முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களில் ஞானசார தேரரும் அலி சப்ரியும் ஒன்றே

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அல்லாஹ்வையும் றசூலையும் புனித இஸ்லாத்தையும் நிந்தித்து இஸ்லாமியர்களின் மனதை நோகடிக்க செய்து கொண்டிருக்கும் போது இஸ்லாமிய பாரம்பரிய மத கலாசார விழுமியங்களில் ஒன்றான இஸ்லாமிய திருமணம் மற்றும் காதி நீதிமன்றங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அரசின் கை பொம்மையாகத் திகழும் நீதி அமைச்சர் அலி சப்ரி முனைப்புடன் செயற்படுவது இஸ்லாமிய மார்க்கத்துக்கே துரோகம் இழைக்கும் ஒரு இழிச்செயல் என மாத்தளை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஷியாட் எம். ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஞானசார தேரரும் நீதி அமைச்சர் அலி சப்ரியும் இஸ்லாமிய கொள்கைகளை இல்லாதொழித்திட இணைந்தே செயற்படுகின்றார்களா? என்று இந் நாட்டு முஸ்லிம்கள் மத்தியிலேயே பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இவ்விருவரும் இவ்வாறு செயற்படும் போது இவ்விரு வருக்குமிடையிலேயே கொள்கை ரீதியாக எவ்வித மாற்றமும் இல்லை.

இப்போது நாம் ஞானசார தேரரின் செயல்பாடுகளை விமர்சிப்பதை ஒரு புறம் தள்ளிவிட்டு வந்து எமது இஸ்லாமிய பாராம்பரிய கொள்கைகள் மற்றும் சட்டங்கள் முற்றாக ஒழித்திட முனைப்புடன் செயற்படும் நீதி அமைச்சர் அலி சப்ரியின் செயல்பாட்டில் எமது ஆழ்ந்த கவனத்தை செலுத்த வேண்டியது காலத்தின் தேவை இந்நாட்டு உலமாக்கள் கல்விமான்கள், புத்திஜீவிகள், இஸ்லாமிய பொதுநல அமைப்புகள், இஸ்லாமிய ஊடகங்கள் இது சம்பந்தமாக தமது பூரண கருத்துக்களை மக்கள் முன் சமர்ப்பித்து நீதி அமைச்சர் அலி சப்ரியின் இச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

காதி நீதிமன்றம் யாருடைய காலத்தில் யாருடைய முயற்சியில் எதற்காக எந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்ற வரலாறை நீதி அமைச்சர் அலி சப்ரி சற்று திரும்பி பார்க்க வேண்டும். ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட காதி நீதிமன்றத்தின் தற்போதைய ஒரு சில காதி நீதவான்கள் தெரிந்தோ தெரியாமலோ சில வழக்குகளில் இழைத்த தவறுகளுக்காக முழு நாட்டிலிருக்கும் காதி நீதிமன்றங்களை இல்லாதொழிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி முயற்சி எடுக்கிறார்.

பாராளுமன்றத்தில் இருக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள் இன்று சட்டத்திற்கு விரோதமாக நீதியை புறக்கணித்து தினசரி நடந்து கொண்டிருப்பது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் இன்று ஐ.நா சபை வரை சென்று விட்டது. துப்பாக்கி முனையில் சிறை கைதிகளை அச்சுறுத்தும் ஜனநாயக விரோத செயல்களும் காட்டு சட்டங்களும் இன்று நாட்டில் சகஜமாக நடந்து கொண்டிருக்கின்றது.

அப்படி என்றால் ஒரு சில காதி நீதிமன்ற நீதவான்கள் செய்கின்ற தவறுக்காக இந் நாட்டு முழு காதி நீதிமன்ற முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கருத்தில் செயற்படும் நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் நீதிக்கு முரண்பாடான செயல்பாடு காரணமாக பாராளுமன்றத்தையே கலைத்திருக்க வேண்டும் என்றார். (தினக்குரல் 4-10-21)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter