ரம்ஸி ரஸீக்கிற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கோஷம்!

சமூகவலைத்தள செயற்பாட்டாளராக ரம்ஸி ரஸீக் கைது செய்யப்பட்டு சுமார் 120 நாட்களுக்கும் அதிகமான காலம் விசாரணைகளின்றித் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் நிபந்தனைகள் எவையுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற அவருக்கு ஆதரவான கோஷம் சமூகவலைத்தளங்களில் வலுத்திருக்கிறது.

சமூகவலைத்தள செயற்பாட்டாளரான ரம்ஸி ரஸீக்கின் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்டு, எவ்வித நிபந்தனைகளுமின்றி அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டிருந்தது. 

அவர் முறையாக சட்டத்தரணியொருவரின் உதவியை நாடுவதற்கும், உறவினர்களுடன் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய மன்னிப்புச்சபை, அவர் பல்வேறு நோய்நிலைமைகளைக் கொண்டிருப்பதால் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளற்ற சிறைச்சாலை சூழலினால் அவருக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் ரஸீக்கின் குடும்பத்தினால் கவலையடைந்துள்ளதாகவும், எனவே அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.  

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரும் சமூகவலைத்தள செயற்பாட்டாளருமான ரம்ஸி ரஸீக்கினால் அவரது பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்ட பதிவொன்றுக்காக, அவர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோஷம் சமூகவலைத்தளங்களில் வலுத்துவருகின்றது. ரம்ஸி ரஸீக்கின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை இயக்கம் என்ற அமைப்பு அதன் பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:

நீரிழிவு, மூட்டுவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ரம்ஸி ரஸீக் 120 இற்கும் அதிக நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் சுயமாக நடப்பதற்குக்கூட இயலாத நிலையிலிருப்பதாகவே அவருடைய சகோதரர் தெரிவித்திருக்கிறார். ரம்ஸி ரஸீக் உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.

எம்மில் பலரும் அரசியல் பதிவொன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக இருமுறை சிந்திப்பதில்லை. ஏனெனில் எம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்துவது எமது அடிப்படை உரிமையாகும். ரம்ஸியும் அதனையே செய்தார். அவர் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காகவே தனது பேனையையும் கணினியின் தட்டச்சுப்பலகையையும் பயன்படுத்தினார். 

அவர் தனது அடிப்படை உரிமையைப் பயன்படுத்தியமைக்காக உயிர் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளானார். அதற்காக அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக அவர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களாகிய நாம் ரம்ஸி ரஸீக்கின் குடும்பத்தாரின் பதற்றத்தினை இங்கு பதிவுசெய்வதுடன், நிபந்தனைகள் எவையுமின்றி அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter