதைப் போன்ற வசந்தகால பாராளுமன்றமாக இருக்கப் போவதில்லை. முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு செல்லாமல் விடுவதும், அங்கு சென்று தூங்குவதும், உணவருந்துவதும், பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புச் சலுகைகளை அனுபவிப்பதும், பணம் உழைப்பதுமாக காலத்தைக் கடத்தக் கூடிய பாராளுமன்றமாக இருக்குமென நினைக்க முடியாது. ஏனெனில் இந்த பாராளுமன்றத்தில் தமக்குக் கிடைத்துள்ள அறுதிப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு ஆளும் பொதுஜனப் பெரமுண அரசாங்கமானது பல காய்களை நகர்த்தவுள்ளது.

20ஆவது திருத்தம்

இதில் முதலாவது நகர்வு அரசியலமைப்பில் 20ஆவது திருத்தமாகும். 19ஆவது திருத்தத்தை திருத்துவதற்கான அல்லது இல்லாதொழிப்பதற்கான 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நிறைவடைவதற்குள் இவ் உத்தேச திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.

2015 இல் ஆட்சியைக் கைப்பற்றிய மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் அவ்வருடம் ஜூன் மாதத்தில் 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. தேர்தல் காலத்தில் ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன்’ என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் இத்திருத்ததால் முற்றாக ஒழிக்கப்படவில்லை. ஆனால், சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டன என்பதை மறுதலிக்க முடியாது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களாக குறைப்பு, பாராளுமன்றத்தை கலைப்பதில் கட்டுப்பாடு, இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக ஒருவர் பதவி வகிக்க முடியாது, அரசியலமைப்பு பேரவை உருவாக்கம், பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு, கணக்காய்வு ஃ தேசிய திட்டமிடல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கம் போன்றவை இந்த திருத்ததால் கொண்டு வரப்பட்ட விடயங்களாகும். 

சுருங்கக் கூறின், பாராளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 18ஆவது திருத்தத்தின் ஊடாக செயலிழக்கச் செய்யப்பட்ட 17 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் மீள அமுலுக்கு கொண்டுவரப்பட்டன. 2015 ஜூன் 28ஆம் திகதி ஒரு மாலைப் பொழுதில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தத்திற்கு 115பேர் ஆதரவாக வாக்களித்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

இந்த திருத்தத்தை முன்னின்று மேற்கொண்ட அப்போதையே ஜனாதிபதி மைத்திரிபால பின்னர் ’19 இனை நீக்க வேண்டும்’ என்று சொன்னார். இதனை அவர் உணர்ந்து சொல்வதற்கு கிட்டத்தட்ட 4 வருடங்கள் சென்றன. அதாவது மைத்திரிக்கும் ரணிலுக்கும் அதிகாரப் போட்டி ஏற்பட்ட பிறகுதான் அவரது அறிவுக்கு இவ்விடயம் எட்டியிருந்தது. ராஜபக்சாக்கள் அப்போதும் அதிகாரக் குறைப்புக்கு உடன்பட்டவர்களாக இருக்கவில்லை என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

இந்தப் பின்னணியிலேயே மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக் கொண்ட கையோடு 19ஆவது திருத்தத்தை நீக்கும் 20ஆவது திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதில் எவ்வாறான திருத்தம் கொண்டுவரப்படும் என்பது இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத விடயம் என்றாலும், 19ஆவது திருத்தத்தில் காணப்படுகின்ற சுயாதீன ஆணைக்குழுக்கள், ஜனாதிபதியின் பதவிக்காலம், எத்தனை முறை அப் பதவியை வகிக்கலாம் என்ற வரையறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் தகவல் உரிமைச் சட்டம் போன்ற நல்ல விடயங்களை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் சாதகமாக சிந்திப்பதாக கூறப்படுகின்றது.

ஆனால் நீண்டகாலம் ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டுமென்ற வேட்கையைக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள் என்ற வகையில், ஜனாதிபதியின் குறிப்பிட்ட சில அதிகாரங்கள், நாடாளுமன்றத்தை கலைக்கும் காலம், அரசியலமைப்பு பேரவையின் கட்டமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் முறைமை ஆகிய விடயதானங்களில் திருத்தங்கள்  கொண்டு வரப்படலாம் என ஊகிக்கப்படுகின்றது.

எங்கும் அதேநிலை

20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதுடன் மேலும் பலவற்றில் திருத்தங்கள், மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, மாகாண சபைகள் முறைமையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். தேர்தல் முறைமை திருத்தப்படலாம், அரசியலமைப்பில் மேலும் சில திருத்தங்களோ அன்றேல் மறுசீரமைப்போ மேற்கொள்ளப்படலாம். அதேபோன்று, இனவெறுப்பு சக்திகளின் அழுத்தங்களுக்கு செவிமடுத்து முஸ்லிம்களுக்கு பாதகமான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது என யாரும் அறுதியிட்டுக் கூற முடியாது.

இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் முஸ்லிம்களின் அரசியல் செல்வாக்கு இழந்து கொண்டிருக்கின்றது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது அமைச்சரவையில் அமைச்சர் அலிசப்ரி இருப்பது ஆறுதலே. ஆவர் முஸ்லிம்களின் விடயத்தில் அக்கறை காட்ட மாட்டார் என்று விமர்சிக்கப்படுவதை ஏற்க முடியாது. அத்துடன், அது அவரை ஆரம்பத்திலேயே சலிப்படையச் செய்து விடலாம்.
ஆனால், மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சராக இருப்பதற்கும் ஆளும்கட்சியின் தேசியப்பட்டியல் நியமன எம்.பி. அமைச்சராக இருப்பதற்கும் இடையில் சிறுகோடு இருக்கின்றது. எனவே, அவர் தனது எல்லைக்கோடுகளுக்குள்ளே நின்று கொண்டே சமூகத்தின் உரிமைகளுக்காக போராட வேண்டியிருக்கும். அதற்காக அவரை குற்றம் சொல்ல முடியாது.

கடந்த காலத்தில் பல அமைச்சர்கள் இருந்தபோதே மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் மட்டுமன்றி, ரணில் ஆட்சியிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான தீர்மானங்கள் அமைச்சரவைக்கு கொண்டு வந்த போது அவர்கள் ‘அடக்கி’ வாசித்தனர். இந்நிலையில், அதாவுல்லா அல்லது மஸ்தான் போன்ற தெரிவு செய்யப்பட்ட எம்.பி.ஒருவர் இல்லாத அமைச்சரவையில் முஸ்லிம்களின் செல்வாக்கு மிகக் குறைவாகவே இருக்கும்.

மறுபுறத்தில் பாராளுமன்றத்திலும் இந்நிலைமைதான் இருக்கும். சிங்கள தேசியத்தை குளிர்விக்கும் விதத்திலான திருத்தங்களுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி சிலவேளை எதிர்க்கட்சியில் இருக்கின்ற ஓரிருவரும் ஆதரவாக வாக்களிக்கக்; கூடும். இவ்வாறான சூழலில் அறுதிப் பெரும்பான்மையின் முன்னே, முஸ்லிம் எம்.பிக்களின் நகர்வுகள் பலம் பொருந்தியதாக இருக்குமென்று கூறுவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. 

பெல்டி மன்னர்கள்

ஆகவே, இவ்வாறு முஸ்லிம் அரசியல் செல்வாக்கு இழந்திருப்பதை ஈடுசெய்தல் என்ற  தோரணையில், இணக்க அரசியல் என்ற அடைமொழியோடு முஸ்லிம் கட்சிகளின் ஒருசில எம்.பி.க்கள் ஆளும் தரப்புடன் ரகசிய பேச்சுக்களில் ஈடுபடுவதாகவும் கட்சி தாவப் போவதாகவும் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி கட்சி வட்டாரங்களிலும் பேச்சடிபடுகின்றது.

பெல்டி அடிப்பதில் முஸ்லிம் அரசியலில் நிறைய வரலாறுகள் இருக்கின்றன. ஒரு ஆட்சியாளரை அல்லது பெரும்பான்மைக் கட்சித் தலைவரை விமர்சித்து, அதன்மூலம் தேர்தலில் வெற்றிபெற்ற சில நாட்களுக்குள் பதவிகளுக்காகவும் வெகுமதிகளுக்காகவும் மறுப்பக்கம் தாவிய சம்பவங்கள் நிறையவே நடந்திருக்கின்றன.

அப்படியான ஒரு பாய்ச்சலை மேற்கொள்ள இந்தமுறையும் மதில்மேல் பூனையாக நிற்கின்றார்களா என்ற பலமான சந்தேகம் முஸ்லிம் சமூகத்திற்குள் எழுந்துள்ளது.

இதற்காக சில எம்.ஜி.ஆர்கள் நம்பியார் வேலை பார்ப்பதாகவும் சில நம்பியார்கள் வெளியில் எம்.ஜி.ஆர் போல காட்டிக் கொண்டிருப்பதாகவும் நம்பகமாக தெரியவருகின்றது.

ஆட்சியின் பக்கம் இருப்பது நல்லதே. தமது பிரதிநிதிகள் அமைச்சர்களாக, ஆளும் தரப்பில் இருக்க வேண்டும் என்றே மனநிலையே கணிசமான முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. அது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்பதும் இதற்குக் காரணம். ஆனால், அப்படியென்றால், முஸ்லிம் கட்சிகள் ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி(?) இணைவதற்கான வியூகங்களை முன்னமே வகுத்திருக்க வேண்டும்.

 அதைவிடுத்து, சுயமிழந்து ‘வழிந்து போதல்’ என்பது அல்லது ‘கிடைப்பதை’ பெற்றுக் கொண்டு சரணாகதியடைதல் முஸ்லிம்களுக்கு எவ்வித அரசியல் பலத்தையும் பெற்றுத்தராது.

இதன் அர்த்தம், ஆளும் தரப்பில் சேரக் கூடாது என்பதல்ல. மாறாக, முஸ்லிம்களின் அரசியல் பதவிக்காக, பணத்திற்காக நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கின்ற அரசியலாக இருக்கக் கூடாது என்பதுடன் தூரநோக்கானதாக, காத்திரமானதாக இருக்க வேண்டும் என்பதும் ஆகும். இதனை அரசியல்வாதிகள் விளங்கி செயற்படுதல் அவசியம்;.
அதேவேளை, முஸ்லிம் மக்களும் தமது அரசியல்வாதிகளை குருட்டுத்தனமாக நடிகர்களின் ரசிகர்களைப் போல நம்பாமல் நிஜத்தில் யார் எம்.ஜி.ஆர். யார் நம்பியார் என்பதை இனியாவது பிரித்தறியவும் வேண்டும். நிஜ நம்பியார்களை விட, எம்.ஜி.ஆர்.போல நடிக்கும் நம்பியார்கள் ஆபத்தானவர்கள்!

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter