கொரோனா வைரஸ் தொடர்பாக,அதனை சூழ்ந்துள்ள மர்மமும் நிச்சயமற்ற தன்மையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து இப்போதுவரை டித்து செல்கிறது.இந்த தொற்று நோய் குறித்து பல கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.ஆனால் உண்மையில் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு,அதனை உடனடி அச்சுறுத்தலாகப் பார்ப்பதை விட, சாதாரண காய்ச்சலுக்கு இணையான வழக்கமான தொற்று நோயாக பார்க்கப்படும் தன்மை ஏற்படவேண்டும்.
உலகில் தடுப்பூசி போடப்பட்ட பகுதிகளில் வாழ்வோர் உளரீதியாக தங்களை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, கோவிட் 19 ஆனது அழிவை ஏற்படுத்தமாட்டாது எனவும் மாறாக படிப்படியாக ஒரு வைரஸ் ஆக மாறி வருகிறது என்பதையும் நினைவூட்ட வேண்டும். தடுப்பூசி வழங்கும் திட்டங்களில் முன்னேறியுள்ள சில நாடுகள் இப்போது சாதாரண தொற்று நோய் பீடித்தால் கடைப்பிடிக்கும் சிகிச்சை முறைமைக்கே மாறியுள்ளதாக அறிய வருகிறது.
சிங்கப்பூரில் பொதுமக்களில் ,81% பேர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில்,அந்நாட்டு சுகாதார அமைச்சு நோய்த் தொற்றுகளுக்கு பதிலாக மருத்துவமனையில் சேர்க்கும் தரவுகளுக்கே முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளது.ஏனெனில் பெரும்பாலான தொற்றுகள் இப்போது ஒப்பீட்டளவில் தீங்கற்றவையாக கணிக்கப்படுகின்றன. பெரும்பாலான நோய்த் தொற்றுகள் இனிமேல் கடுமையான நோயை ஏற்படுத்தாது என்பதால்,புதிய தொற்றுகள் அதிகரித்து வருகின்ற போதிலும் தடுப்பூசி போடப்பட்ட பகுதிகளை இஸ்ரேல் முடக்கி வைக்கவில்லை.
இந்த கோவிட் 19 சாதாரண தடிமன் அல்லது காய்ச்சல் போன்ற வழக்கமான நோயாக மாறுகின்ற சகல சாத்திய கூறுகளும் இருப்பதாக வைரலாஜிஸ்டுகளும் தொற்று நோயியல் நிபுணர்களும் கூறுகின்றனர்.இது மருத்துவர்களுக்கு இருமல், காய்ச்சல் அல்லது மூச்சடைப்பு ஏற்படக்கூடிய பல காரணங்களில் ஒன்றாக சிகிச்சையளிக்க வேண்டிய மற்றொரு நோயாக மாறுமெனவும் கூறப்படுகிறது.
அதாவது ஆட்கள் தொடர்ந்து தடுப்பூசி பெற வேண்டிய மற்றொரு நோயாக இது மாறும்.ஆயினும் பல நாடுகளில் டெல்டா உருத்திரிபின் கொடூரமான பரவலால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. ஆயினும் மறுபுறம் டெல்டாவானது உலகை வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை நோக்கி நகர்த்துகிறதென்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் . ஒவ்வொரு புதிய நோய்த் தொற்றிலும் இது ஒரு உருத்திரிபை பாதுகாப்பாக வைத்திருக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றது.அத்துடன் அது இன்னும் வேகமாக பரவி, அதிக உக்கிரத்துடன் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்துகிறது அல்லது தடுப்பூசிகளைத் தவிர்க்கிறது.
எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது மற்றும் ,எவ்வளவு விரைவாக போடப்படுகிறது என்பதைப் பொறுத்தே கோவிட் 19 அந்த நிலையை அடையும். கோவிட் 19 இலேசானதாக மாறுவதற்கு ,பெரும்பாலான ஆட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படும்.நோயின் தீவிரத்தை இது குறைக்கிறது என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றுகள் சில நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டால் அல்லது பலவீனமாக இருந்தால் அல்லது வைரஸ் பிறழ்வடைந்தால் ஆட்கள் சார்ஸ் சி .ஓ வி 2 வினால் பாதிக்கப்படக்கூடுமென கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் கோவிட் 19 காய்ச்சலை விட குறைவான தாக்கத்துடன் இருக்கலாம்.காய்ச்சல்ப்ளூ உலகில் வருடாந்தம் 5 இலட்சம் பேரை கொல்கிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் கோவிட் 19 தடுப்பூசிகள் காய்ச்சல் தடுப்பூசிகளை விட சிறந்தவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயதானவர்கள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் போன்ற பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த நோய் இன்னும் தீவிரமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வைரஸ் பரவுவதை நிறுத்த, தொற்று நோயால் பாதிக்கப்படக் கூடிய மக்கள் குறைவாக இருக்க வேண்டும். இதுவொரு நீண்ட தூரப் பயணமாக உள்ளது.உலகின் 780கோடி மக்களில் சுமார் 230 கோடிப் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை தளமாக கொண்ட‘அவர் வேர்ல்ட் இன் டேட்டா’ நம் உலகத் தரவு தெரிவித்திருக்கிறது.கொரோனாவால் சுமார் 110 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென தொற்று நோயியல் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இன்றைய குழப்பங்களுக்கு மத்தியில் பல பிராந்தியங்களில், உள்நாட்டு மோதலும் சமத்துவமின்மையும் நோய்க் கிருமியை பரப்ப உதவுகிறது.மாறுபட்ட பிணைப்புகளை கொண்ட வைரஸ் மேலும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் நீடிக்கும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை தொற்று நோய் தொடர்பான சோர்வுவால் அதிகளவானோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதிலும் சந்தேகம் இல்லை. இதேவேளை,இலங்கையின் சனத்தொகையில் 50% துக்கு மேற்பட்டோருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன், இளைய சமூகத்தினருக்கும் ஊசி போடப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தத்தக்கது. ஆயினும் கொரோனா வைரஸின் டெல்டா , பீட்டா ,அல்பா வென்ற புதிய, புதிய உருத்திரிபுகளுடன் மியூர்கோமைகோசிஸ்’ என்று பெயரிடப்பட்ட கறுப்புபூஞ்சை’ ‘பிளாக் ஃபங்கஸ்’ தொடர்பாக இப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது கண்கள் மற்றும் மூளையை சேதப்படுத்துமெனவும் உடனடி மருத்துவ உதவி கிடைக்கவில்லையெனில் பார்வை இழப்பு ஏற்படும் என்றும் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசக மருத்துவர் டாக்டர் பி ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 12 பன்னிரெண்டு கோவிட் 19 நோயாளிகளுக்கு கறுப்புபூஞ்சை’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் தற்போது கோவிட் 19 தொற்றுக்கள் தினசரி 2,300 ஆக காணப்படுகிறது .சுகாதார முறைமையால் இது சமாளிக்க முடியாதது என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்ததுடன்,
”நாட்டில் 100 முதல் 200 தொற்றுகள் மட்டுமே பதிவாகியிருந்த காலமும் இருந்தது. இயல்பு நிலையைத் தழுவுவதற்கு அந்த நிலைவரத்தை நாம் அடைய வேண்டும்,என்று கூறியிருக்கிறார்.தடுப்பூசி போடுவதன் மூலமும் சுகாதார விதிமுறைகளைகளைப் பின்பற்றுவதன் மூலமும் மட்டுமே திருப்திகரமான நிலையை அடைய முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் திரும்பத்திரும்ப கூறிவரும் நிலையில் அந்த நிலையை எட்டுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியம்.
(Thinakkural 18-9-21)