நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை – மனோ எம்.பி.

அமெரிக்க டொலர் அந்நிய செலவாணி பிரச்சினையால், இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்கள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன. இவற்றை அரசாங்கமே பொறுப்பெடுத்து, நாட்டுக்குள் கொண்டு வந்து, பொதுமக்களுக்கு, மலிவான விலையில் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்தார்.

இப்பின்னணியில், துறைமுகத்தில் இருந்த ஒரு வெள்ளைப்பூண்டு கொள்கலன், “சதோச”வின் ராகம களஞ்சியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. அப்படி வந்த வெள்ளைப்பூண்டு கொள்கலன் அப்படியே நள்ளிரவில், பற்றுசீட்டு கூட போடாமல், ஒரு தனியார் நிறுவனத்துக்கு, கிலோ 145/= கணக்கில் கைமாற்றப்படுகிறது.

இப்படி நள்ளிரவில் கொடுக்கப்பட்ட அதே வெள்ளைப்பூண்டு கொள்கலனை, அதன் பின்னர், அதே “சதோச” நிறுவனம், கிலோ 445/= கணக்கில் மீண்டும் வாங்குகிறது.

இந்த நள்ளிரவு கொள்ளையை பற்றி, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிர்வாக இயக்குனர் துசான் குணவர்தன பகிரங்கமாக உண்மைகளை வெளியில் கூறியுள்ளார். இதனை வெளிப்படுத்திய தனக்கு இன்று மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுபற்றி தான் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் அவர் பகிரங்கமாக கூறுகிறார். இந்த வெள்ளைபூண்டு கொள்ளை, மரண அச்சறுத்தல் ஆகியவை பற்றிய முழு உண்மைகளும் நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என நேற்றிரவு ரூபாவஹிணி தேசிய தொலைகாட்சியில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

சிங்கள மொழியில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசு தரப்பு எம்பீக்கள் திஸ்ஸ குட்டியாராச்சி, மிலான் ஜெயதிலக, எதிர் தரப்பு எம்பி மனுஷ நாணயகார ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

“டொலர் பிரச்சினையால், துறைமுகத்தில் தேங்கி இருக்கும், இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்களை, அரசாங்கமே பொறுப்பெடுத்து, நாட்டுக்குள் கொண்டுவந்து, பொதுமக்களுக்கு, மலிவான விலையில் கொடுங்கள்” என, “சதோச” (CWE) என்ற அரச நிறுவனத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுக்கிறார்.

ஆகவே துறைமுகத்தில் இருந்த ஒரு வெள்ளைப்பூண்டு கொள்கலனை “சதோச”வின் களஞ்சியசாலைக்கு கொண்டு வந்தார்கள். அப்புறம் நடந்ததுதான் சுவாரசியமான திருட்டு. “சதோச”வின் ராகம களஞ்சியசாலைக்கு வந்த, அந்த வெள்ளைப்பூண்டு கொள்கலன் அப்படியே நள்ளிரவில், பற்றுசீட்டு கூட போடாமல், ஒரு தனியார் நிறுவனத்துக்கு, கிலோ 145/= கணக்கில் கொடுக்கப்படுகிறது.

அதன் பின் நிகழ்ந்தது, அதைவிட மகா பெரிய திருட்டு. இப்படி நள்ளிரவில் கொடுக்கப்பட்ட அதே வெள்ளைப்பூண்டு கொள்கலனை, அதே “சதோச” நிறுவனம், கிலோ 445/= கணக்கில் மீண்டும் வாங்குகிறது. அதன் பின் அது கிலோ 500/= மேல் அப்பாவி வாடிக்கையாளர் பொது மக்களுக்கு நாடு முழுக்க உள்ள “சதோச” முகவர் நிலையங்கள் மூலம் விற்கப்படுகிறது. இதுதான், “நள்ளிரவில் நடைபெற்று முடிந்த வெள்ளைப்பூண்டு கொள்ளை”.

இந்த நடு ராத்திரி படு கொள்ளைக்கு துணை போக முடியாமல், மனம் நொந்து, இந்த நாட்டை காப்பாற்ற வந்த தேசிய வீரர்களின் நிர்வாகத்தில் இருந்து, பதவி விலகும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிர்வாக இயக்குனர் துசான் குணவர்தன, இந்த உண்மைகளை பகிரங்கமாக கூறுகின்றார்.

இது மட்டுமல்ல, இதற்கு முன் இப்படியே சீனி, பால்மா, மாவு, உளுந்து ஆகிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இரகசியமாக தனியாருக்கு விற்கப்பட்டதாகவும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிர்வாக இயக்குனர் துசான் குணவர்தன மனம் நொந்து கூறுகிறார். இதனை வெளிப்படுத்திய தனக்கு இன்று மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுபற்றி தான் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் அவர் பகிரங்கமாக கூறுகிறார்.

-தமிழன்.lk

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter