அரசு நிராகரித்ததே தினமும் 200 மரணத்துக்கு காரணம்

தடுப்பூசிகளை வழங்கும் எமது பரிந்துரையை அரசு நிராகரித்ததே தினமும் 200 மரணத்துக்கு காரணம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் விசனம்

நாட்டில் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும் இதுவே நாளாந்த மரணம் 200 ஆக உயர்வடைவதற்கு காரணம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வாசன் இரத்தின சிங்கமே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்றின் நிலைமை காரணமாக நாட்டை முடக்கி அதனை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏற்படும் மரணங்களை தடுக்க தடுப்பூசிகள் மூலம் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி வழங்குவதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் கருதுகின்றது.

தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதிக்கும் எங்களின் பரிந்துரைகளை வழங்கியிருந்தோம். அந்த பரிந்துரைகளை செயற்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார். தற்போது கொரோனா தொற்றால் இறப்பவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாகும். இப்போது மரண எண்ணிக்கை அதிகரிப்பதுடன் , இது நாளாந்தம் 200 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு உயிரிழப்பவர்களில் அதிகமானோர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். நாங்கள் கடந்த மே மாதத்தில் முன்வைத்த பரிந்துரைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்குவதன் அவசியத்தை கூறியிருந்தோம். அதில் ஏற்பட்ட தாமதே இப்போது அதிகளவில் மரணங்கள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சின் கீழுள்ள தொற்று நோய்ப் பிரிவு, சுகாதார அதிகாரிகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்காது இராணுவத்தினருக்கு அதிகளவில் வழங்குகின்றது. இது தடுப்பூசி வழங்கல் செயற்பாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கிய பின்னர் மற்றையவர்களுக்கு வழங்குமாறு கூறியிருந்தோம். ஆனால் இன்னும் 60 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாது இருக்கின்றனர்.

இந்நிலையில் புதிய சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு நாங்கள் கூறிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்படுமாறு கோரி நிற்கின்றோம். அவ்வாறு செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுக்க முடியாது போகும்.

இதேவேளை குறைந்தது 90 வீத சமூக இடைவெளியையாவது பேண வேண்டும். இதனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள முடக்கத்தை பின்பற்றி நடந்துகொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம். இன்னுமொரு அலை உருவாகாதவாறு நடந்துகொள்ளுங்கள் என்று மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

ந.ஜெயகாந்தன் – தினக்குரல் 24-8-21

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter