திருகோணமலையிலுள்ள 100 எண்ணெய் குதங்கள் இந்தியாவிடம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை துறைமுகத்தை யொட்டியுள்ள 100 எண்ணெய் குதங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முயற்சிப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
1987 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திருகோணமலையிலுள்ள 100 எண்ணெய் குதங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
இந்தியாவிடமுள்ள எண்ணெய் குதங்களை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்திய வெளியுறவு செயலாளருடன் ஹெலிகொப்டரில் பயணித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நான் அமைச்சராக நியமிக்கப்பட்டதில் இருந்து நான் யாருடனும் ஹெலிகொப்டரில் பயணம் செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.
இந்திய வெளியுறவு செயலாளர் தன்னுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள கோரவில்லை. இதே வேளை வண.ஓமல்பே சோபித தேரர் 85 எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக தெரிவித்த கருத்துக்களை மறுத்துள்ளார்.
தற்போது கொடுப்பதற்கு நாட்டிடம் எண்ணெய் குதங்கள் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி அதனை ஏற்கனவே கொடுத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
க.பிரசன்னா (தினக்குரல் 5-10-21)