கொவிட் 19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ள வெளிநாட்டவர்களை உம்ரா யாத்திரைக்கு அனுமதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஹஜ், உம்ரா அமைச்சின் அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் 19 தொற்றினால் முடக்கப்பட்டிருந்த சவூதி அரேபியாவின் பொருளாதாரம் இதன் மூலம் மீண்டும் வளர்ச்சியுறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்தும் பாதுகாப்பு பெறும் நோக்கில் சுமார் 18 மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியா தனது எல்லைகளை மூடி வைத்திருந்தது.
பல உலக நாடுகளிலிருந்து தொடர்ச்சியாக சவூதி அரேபியாவுக்கு கிடைத்துவந்த கோரிக்கைக ளையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் சவூதி அரேபியாவின் எல்லைகள் உம்ரா யாத்திரிகர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக சவூதி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
உம்ரா யாத்திரை எந்தச் சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ள முடியுமானதாகும். உலகெங்குமிருந்து வருடாந்தம் மில்லியன் கணக்கான மக்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்வது வழக்கமாகும். ஆனால் ஹஜ் யாத்திரை முஸ்லிம்களுக்கு கடமையாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வில் ஒரு தடவையேனும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டும். கொவிட் 19 வைரஸ் பரவல் முஸ்லிம் யாத்திரிகர்கள் பயணம் மேற்கொள்வதில் தடைகளை உருவாக்கியது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்ட சவூதி அரேபி யாவின் அறிவிப்புக்கு முன்பு சவூதி அரேபியாவில் வசிக்கும் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகாதவர்கள் மாத்திரமே உம்ரா யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை கடந்த மாதம் சவூதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டவர்கள் உட்பட 60 ஆயிரம் பேர் மாத்திரமே வருடாந்த ஹஜ் கடமைக்காக அனுமதிக்கப்பட்டனர். என்றாலும் சவூதி அரேபியா தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ள வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கடந்த 1ஆம் திகதி முதல் நாட்டுக்குள் படிப்படியாக அனுமதித்து வருகிறது.
வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. சவூதி அரேபியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு யாத்திரிகர்கள் பய்சர், அஸ்ட்ரா செனெக்கா, மொடர்னா மற்றும் ஜோன்சன் & ஜோன்ஸன் தடுப்பூசிகளில் ஏதேனுமொன்றில் 2 டோஸ்களை பெற்றிருக்க வேண்டும். அத்தோடு தேவையேற்பட்டால் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என பிரதி ஹஜ் அமைச்சர் அப்துல் பத்தாஹ் பின் சுலைமான் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எத்தனை எண்ணிக்கையானோர் யாத்திரை மேற்கொள்ள முடியும், எந்தெந்த நாடுகளிலிருந்து வருகை தர முடியும் என்பதை ஒவ்வொரு நாட்டினதும் கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சவூதியின் பிரதி ஹஜ் அமைச்சர் தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் தமது சமய கடமைகளை மேற்கொள்ள முடியாது பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலானோர் பல வருடங்களாக இதற்காக காத்திருந்தார்கள். ‘உம்ரா யாத்திரைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை உம்ரா யாத்திரிகர்களுக்கு நிவாரணமாகவுள்ளது’ என எகிப்தைச் சேர்ந்த அஹமட் ஹமட்னா தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட பொறியியலாளர் மொஹமட் ரகாப், ‘தான் உம்ரா யாத்திரை மேற்கொள்ள தொடர்ந்தும் தயங்குவதாகக் கூறியுள்ளார். மக்காவில் மக்கள் கூட்டமாக இருப்பார்கள். அதனால் கொவிட் 19 வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் செய்திச் சேவையின் அறிக்கையின் படி சவூதி அரேபியா ஒவ்வொரு மாதமும் 60ஆயிரம் உம்ரா யாத்திரிகர்களை அனுமதிக்கும் இவ் வெண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கலாம். மாதம் 2 மில்லியன் யாத்திரிகர்கள் அளவில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரிகர்களை அனுமதிப்பது சவூதி அரேபியாவின் புனித தலங்களின் பொறுப்பாளர்களான சவூதி ஆட்சியாளர்களின் கௌரவத்துடன் தொடர்புபட்டதாகும். புனித தலங்கள் ஆட்சியாளர்களின் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் மூலமாகும்.
2019 செப்டெம்பர் மாதத்துக்கும் 2020 மார்ச் மாத்துக்குமிடையில் சவூதி அரேபியா 400,000 உல்லாச பயண விசாக்களை வழங்கியது என்றாலும் அதன் பின்பு கொவிட் தொற்று காரணமாக சவூதி அரேபியாவின் எல்லைகள் மூடப்பட்டன. சவூதி அரேபியா தேசிய ரீதியில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் செல்வதென்றால் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டயமாகும். அத்தோடு கல்வி நிலையங்களில் பங்குபெறுபவர்கள், பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்துபவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது அவசியமாகும். சவூதி அரேபியாவில் சுமார் 532000 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 8300ற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன. முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற 2019ஆம் ஆண்டு 2.5 மில்லியன் மக்கள் ஒன்றுகூடினார்கள். (ஏ.ஆர்.ஏ.பரீல்)