காபூல் விமான நிலையத்திற்கு செல்வதற்கான “பாதுகாப்பான பாதை” என தலிபான்கள் வாக்குறுதி அளித்த வீதி வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் அவர்களது சோதனைச் சாவடிகளை கடந்து செல்ல முயன்றபோது தலிபான் ஆயுததாரிகளால் அடித்து தாக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தரைப்பகுதி எல்லைகளை தாலிபான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், காபூல் விமான நிலையம் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான மார்க்கமாக உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமையின் பின்னர் காபூல் விமான நிலையமும் ஓடுதளமும் அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. ஆனால் விமான நிலையத்திற்கு செல்லும் தரைவழிப்பாதைகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் காபூலின் வடக்கில் பல சோதனைச் சாவடிகளை அவர்கள் அமைத்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு செல்ல விரும்பும் மக்களுக்கு பாதுகாப்பான பாதையை அமைத்திருப்பதாக தலிபான்கள் உறுதியளித்துள்ளரென அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் தலைநகரிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள், விமான நிலைய வீதியிலுள்ள சோதனைச் சாவடிகளில் வன்முறை நடந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன. இங்குள்ள சோதனைச் சாவடியொன்றைக் கடக்க முயன்ற பின்னர் தாக்கியும் சவுக்கால் அடித்தும், தலையில் காயமடைந்த பெண்மணியொருவரதும் குழந்தையினதும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை தலிபான்கள் ஆவணங்களைச் சரிபார்த்து, சிலரை சோதனைச் சாவடிகளிலேயே விமான நிலையத்திற்கு செல்லவிடாது வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பி விடுவதாக காபூல் தகவல்களை ஆதாரம் காட்டி ‘த கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘தற்போது குறிப்பிடத்தக்களவிலான மக்கள் அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள விமான நிலையத்தை அடைய முடிந்துள்ளது. என்றாலும் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பின்னுக்கு தள்ளிவிடப்பட்டதாகவும் அடித்து தாக்கப்பட்டதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்விடயத்திற்கு தலிபான்கள் ஊடாகத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கான திறந்த பாதைகள் தொடர்பிலான தலிபான்களின் வாக்குறுதி மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து நாம் விழிப்புடன் உள்ளோம்’ என்றார்.
வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜென் சாகி, ‘பொதுமக்கள் விமான நிலையத்திற்கு செல்ல தலிபான்கள் பாதுகாப்பான பாதையை வழங்கத் தவறினால், அமெரிக்க படையினரின் முழுச்சக்தியை பிரயோகிக்க நேரிடும். இதனை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இப்போது நாங்கள் நம்பவில்லை. அவர்களுடைய வார்த்தையை ஏற்கவில்லை என்றார்.
கடந்த செவ்வாயன்று மாத்திரம் காபூல் விமான நிலையத்தின் ஊடாக 1,100 அமெரிக்க பிரஜைகள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 13 விமானங்களில் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் இவ்வாரம் முழுவதும் இந்நடவடிக்கையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதே தினத்தன்று இங்கிலாந்து பிரஜைகளையும் ஆப்கானியர்களையும் ஏற்றிச் சென்ற விமானமொன்று இரவு 11 மணியளவில் ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள ராப் பிரிஸ் நோர்டனில் தரையிறங்கியது. இது தொடர்பில் ரோயல் கடற்படையின் வைஸ் அட்மிரல் சர் பென் கீ, ‘பிரித்தானிய ஆயுதப் படையினர் சுமார் 6,000 பேரை காபூல் வழியாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார். ‘அவுஸ்திரேலியா தனது முதல் மீட்பு விமானத்தில் 26 பேரை வெளியேற்றியுள்ளது’ என்றார் பிரதமர் ஸ்காட் மோரிசன்.
தற்போது தலிபான்கள் நாட்டின் ஆட்சியாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட போதிலும், ஆப்கானிஸ்தானின் முதல் உப ஜனாதிபதி அம்ருல்லா சலே, ‘தாம் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும், தலிபான்கள் தலைநகரை கைப்பற்றியதால் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். அதனால் நாட்டின் “சட்டபூர்வ காபந்து ஜனாதிபதி தாமே’ என அறிவித்துள்ளார். கடந்த வாரம் கானி தலைமையில் நடந்த பாதுகாப்பு கூட்டத்தில், ஆயுதப்படைகள் குறித்து பெருமைப்படுவதாகவும், தலிபான்களுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்த அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறினார். ஆனால் பின்வந்த சொற்ப நாட்களுக்குள் நாடு தாலிபான்களிடம் விழுந்துள்ளது.
‘அமெரிக்க படைகளை வெளியேற்ற ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்த பின்னர் அவருடன் வாதிடுவது பயனற்றது என்று குறிப்பிட்டுள்ள சலே, ‘தலிபான்கள் வியட்நாமியர்களும் அல்லர். குறைந்தது வியட்காங் போன்று கூட அவர்களில்லை” என்பதை காண்பிக்குமாறு ஆப்கானியர்களுக்கு தம் ட்வீட்டரில் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். ‘அமெரிக்காவையும் நேட்டோவையும் போன்று நாங்கள் ஆத்மாவை இழக்கவில்லை, மகத்தான வாய்ப்புகளை எதிர்பார்க்கிறோம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
சலே,எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை, ஆனால்’ தலிபான் பயங்கரவாதிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் தலைவணங்க மாட்டேன்’ என்றும் ‘அமெரிக்கா மீது 9/11 தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அல்-காய்தா தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட வடக்கு கூட்டணியின் தலைவர் அஹ்மத் ஷா மசூத்தை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டேன்’ என்றும் அவர் கூறியுள்ளார். தலிபான்கள் ஏற்கனவே அமைத்திருந்த ஆட்சியை எதிர்த்துப் போராடிய முக்கிய குழுக்களில் வடக்கு கூட்டணி ஒன்றாகும்.
சாலேயின் அழைப்புக்கு ஆதரவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. படுகொலை செய்யப்பட்ட மசூதுக்கு விசுவாசமானவர்கள் வடகிழக்கு மாகாணமான பன்ஜ்ஷிரில் “எதிர்ப்பு 2” இயக்கத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘ஆப்கானிஸ்தானின் அரசாங்கமாக தலிபான்களை அங்கீகரிக்கும் எந்த திட்டமும் எம்மிடமில்லை. அவர்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை பலத்தால் கைப்பற்றியுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் குழப்பமான காட்சிகளுக்கு மத்தியில் காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானத்தில் ஒட்டிக்கொள்ள முயன்ற சிவிலியன்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. காபூல் விமான நிலையத்திலிருந்து விண்ணில் பறக்க ஆரம்பித்த சி -17 விமானத்திலிருந்து இருவர் கீழே விழுவது சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகின என்று குறிப்பிட்டுள்ள செய்தித் தொடர்பாளர் ஆன் ஸ்டெபனெக், கத்தாரில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் உடலொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பரிதாபகரமான சம்பவத்தின் உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது கவலைகளை தெரிவித்துக்கொள்கின்றோம்’ என்றும் கூறியுள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகளை ஆப்கனிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்கான உபகரணங்களை வழங்குவதற்காக இவ்விமானம் தரையிறக்கப்பட்டுள்ள போதிலும் விமானப் பணியாளர்கள் சரக்குகளை இறக்குவதற்கு முன், விமானத்தை நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் விமான நிலைய சுற்றளவை மீறி சுற்றி வளைத்தனர். அதனால் விமானத்தை சுற்றி நிலைமை வேகமாக மோசமடைந்து வந்த சூழலில் விமானத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமான நிலையத்தை விட்டு அவர்கள் விரைவாக புறப்பட்டுள்ளனர்.
தலிபான்களிடம் கணிசமானளவு அமெரிக்க இராணுவ உபகரணங்கள் குவித்திருப்பதை வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு பென்டகன் வழங்கிய மற்றும் பயன்படுத்திய துப்பாக்கிகள், கனரக வாகனங்கள், கந்தஹார் விமான நிலையத்தில் மேம்பட்ட யூ.எச். -60 பிளாக் ஹவ்க் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட இன்னும் பல இராணுவ தளபாடங்களுடன் தலிபான்கள் காணப்படும் படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
தலிபானைகளை எதிர்த்துப் போராடவென பிளாக் ஹவ்க்ஸ் ஹெலிகொப்டரகள், கனரக ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகள் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அரசுப் படைகள் தலிபான் கிளர்ச்சியாளர்களுக்கு விரைவாக அடிபணிந்து, ஆயுதங்களையும் ஹெலிகொப்டர்களையும் இழந்துள்ளனர். – தினகரன் –