தலிபான் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன் என மலாலா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலை அமைதியான முறையில் ஒப்படைக்கும்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமைதியான வழியில் அதிகார மாற்றம் ஏற்படும் வரை காபூல் நுழைவாயில்கள் காத்திக்க தலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கவலையளிக்கிறது. இதனை அதிர்ச்சியுடன் கவனிக்கிறேன். அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்களை நினைத்து கவலை கொள்கிறேன்.
உள்ளூர் தலைவர்கள், பிராந்திய தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் ஆப்கனில் உனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்.
அங்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை உலக நாடுகள் செய்ய வேண்டும். அகதிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்” என்று ட்விட்டர் மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
யார் இந்த மலாலா?
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை கடந்த 2012 ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார் மலாலா. இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார். -தமிழ் மிற்றோர்-