கொரோனாவின் தாக்கம் உலக பொருளாதரத்தை ஆட்டம் காண வைத்துள்ள நிலையில் டொலருக்கான விற்பனை பெறுமதியின் அதுகரிப்பானது இலங்கை போன்ற நாடுகளுகளுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கும் இலங்கை மத்திய வங்கி, சர்வதேச கடன்களை செலுத்துவதில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும், அதேபோல் இப்போது மக்களுக்கு சலுகைகளை கொடுத்தாலும் இதற்கான விளைவுகளை மக்கள் அனைவருமே சந்திக்க நேரிடும் எனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடு பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் நாட்டின் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நெருக்கடிகளில் இருந்து நாட்டினை மீட்டெடுக்க முகங்கொடுக்கும் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எச். கருணாரத்ன இதனை தெரிவித்தார். அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கி நாட்டின் பொருளாதார இணை நடவடிக்கைகளை கையாளவும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் இதுவரையில் 240 பில்வியன் ரூபாவை வழங்கியுள்ளது. அவற்றில் 140 பில்லியன் ரூபா இப்போதே மக்களின் கைகளுக்கு சென்றடைந்துவிட்டது.
நாட்டிலுள்ள மக்களின் கைகளில் பணமாக இந்த தொகை உள்ளது. நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் முன்னாயத்தமாக பணத்தை கையில் வைத்துக்கொள்வது இயல்பான விடயமேயாகும். பொதுவாக சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் இவ்வாறான தொகை புழக்கத்தில் இருக்கும். ஆனால் வழமைக்கு மாறாக இப்போதே 140 பில்லியன் ரூபா பயன்பாட்டில் உள்ளது. மேலும் நூறு பில்லியன் ரூபா அனைத்து வணிக வங்கிகளிலும் இருப்பாக உள்ளது.
இப்போது நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு எவ்வளவு பணம் தேவை என்பதையும் ஆராய்ந்தே மத்திய வங்கி இந்த தீர்மானம் எடுத்துள்ளது.
இப்போதே பல சலுகைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றோம். இன்னும் சில காலத்துக்கு இதனை வழங்கியாக வேண்டும். அதே நேரத்தில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமை,கடன்கள் ஆறுமாத காலத்துக்கு நீக்கப்பட்டுள்ளமை என்பதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிய நிலைமையும்
உருவாகும். அதற்கும் எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டும்.
ஆகவே எதிர்காலத்தில் மக்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதற்கு மக்கள் ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் மக்களுக்கு சலுகைகளை கொடுத்துவிட்டோம். எதிர்காலத்தில் அனைவரும் தத்தமது பொறுப்புகளை உணர்ந்து ஒத்துழைப்பு வழங் கயொாக வேண்டும்.
கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளவும் வேண்டும். நடுத்தர வர்த்தகர்கள் இதில் அதிக நெருக்கடிகளை சந்திப்பார்கள், எனினும் அரசாங்கம் அதற்கான மாற்று வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும். அதற்கான ஆலோசனைகளை நாமும் வழங்கி வருகின்றோம் என்றார்.