அரசியலமைப்புக்கோ மக்களுக்கோ எதிரான தவறு கடுகளவேனும் எம்மால் ஏற்பாடாது – அலி சப்ரி

அனைத்து இன மக்களும் அச்சம் சந்தேகம் இன்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதே எனது நோக்கம். அதற்கு தேவையான சட்டம் ஒழுங்கை ஏற்படுத்துவேன். அதேபோல் நாட்டின் அரசியலமைப்புக்கோ மக்களுக்கோ எதிரான தவறு கடுகளவேனும் எம்மால் ஏற்பாடாது என்ற உறுதியையும் வழங்குகின்றேன் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

நீதி அமைச்சில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியலமைப்புக்கோ மக்களுக்கோ எதிரான தவறு கடுகளவேனும் எம்மால் ஏற்பாடாது. அவ்வாறு எதுவும் ஏற்பட்டால் அது மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களே இடம்பெறும் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.  நீதி அமைச்சு என்பது மிகவும் பாரிய பொறுப்பு என்பதை நான் நன்கறிகின்றேன். எங்களுக்கு பாரிய சவால்கள் இருக்கின்றன. அவற்றை வெற்றிகொள்ளவேண்டி இருக்கின்றன. அந்த சவால்களை வெற்றிகொள்ளவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் இந்த அமைச்சை எனக்கு வழங்கி இருக்கின்றார்.

அத்துடன் ஜனாதிபதி என்னை அழைத்து, நீ இந்த துறையை சேர்ந்தவன். இந்த துறையில் இருக்கும் குறைகள் உங்களுக்கு தெரியும். அதனால் தயவுசெய்து இந்த பொறுப்பை ஏற்று இந்த விடயங்களை செய்துதாருங்கள். அதற்கான பூரண ஒத்துழைப்பை நான் தருகின்றேன் என தெரிவித்தார். அதனால் இந்த அமைச்சை பொறுப்பெடுத்திருக்கும் எனக்கு இருக்கும் சவால்கள், சாதாரண கோரிக்கைகளை அடைந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சவால் அல்ல. 

எமது நாட்டில் இரண்டு மணித்தியாலத்துக்கு ஒரு பிள்ளை என்ற அடிப்படையில் சிறுவர்  துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றது. அதேபோன்று போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் கண்டுபிடிக்கப்படும் இடத்தில் இருந்தே அது காணாமல் பாேகின்றது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான அதிகாரிகளிடமிருந்தும் தவறுகள் இடம்பெற்றிருப்பதை சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டவர்களை சிறைச்சாலையில் அடைத்தால், சிறைச்சாலைக்குள் இருந்தும் போதைப்பொருள் வியாபாரத்தை சுதந்திரமாக மேற்கொள்கின்றார்கள். போதைப்பொருட்களை பகுப்பாய்வு செய்வததற்கு பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பினால், அங்கும் வியாபாரம் இடம்பெறுகின்றது. 

இந்த நிலையில் இருந்து நாங்கள் மீளவேண்டும். இந்த விடயங்களில் இருந்து மீண்டு நாட்டு மக்கள் அனைவரும் அச்சம், சந்தேகம் இல்லாமல் வாழக்கூடிய நாட்டை ஏற்படுத்தவேண்டும்.   இந்த சவால்களை வெற்றிகொள்வதே எனது குறிக்கோளாகும்.

அதபோன்று வழக்குகள் நீண்டகாலத்துக்கு இழுபட்டு செல்வது மக்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு பாரிய பிரச்சினையாகும். அதனால் இந்த விடயங்கள் தொடர்பாக அனைவருடனும் கலந்துரையாடி, இரண்டு வாரங்களுக்குள் ஒரு பொறிமுறையொன்றை தயாரித்து எமது வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றேன் என்றார்.  Posted in:

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter