(வீடியோ) தலிபான்களால் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வலுப்பெறும்! ஞானசார தேரர் தெரிவிப்பு

ஆப்கானிஸ்தானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தலிபான் அமைப்பினால் இலங்கையில் 70 சத வீதம் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படையாத அமைப்புக்கள் வலுப்பெறும். தப்லீக் ஜமாத் அமைப்பை அரசாங்கம் தடை செய்வதுடன், இஸ்லாமிய அடிப்படையாத கொள்கையுடைய அமைப்புக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முற்றாக இல்லாமல் போயுள்ளது என்று ஒருபோதும் கருதக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று (01) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பு மீண்டும் ஆட்சியதிகாரத்தை போராட்டத்தின் ஊடாக கைப்பற்றியுள்ளது. தலிபான்கள் இறுக்கமான மத கொள்கையையும் மதத்தின் பெயரில் அடிப்படைவாத செயற்பாடுகளிலும் ஈடுபடுவர்கள்.

இறுக்கமான மத கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அந்நாட்டு மக்கள் அபாயகரமான நிலையில் நாட்டை விட்டு வெளியேறுவதனை அவதானிக்க முடிகிறது. தலிபான் அமைப்புக்களின் மீள் எழுச்சி இலங்கையில் தற்போது 70 சத வீதமளவில் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு சாதகமாக அமையும்.

தலிபான் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கபட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையிலும் உள்ளன. குறிப்பாக தப்லீக் ஜமாத் அமைப்பை குறிப்பிட வேண்டும். இந்த அமைப்பை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும்.அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடைய அமைப்புக்கள் குறித்தும் அதிக கவனம்செலுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் வாழும் சுதேச பாரம்பரிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைக்கும், மதத்தின் பெயரை குறிப்பிட்டுக் கொண்டு தவறான புரிதல்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் தலைமைகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறித்து முதலில் முஸ்லிம் மக்கள் ஒரு தீர்வை எடுக்க வேண்டும் என்றார்.

(இராஜதுரை ஹஷான்) – மெட்ரோ நியூஸ்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter