தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சர்

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 12 ஆம் திகதி அநுராதபுரத்திற்கு வந்திருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அன்றைய தினம் இரவு ஏழு மணியளவில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதுடன் அங்கிருக்கும் தமிழ் சிறைக் கைதிகள் 12 பேரை வெளியில் எடுத்து அச்சுறுத்தியுள்ளதுடன் வவுனியா நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள கைதி ஒருவரது நெற்றியில் கைத்துப்பாக்கியினை வைத்து அச்சுறுத்தியுள்ளதாகவும் இதன்போது ரோஹண பண்டார தெரிவித்தார்.

அச்சந்தர்ப்பத்தில் அவர் மது போதையில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.அச்சந்தர்ப்பத்தில் சிறைக் கைதி கைத் துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தால் நிலமைகள் பாரதூரமானதாக மாறியிருக்கும் அதற்கு அமைச்சர் பொறுப்புக் கூறுவாரா?

இவ்வாறு இரவு நேரத்தில் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிவதன் பின்புலம் என்ன ? நாட்டில் காட்டுச் சட்டமா உள்ளது. ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களை அவரால் கட்டுப்படுத்த முடியாதா? இப்படி சென்றால் நாடு எங்கே செல்கின்றது.சட்டம் ஒன்று இருக்கின்றதல்லவா இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுப்பதாக ரோஹண பண்டார மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அநுராதபுரம் சிறைச்சாலையின் உயர் அதிகாரியொருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டபோதும் அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடிய வில்லை.

இதற்கிடையில், அந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது நண்பர்களுடன் குடிபோதையில் இருந்த நிலையில், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. (தினக்குரல் 15/9/21)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter