கொவிட் -19 அச்சுறுத்தலின் காரணமாக நாட்டை முழுமையாக முடக்கும் தீர்மானம் இல்லை. ஆனால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்த உத்தயோகபூர்வமான விசேட அறிவிப்பு இன்று (13) மாலை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வெளியிடப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை கொவிட்-19 நிலைமை தொடர்பிலும் தற்போது முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பிலும் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சற்று முன்னர் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவிக்கையில் ‘ நாட்டில் தற்போதுள்ள நிலைமையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இதன் போது வெவ்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய அடுத்த ஓரிரு தினங்களில் சில தீர்மானங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
முழுமையாக நாட்டை முடக்க எதிர்பார்க்கவில்லை. போக்குவரத்து கட்டுப்பாடுகளில் ஏதேனுமொரு வகையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.” என்றார். -மெட்ரோ நியூஸ்