ஜோ பைடன் சீனா மீது விமர்சனம்
கொரோனா தொற்றின் தோற்றம் பற்றி தீர்மானம் ஒன்றுக்கு வராத அமெரிக்க உளவுத் துறையினர் அது ஆய்வுகூடத்தில் இருந்து கசிந்ததா அல்லது இயற்கையில் இருந்து உருவானதா என்பது பற்றி தமக்குள் பிளவுபட்டு காணப்படுகின்றனர்.
இந்த நோய்த் தொற்று தொடர்பில் அமெரிக்காவின் 18 உளவுப் பிரிவுகள் மேற்கொண்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்த வைரஸ் உயிரியல் ஆயுதம் ஒன்றாக உருவாக்கப்பட்டதா என்பது பற்றியும் தீர்மானம் ஒன்றுக்கு வரத் தவறியுள்ளது.
வைரஸ் தொற்று எவ்வாறு ஆரம்பித்தது என்பது பற்றிய ஆதாரங்களை சேகரிப்பதற்கான கால அவகாசம் தீர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் இந்த அறிக்கை விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சீன வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது.
கொவிட் தொற்றின் சாத்தியமான பூர்வீகம் தொடர்பில் உளவுப் பிரிவினரிடையே பிளவு காணப்படுகிறது என்று தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பெயர் வெளியிடப்படாத பல உளவு நிறுவனங்களும், ‘தொற்றுக்கு உள்ளான விலங்கு அல்லது வைரஸின் நெருக்கமான முன்னோடி மூலம் இந்த வைரஸ் இயற்கையாக வெளிப்பட்டிருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளன. எனினும் அவை இது பற்றி நிச்சயமற்ற தீர்மானம் ஒன்றுக்கே வந்துள்ளன.
எனினும் முதல் நோய்த் தொற்றுக்கு உள்ளான மனிதன், வூஹான் நச்சுயிரியல் நிறுவன ஆய்வுகூட சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு உளவு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வுகூடத்தில் ஒரு தசாப்பதத்திற்கு மேலாக வெளவால்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின், அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காத சீனா மீது விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.
‘இந்த பெருந்தொற்றின் பூர்வீகம் பற்றிய தீர்க்கமான தகவல் சீனாவில் உள்ளது. சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் உலக பொது சுகாதார சமூகம் அது பற்றி ஆய்வு மேற்கொள்வதை சீன அரச அதிகாரிகள் ஆரம்பத்தில் இருந்து தடுத்து வருகின்றனர்’ என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.
‘அதற்கான பதிலை பெறுவதற்கு உலகுக்கு உரிமை இருப்பதோடு அதனை பெறும் வரை நாம் ஓயமாட்டோம்’ என்றும் அவர் சூழுரைத்தார்.
சீனாவில் வூஹான் நகரில் 2019 இறுதியில் ஆரம்பித்த கொரோனா தொற்றினால் தற்போது உலகெங்கும் 4.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்றின் பூர்வீகம் பற்றி உலக சுகாதார அமைப்பின் குழு ஒன்று இந்த ஆண்டு ஆரம்பத்தில் விசாரணை ஒன்றை நடத்தியதோடு, சந்தை ஒன்றில் விற்கப்பட்ட விலங்கில் இருந்து இந்த நோய் பரவி இருக்க சாத்தியம் இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. இந்த முடிவை சில விஞ்ஞானிகள் நிராகரித்திருந்தனர். இந்த வைரஸ் தொற்று பற்றி விசாரணை ஒன்றை நடத்த ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க உளப்பிரிவுகளுக்கு கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தார்.
மறுபுறம் அமெரிக்க இராணுவத் தளமான போர்ட் டிஸ்ட்ரிக்கில் இருந்து இந்த வைரஸ் பரப்பப்பட்டதாக சீனா குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வைரஸின் பூர்வீகம் பற்றி ஆதாரங்களை சேகரிக்கும் சாத்தியம் விரைவில் முடியமால்போகலாம் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் எச்சரித்திருந்தது.
‘இந்த தீர்க்கமான விசாரணையை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தின் வாயில் வேகமாக மூடப்பட்டு வருகிறது’ என்று எச்சரித்த அந்த அமைப்பு ஆய்வுகளை விரிவுபடுத்த ஆய்வாளர்கள் மற்றும் அரசுகளுக்கு அழைப்பு விடுத்தது.
– தினகரன் –