கொரோனா தொடக்க காலத்தில் நாம் அதனைத் துரத்தியடித்து விட்டடோம்.வல்லரசுகளால் கூட பண்ண முடியாத கெட்டித்தனத்தை நாம் சõதித்து விட்டோம் என்று நாட்டுக்கு அரசியல்வாதிகள் கதை சொல்லிக் கொண்டிருந்த காலமும், கொரோனா நாட்டுக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த நேரம் கடவுளே எம்மைக் காப்பாற்று என்று ஓலமிட்டு ஆற்றில் சட்டி முட்டி பூசை செய்ததும், காளி அம்மாள் பெயரில் பாணி குடிக்க மக்கள் முண்டியடித்ததும் அதற்காக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பாரிய விளம்பரங்கள் கொடுத்ததும் இதே நாட்டில்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த கதைகள்
தற்போது இந்தக் கொரோனா பற்றி சுருக்கமாக பார்த்து விட்டு தலைப்புக்குள் வரலாம் என்று தோன்றுகின்றது. கொரோனா தடுப்பூசியில் பக்க விளை வுகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக சிறுவர்களுக்கும் கர்ப்பினித் தாய்மார்களுக்கும் அதனை ஏற்றுவதில் சிக்கல்களை எதிர் காலத்தில் நாடு சந்திக்க இருக்கின்றது என்று வைத்தியர்கள் ஊடகச் சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.வைத்திய தரப்புக்குள்ளும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்து கிடையாது.இந்த முன்னுக்குப் பின்னான கருத்துக்களினால் இன்று நாடு குழம்பிப் போய் இருக்கின்றது.மக்கள் செய்வதறியாது திண்டாடுகின்றார்கள்.
இதற்கிடையில் நாட்டை திறந்து விட காலம் கனிந்துவிட்டது என்ற தோரணையில் ராஜாங்க அமைச்சரும் வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்ணாந்து புள்ளே சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு செய்தி செõல்லி இருந்தார்.இந்த முறை நாட்டை முடக்கியதால் பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் வைத்தியத் துறையினர் கருத்துக் கூறி வருகின்றார்கள்.மீண்டும் நாட்டைத் திறந்து விட்டால் பல்லாயிரம் உயிர்கள் பலியாக வாய்ப்பு ஏற்பட இடமிருக்கின்றது என்றும் ஒருவர் தர்க்கம் புரிய நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. கொவிட் விவகாரம் அப்படி இருக்க கப்ராலும் கறுப்புக் காசும் பற்றி இப்போது பார்ப்போம்.எமது வார்த்தைகள் ஆட்டுக் குட்டியும் ஓநாயும் கதைபோல் இருக்கின்றதோ என்று யாராவாது யோசித்தால் அதில் குறைகள் கிடையாது என்றுதான் நாம் நினைக்கின்றோம்
இப்போது கப்ராலும் கருப்புக் காசும் கருவுக்கு வருவோம். பியகம அச்சு இயந்திரத்தால் பணத்தை அச்சடித்துக் குவிப்பதால் பண வீக்கம் ஏற்படும் என்று நான் கருதவில்லை.இப்படி உலகில் பல நாடுகள் செய்து வரும் போது நாம் மட்டும் செய்தால் என்ன என்று சொன்னவர் தான் தற்போது மத்திய வங்கி ஆளுநராக பதவி ஏற்று இருக்கின்ற அஜித் கப்ரால் என்பவர்.இந்த அஜித் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக இருக்கும் போது பல தவறுகளை செய்திருக்கின்றார் என்றும் குற்றச்சõட்டுக்கள் இருந்து வருகின்றன.
பதவியில் இருந்த மத்திய வங்கி ஆளுநர் ஓய்வு பெறுவதால் அஜித் கப்ரால் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவரது நியமனம் பல்வேறு மட்டங்களில் விமர்சனத்துக்கு இலக்காகி இருந்தாலும் ஆளும் தரப்பினர் தமக்கு ஏற்ற விதமாக இதன் பின்னர் மத்திய வங்கி செயல்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்ற விடயத்தில் மிகவும் உற்சாகமாக இருப்பது தெரிகின்றது. இதற்கிடையில் நிதி அமைச்சர் பசில் நாடு மிகுந்த நெருக்கடியான நிலையில் இருப்பதை நாடாளுமன்றில் சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருந்தார். எனவே நிதி அமைச்சராக பசில் பதவி ஏற்றதால் மக்களுக்கு நிறையவே நன்மைகள் நடக்க இருக்கின்றது என்று ஆளும் தரப்பு சொல்லி வந்த கதைகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்பது மிகத் தெளிவாகி இருக்கின்றது.
இந்த அஜித் நிவாட் கப்ரால் யார் என்று சற்றுப் பார்ப்போம். தென் பகுதியில் கடும் போக்கு அரசியல்வாதி ரோஹன விஜேவீர பிறந்த தங்காலை மண்தான் கப்ராலுக்கும் பிறப்பிடம். 1954ல் பிறந்த இவர் தற்போது பதினாறாவது மத்திய வங்கி ஆளுநராக பதவி ஏற்று இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக மேல் மாகாணசபை உறுப்பினராக (1999 – 2004) இவர் அரசியலுக்கு நுழைந்தார்.தற்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்ஸாக்களுக்கு மிகவும் வேண்டியவராக இருந்ததால் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்பட்டு இராஜாங்க அமைச்சு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.புனித. பீற்றர் மற்றும் புனித.செபஸ்டியன் கல்லூரிகளின் பழைய மாணவர் இவர். தொழில் ரீதியில் ஒரு பட்டயக் கணக்காளர்.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சட்டக் கல்லூரி மாணவனாகவும் கப்ரால் பட்டயக் கணக்காளராக படித்துக் கொண்டிருந்த போது இருவருக்கு மிடையே முதல் சந்திப்பு கொழும்பில் நடந்தது.இன்று இருவரும் ஒருவருக்கு ஒருவர் வேண்டியவர்களாக இருந்து வருகின்றார்கள்.கப்ரால் இதுவரை இலங்கையின் பொருளாதாரம் குறித்து மூன்று நூல்களை எழுதி இருக்கின்றார். அஜித் கப்ரால் பற்றி பார்த்த நாம் இப்போது பதவி துறக்கின்ற பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டி இருக்கின்றது.
80 வயது நிரம்பிய லக்ஷ்மன் ஊடக சந்திப்பில் கண்ணீர் மல்க மனச்சாட்சிப்படி தன்னால் இதன் பின்னரும் இங்கு தொடர்ந்தும் பணியாற்ற வாய்ப்பு இல்லை.எனவே நான் ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது என்று அவர் கூறி இருந்தார். அனேகமாக தற்போது மத்திய வங்கி ஆளுநராக நியமனம் செய் யப் பட்டிருக்கின்ற கப்ரால் இராஜாங்க அமைச்சரால் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் தான் அவர் பதவி விலக முக்கிய காரணம் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த அரசாங்கத்தில் பதவியேற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே பதவிகளை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் அப்போதைய பிரதமர் ரணில் கொண்டு வந்து சேர்த்த அர்ஜூன் மகேந்திரன் காலம் மிகவும் மோசமானதாக இருந்தது. ஆனால் அதனை விட மோசமான ஒரு காலப் பகுதியாக இந்த முறை கப்ரால் வருகை அமையலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும் பொருளாதார நெருக்கடி வருகின்றது என்று நிதி அமைச்சர் பசில் பகிரங்கமாக தற்போது ஏற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக பதவி ஏற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக இருந்த காலங்களில் ஊழியர்களின் சேமலாப நிதியத்திலிருந்து பெரும் தொகையான பணம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டிருக்கின்றது என்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கருப்புப் பணம் சுத்தம் செய்யப்படுகின்ற ஒரு இடமாக நமது நாடு மாறி இருப்பது பற்றிப் பார்ப்போம்.கடந்த ஏழாம் திகதி நிதி அமைச்சர் பசில் கருப்புப் பணம் துப்புரவு செய்வது தொடர்பாக ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கின்றார் என்று சாடுகின்றார் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க. அவர் தருகின்ற தகவல்கள் பற்றி சற்றுப் பார்ப்போம்.முதலில் கருப்புப் பணம் என்றால் என்ன என்று பார்ப்போம்.குறுக்கு வழிகளில் சம்பாதிக்கப்பட்ட கோடிக் கணக்கான பணம் தான் கருப்புப் பணம் என்பதற்கு சுருக்கமான விளக்கம்.
அதனை இன்னும் மக்களுக்கு விளக்குவதாக இருந்தால் போதை வியாபாரம், கள்ளத் தனமான ஆயுத விற்பனை,தடை செய்யப்பட்ட கருக் கலைப்பு மருந்து போன்றவற்றை விற்பனை செய்து பல ஆயிரம் கொலைகளை செய்து உழைத்து சேர்த்த பணம், அரச நிறுவனங்களில் முறை கேடாக கையாடிய பணம், அபிவிருத்தி பணிகளில் பெறப்பட்ட கோடிக் கணக்கான கமிஷன் பணம்,முறை கேடாக வியாபார ஒப்பந்தங்களைச் செய்து தரக் குறைவான பொருட்களை சந்தைப்படுத்திப் பெறப்பட்ட பணம் போன்றவை இதில் அடங்குகின்றன. அனுரகுமாரவின் கருத்துப்படி கோடிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் தான் இப்படியாக பணம் சம்பாதிக்க முடியும்.அல்லது அரசியல் அதிகாரத்தை வைத்தும் இப்படி சட்ட விரோதமாக பணம் சேர்க்க முடியும்.அப்படிச் சம்பாதித்த பணத்தை சுத்தம் செய்வதற்காகத் தான் பசில் ஒரு சட்டத்தை சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றி இருக்கின்றார்
சாதாரணமாக ஒரு கிராமப்புற விவசாயியோ, ஒரு அரச ஊழியரோ, இளைஞர்களோ, சிறு வியாபாரியோ இப்படிக் கணக்குக் காட்ட முடியாத பணத்தை சேர்த்து வைத்திருக்க முடியாது. மேற்செõன்ன வகையில் பணம் சேர்த்தவர்கள் தான் அதனை எப்படி சம்பாதித்தோம் என்று அரசுக்கு கணக்கு காட்ட முடியாது.அப்படிப்பட்ட பணத்தை சுத்தமாக்கிக் கொள்ள ஒரு சதவீத அரசு வரியுடன் அந்தப் பணத்தை முதலீடு செய்யவோ வங்கியிலிடவோ முடியும் என்பதுதான் இந்த சட்டத்தில் பசில் வழங்கி இருக்கின்ற சலுகை. பெரும் போதை வியாபாரிகளாக இருந்து இன்று இறந்து போன பொட்ட நௌபரோ, வெலே சுதாவோ தமது பணத்தை இந்த சட்டத்தின் மூலம் சுத்தம் பண்ணிக் கொண்டிருக்க முடியும். அதற்கான வாய்ப்பைத் தான் இந்த சட்டம் இவர்களுக்கு வழங்கி இருக்கின்றது.
இன்று நமது நாடு கருப்புப் பணத்தை சுத்தம் செய்கின்ற ஒரு தேசமாகத்தான் உலகில் உள்ளவர்கள் நம்மைப் பார்ப்பார்கள். நாம் உலகில் ஏதாவது ஒரு நாட்டில் போய் இறங்கி எமது கடவுச் சீட்டை ஒருவரிடம் காண்பித்தால் கறுப்புப் பணம் சுத்திகரிக்கின்ற ஒரு நாட்டில் இருந்து இவன் வந்திருக்கின்றான் என்பதை அடுத்தவர் பார்த்துவிட்டு முகத்தை சுளித்துக் கொள்வார்கள் என்றும் கூறுகின்றார் அணுரகுமார திசாநாயக்க.இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது ஆளும் தரப்பிலுள்ளவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு இதற்கு கை தூக்கியதும் இப்படிப் பட்ட பணம் அவர்களில் பெரும்பாலானவர்களிடம் இருப்பது முக்கிய காரணமாகும் என் பது அவர் வாதம்
இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் இருந்த போதும் இப்போதும் இப்படி பெரும் எண்ணிக்கையானவர்கள் பணம் சம்பாதித்திருக்கின்றார்கள். குறிப்பாக அதிவேக நெடுஞ் சாலைகள்.சங்கரிலா ஹோட்டல், ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி வேலைகள் என்று பட்டியலிட்டுக் காட்டி இருக்கின்றார் அனுர. சில அரசியல்வாதிகளின் பெயரைச் சொல்லியே அனுர குற்றம் சõட்டி வருகின்றார்.இப்படிப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்போர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறையவே இருக்கின்றார்கள். வெளிநாட்டுக்காரர்களும் தமது நாடுகளில் இப்படி சட்ட விரோதமாக உழைத்த பணத்தை இங்கு எடுத்து வந்து சுத்தம் செய்து கொள்ளவும் முடியும் என்று நாம் நினைக்கின்றோம். எனவே ஒட்டு மொத்த நாடும் கள்வர்களின் குகை என்ற நிலையில் இருக்கின்றது. –நஜீப் பின் கபூர்- (தினக்குரல் 18-9-21)