ஜெய்லானியில் அடையாளங்கள், விஷமிகளால் மண்போட்டு மறைப்பு.

பல நூற்றாண்டு காலம் வரலாற்றுப் புகழ் மிக்க ஜெய்லானி பள்ளிவாசல் எல்லைக்குள் பள்ளிவாசலிலிருந்தும் சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்தி ருந்த தொல்பொருள் சின்னங்களான இரு ஸியாரங்கள் இனந்தெரியாதோ ரினால் மண்ணினால் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அவ்விடத்தில் ஸியாரங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளம் தெரியாத வகையில் மூடப்பட்டுள்ளதாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

ஜெய்லானி பள்ளிவாசலைச் சென்றடையும் பாதையில் அமையப்பெற்றுள்ள குறிப்பிட்ட இரண்டு ஸியாரங்களும் பல தசாப்தங்கள் பழமை வாய்ந்ததாகும். ஜெய்லானி பள்ளிவாசலுக்கு அண்மையில் சுமார் 50 மீற்றர் தூரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தாதுகோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையிலே தொல்பொருள் அடையாளச் சின்னங்களான ஸியாரங்கள் விஷமிகளால் மண்கொண்டு மூடி மறைக்கப்பட்டுள்ளன.

பள்ளிவாசல் நிர்வாகத்தினால் இது தொடர்பில் கலதொட்ட பொலிஸில் முறைப்பாடொன்றும் செய்யப்பட் டுள்ளது. கடந்த மாதம் ஜெய்லானி பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் புதிய நிர்வாக சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த விஷம செயற்பாடு பிரதி பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கும் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மண்ணினால் மூடப்பட்டுள்ள ஸியாரங்களில் கபூர் மஸ்தானின் ஸியாரம் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ப.மு.ஹாஜியாரின் ஸியாரம் சுமார் 68 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். பள்ளிவாசலுக்கு அண்மையில் பிரமாண்டமான தாதுகோபுரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியிலுள்ள முஸ்லிம்களின் தொல்பொருள் அடையாளங்களை அழிக்கும் முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பள்ளிவாசலில் முஹர்ரம் புதுவருட கொடிகள் ஏற் றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் பெரும்பான்மையினர் பள்ளிவாசலை வெசக் கூடுகளால் அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசலில் அக்கறை செலுத்தாதிருந்தமையே இவ்வாறான செயல்களுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெய்லானி பள்ளிவாசலுக்கு தொடர்ந்தும் மக்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பள்ளிவாசலின் இருப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாதென தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் தலைவி ரொசானா அபுசாலியிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter