ஏப்ரல் தாக்குதலின் சூத்திரதாரி முஸ்லிம்களின் “அல்லாஹ்: என்றும் அனைத்து முஸ்லிம்களையும் ஒரு தீவிரவாதிகளைப் போன்று சித்தரித்து ஞானசார தேரர் பேசியதை நான் வன்மையாக கண்டிப்பதுடன், அவருக்கு தற்போது எவ்வித அடையாளமும் இல்லாத காரணத்தினால் இனங்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டிவிட முயற்சிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற “தீர்வு’ நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவருடனான செவ்வி வருமாறு,
கேள்வி: ஏப்ரல் தாக்குதலின் சூத்திரதாரி நீங்கள் வணங்கும் ‘அல்லாஹ்’ என்றும் அனைத்து முஸ்லிம்களையும் ஒரு தீவிரவாதிகளைப் போன்றும் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியது பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: இதனை கடுமையாக கண்டிக்கின்றோம். அவரும் ஒரு அடிப்படைவாதியே. அளுத்கமையில் கலவரம் நடப்பதற்கான முக்கிய நபர். ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு இது தேவையற்ற வேலை. அவருக்கு தற்போது எவ்வித அடையாளமும் இல்லாத காரணத்தினால் இனங்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றார். இது குறித்து நான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு, அரச ஊடகங்களில் அவருக்கு இடம்கொடுப்பது பற்றியும் நான் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். இதற்கு எதிராக நான் தொடர்ந்து செயற்படுகின்றேன்.
ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சஹ்ரான் போன்ற அடிப்படைவாதிகள் உருவாக்குவதற்கு எதிரிலுள்ள அடிப்படைவாதிகளே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, இதனை நாங்கள் கடுமையாக கண்டிப்பதோடு, அவரிடமிருக்கும் தகவல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் இவ்வாறான கலவரங்கள் நடந்துள்ளதால் முழு சமூகத்தையும் அடிப்படைவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சுட்டிக்காட்டுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி: ஆசிரியர்களின் போராட்டத்திற்கான தீர்வை அரசாங்கம் வழங்கலாமே?
பதில்: 28 வருடங்களாக இருந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது, சம்பளத்தை இரு மடங்காகவும் அதனை ஒரே தடவையில் வழங்குமாறும் கோருகின்றதை எவ்வாறு தீர்ப்பது? 28 வருடங்களாக இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்துவது பொருத்தமானதல்ல. நாங்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கின்றோம். எனினும், அவர்கள் சிந்திக்காது செயற்படுகின்றனர். சில சங்கங்கள் ஆசிரியர்களை பிணைக்கைதிகளாகக் கொண்டு செயற்படுகின்றன. இதனால் அரச பள்ளியில் கற்கும் மாணவர்களே பாதிக்கப்படுகின்றார்கள்.
ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை இரண்டு வருடங்களுக்கு பின்னோக்கித் தள்ளுகின்றனர். இது சரியா?. இந்த நேரத்தில் இவ்வாறு செய்வது சரியா. 28 வருடங்களாக பொருத்துக்கொண்டிருந்தவர்கள் தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறு செய்வது பொருத்தமானதா?.
கட்டம் கட்டமாக இல்லாது முழுவதுமாக தருமாறு கூறுகின்றனர். 18 வருடங்களாக சும்மா இருந்துக்கொண்டு சம்பளம் பெற்றவர்கள் தற்போதா போராட வேண்டும்? இணையவழி கற்றலிலிருந்து வெளியேறி அரசிடம் சம்பளமும் பெற்றுக்கொண்டு தனியார் வகுப்புகளையும் ஆசிரியர்கள் நடத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் 7௦ – 80 வீதமான ஆசிரியர்களை அச்சுறுத்தியே போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரே தடவையில் கொடுத்தால் ஏனைய சங்கங்களும் இவ்வாறு கோருவர். அவ்வாறு கோரும்போது பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஆகவே, கட்டம் கட்டமாக தருவதாகக் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ளாது மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றனர்.
ஆசிரியர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதை ஏற்கின்றோம். அதற்காக அவர்கள் கேள்வி எழுப்ப உரிமையுண்டு. எனினும், தற்போதைய நிலையில் இவ்வாறு போராடுவது பொருத்தமற்றது. நடுநிலையாக சிந்தித்து செயற்பட வேண்டும். இவ்வாறு மாணவர்களின் கல்வியில் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி: ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்தபோது, காணாமல்போனோர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகைத் தர முடியும் போன்ற விடயங்கள் குறித்து கூறினார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?
பதில்: தேர்தலின் போது முழு நாட்டுக்குமானதும் மக்களிடையே ஒற்றுமையை கட்டியெழுப்பும் ஜனாதிபதியாகவும் செயற்படுவதாகவே உறுதியளித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை மூடிவிடுவோம் என அச்சம் கொண்டனர். ஆனால் நாங்கள் அதனை மேலும் பலப்படுத்தியுள்ளோம்.
குறிப்பாக, கடந்த இரு வருடத்தில் ஒரு பில்லியன் ரூபா நஷ்ட ஈடாக செலுத்தியுள்ளோம். அத்தோடு, கிளிநொச்சியிலும் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை திறந்துள்ளதோடு, அது என்னுடைய அமைச்சின் கீழேயே உள்ளது. மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு நாங்கள் எங்களால் செய்ய முடிந்ததை செய்தாக வேண்டும்.
இலங்கை என்ற ரீதியில் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். எந்த வேறுபாடுகள் இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்து இலங்கையர் என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதனைக் கொண்டே ஜனாதிபதி கூறியுள்ளார். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எங்களிடையேயுள்ள இடைவெளியை குறைத்துகொண்டு ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்வதே எங்கள் முன்னுள்ள சவாலாகும்.
கேள்வி: ஜனாதிபதி அவ்வாறு கூறினாலும் புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு வருவதற்கு பல தடைகள் மற்றும் அச்சம் இருக்கின்றமைக்கு என்ன தீர்வு?
பதில்: நாட்டுக்கு விரோதமாக செயற்படாது எவ்வித சதித்திட்டங்களுக்கும் உள்வாங்காதிருப்போருக்கு நாட்டுக்கு வருவதில் எவ்வித தடைகளும் இல்லை. இதுவரை அவ்வாறு தடைகள் விதிக்கப்பட்டதாக எவ்வித சாட்சியங்களும் இல்லை. இதனால் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அதேபோன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 16 விடுதலைப் புலிகளை விடுதலை செய்துள்ளனர்.
யுத்தத்திற்கு பின்னர் 12 ஆயிரத்து 784 விடுதலைப் புலிகளை புனர்வாழ்வளித்து சமுதாயத்திற்கு அனுப்பியுள்ளோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டால் 18 மாதங்களுக்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்பதுடன் நீதிமன்றத்திற்கும் அதிகாரமிருக்காது. இதனால் இச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படுவது குறித்து ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டதையடுத்து தற்போது வரை 5௦ இற்கும் அதிகமானோர் அதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
கேள்வி: காணாமல்போனார், இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சினையல்ல. ஒவ்வொரு ஆட்சியிலும் இது தொடர்கின்ற நிலையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கங்களை அமைத்து போராடுவதோடு, என்றோ ஒருநாள் உறவுகள் வருவார்கள் என காத்திருக்கும்போது அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதை ஏற்றுக்கொள்வார்களா?
இதுவே எங்களுக்குள்ள சவாலாகும். இந்தப் பிரச்சினை வடக்கிற்கு மட்டுமானதல்ல. இராணுவத்திலும் கூட 6 ஆயிரத்து 50௦0 பேர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து யாரும் பேசுவது கிடையாது. யுத்தமொன்று இடம்பெற்றால் இவ்வாறு நடக்கும். இதனாலேயே, யுத்தமொன்று வராமல் நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
காணாமல்போனோரின் உறவுகளால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எங்களுக்கும் புரிகின்றது. எனினும், இதற்கு எங்களிடம் இருக்கும் மாற்று வழி என்ன, மரண சான்றிதழை வழங்க முடியும். அல்லது மரணிக்கவில்லை தற்போது அவர்கள் இல்லை என்ற ஒரு சான்றிதழை வழங்க முடியும். எனினும், அதுவும் ஒரு மரண சான்றிதழைப் போன்றதே. இதனைக் கொண்டு ஓய்வூதியம் மற்றும் அவர்களின் சொத்துகளையும் மீட்க முடியும். அத்தோடு, எங்களுடைய அலுவலகத்திற்கு விண்ணப்பித்து தேவையான உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
காணாமல்போனவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதால் ஒரே நிலைப்பாட்டிலிருந்தே கலந்துரையாடுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனினும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான பிரச்சினைகள் பல நாடுகளிலும் நடந்துள்ளன. இதனை நாங்கள் தொடர்ந்து இழுத்துக்கொண்டிருக்க முடியாது. மாறாக, ஒரு முடிவுக்கு வர வேண்டும். இராணுவத்தினரும் காணாமலாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்வை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும், இதனை குறித்த உறவுகளால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பது குறித்த வருத்தம் எங்களுக்கு தெரியும். எனினும், இதற்கு ஒரு முடிவு வர வேண்டியுள்ளது.
கேள்வி: உள்ளகப் பிரச்சினைக்கு சர்வதேச பொறிமுறை வேண்டாம். உள்ளகப் பொறிமுறையே போதும் என ஜனாதிபதி கூறினாலும் தமிழ்த் தரப்புகளுடன் அரசு பேசுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்புள்ளதா?
சில மாதங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் கொவிட் தொற்றினால் அது ஒத்திவைக்கப்பட்டது. எனினும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேவையொன்றும் உள்ளது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
கேள்வி: புதிய அரசியலமைப்பு பற்றி?
பதில்: புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகள் அவர்களின் பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. குறிப்பாக, குறித்த குழுவினால் அனைத்து கட்சிகளுக்கும் தங்களுடைய யோசனைகளை முன்வைப்பதற்கு வாய்ப்பளித்தது. அதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்களுடைய யோசனையை முன்வைத்துள்ளது. அனைவரின் யோசனைகளையும் முன்வைத்து சிறந்த அரசியலமைப்பை உருவாக்குவதே எங்களுடைய நோக்கமாகும்.
கேள்வி: சிறைச்சாலைகளில் இதுவரை எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர்?
பதில்: அரசியல் கைதிகள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களாகவே அடையாளப்படுத்த முடியும். அதன்படி, இதுவரை 26 பேர் இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: அநுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியை இராஜாங்க அமைச்சர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சர் என்ற ரீதியில் அங்கு என்ன நடத்திருக்கும் என விளக்கமாகக் கூற முடியுமா?
பதில்: அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. அது தொடர்பாக நான் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. சம்பவம் நடந்தது உண்மை. இதனால் இது குறித்து மூன்றுக் குழுக்களால் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, புலனாய்வுத் துறையினால் ஒரு விசாரணையும் எச்.ஆர்.சியினால் சுயாதீனமான விசாரணையும் நடத்தப்படுகின்றன.
இதேவேளை, அமைச்சரவையின் அனுமதியுடன் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையிலும் ஒரு விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விசாரணைகளுக்கு பின்னரே என்ன நடந்தது என்பது தெரியவரும். எனினும், சம்பவம் நடந்தது என்பது உண்மை. எனினும், இதனை தமிழர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக என்ன நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் கொழும்பு சிறைச்சாலைக்கும் சென்றுள்ளனர். ஆனால், இந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, சிறையிலுள்ள தமிழ்க் கைதிகளுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. ஒருவேளை, அநுராதபுர சிறைச்சாலையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் வேறு இடத்திற்கும் மாற்ற முடியும்.
கேள்வி: அநுராதபுர சிறையிலுள்ள தங்களை யாழ். சிறைக்கு மாற்றுமாறு அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை நீங்கள் கனத்தில் எடுத்துள்ளீர்களா?
ஆம். அது தொடர்பாக ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றோம். எனினும், யாழ். சிறைக்கு மாற்றுவதால் அங்கு சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, தற்போது இதனை பிரச்சினையாக்குவதற்கு விரும்பவில்லை. யாழ். சிறைக்கு அனுப்புதல் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக கைதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராகவுள்ளோம்.
கேள்வி: நாட்டில், சீனாவின் அபிவிருத்திகளுக்கு மத்தியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளீர்களா?
பதில்: இலங்கையில் மூன்று மொழிகளே உத்தியோகபூர்வமான மொழிகளாகும். அதில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் தேசிய மொழிகளாகும். ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் உள்ளது. இந்த மூன்று மொழிகளுக்கு அப்பாலே ஏனைய மொழிகள் இணைக்க வேண்டும். எனினும், எல்லா இடங்களிலும் மொழி புறக்கணிக்கப்படவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவ்வாறு நடந்ததும் உடனடியாக மாற்றப்பட்டது. தவறுகள் நடந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். (நன்றி:- வசந்தம் டி.வி.) தமிழன் பத்திரிகை 26-9-21