உம்ரா ஏற்பாடுகள் தொடர்பில் முகவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு
உம்ரா பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள விருப்பதாகவும் உம்ரா பயணத்துக்காக பதிவு செய்து கொள்ளுமாறும் சில உம்ரா பயண முகவர்கள் பொதுமக்களை கோரி வருவதாக அரச ஹஜ் குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஆனால் சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா அமைச்சு உம்ரா தொடர்பில் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிப்புச் செய்யவில்லை. அதனால் உம்ரா முகவர்களுக்கு பணம் வழங்கி எமாற வேண்டாம் என அரச ஹஜ் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஹஜ் மற்றும் உம்ரா அனுமதிப்பத்திரம் ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இதுவரை எந்தவொரு முகவர் நிலையத்துக்கும் வழங்கப்படவில்லை. எனவே உம்ரா பயணத்துக்கென முகவர் நிலையங்களுக்கு முற்பணம் செலுத்த வேண்டாம் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் பொது மக்களை வேண்டியுள்ளார்.
எவரேனும் முகவர் நிலையங்களுக்கு உம்ரா பயணத்துக்காக பதிவு செய்து கொண்டு முற்பணம் வழங்கியிருந்தால் அரச ஹஜ் குழு அது தொடர்பில் எந்தப் பொறுப்பினையும் ஏற்கமாட்டாது. சவூதி அரேபியாவிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தால் அது தொடர்பில் பொதுமக்கள் தெளிவு படுத்தப்படுவார்கள்.
அத்தோடு அதன் பின்பே உம்ரா முகவர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு உலகின் பல நாடுகளுக்கு உம்ராவுக் கான அனுமதியினை வழங்கி நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்வாங்கப்படவில்லை.
சவூதி அரேபியாவுக்கு உம்ரா பயணத்துக்காக விஜயம் செய்யும் பயணிகள் பைசர், மொடர்னா, அ௮ஸ்ட்ரா செனெகா, அல்லது ஜோன்ஸன் அன்ட் ஜோன்ஸன் கொவிட் 19 தடுப்பூசிகளில் ஏதேனுமொன்றில் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக் கொண்டிருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
இதேவேளை சினோபாம் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் ஏற்றிக் கொண்டுள்ளவர்கள் தடுப்புச் சக்தியை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக மேற்குறிப்பிட் தடுப்பூசிகளில் ஒன்றினை மேலதிகமாக ஏற்றிக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சவூதி அரேபியா நிபந்தனை விதித்துள்ளது. (எ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை