டெல்ட்டா திரிபின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. டெல்ட்டா தொற்றின் பரவலானது கொழும்பில் மாத்திரம் 75 சதவீதமாகக் காணப்படுகின்றது. மறுபுறம் புதிய கொரோனா நோயாளர்கள், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது அதனை அபாய நிலையாகவே கருதவேண்டுமென ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தமிழன் வார இதழுக்கு தெரிவித்தார். அவருடனான உரையாடலின் முழுவிபரம் வருமாறு,
கேள்வி: நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று மிக வீரியத்துடன் பரவலடைவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்த நிலைமையை தடுப்பூசி வழங்குவதனூடாக மாத்திரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென கருதுகிறீர்களா?
பதில்: கொரோனா பரவலின் தன்மை சற்று மாறுபட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமையை தடுப்பூசி வேலைத்திட்டத்தினூடாக மாத்திரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கடினமான விடயமாகும். ஆனால், தடுப்பூசி வழங்குவதனூடாக கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடியும் என்பதுடன், சிக்கல்நிலையையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இருந்தபோதிலும், தற்போது நாட்டில் பரவும் டெல்ட்டா தொற்றை தடுப்பூசிகளினால் மாத்திரம் சமாளிக்க முடியாது. தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், பெற்றுக்கொள்ளாதவர்கள் என்ற வேறுபாடின்றி சகலருக்கும் ஒரே வீரியத்தில் டெல்ட்டா திரிபு தாக்கத்தை ஏற்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
ஆனால், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு டெல்ட்டா தொற்றின் தாக்கம் ஏற்படும்போது, அவர்களின் உடம்பில் அந்த வைரஸின் செயற்பாடு வலுவிழந்து அவை விரைவில் அழிவடைந்து விடுகின்றன. அதற்குக் காரணம் தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகும். இதுவே தடுப்பூசி பெற்றுக்கொள்பவர்களுக்குக் கிடைக்கும் பெரும் நன்மையாகும்.
தடுப்பூசி ஏற்றுவது எவ்வளவு அவசியமோ அதேபோன்று முகக்கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூரம் இடைவெளியைப் பேணுதல், அதிக சன நெரிசலுடைய இடங்களுக்கு அவசியமின்றி பயணித்தல் போன்ற சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக, டெல்ட்டா திரிபின் புதிய தன்மை தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, குளிரூட்டப்பட்ட மூடிய அறைகளில் நபரொருவருக்கு நோய் நிலை ஏற்பட்டால், அவரிடமிருந்து வெளியாகும் கிருமிகள் 16 மணித்தியாலயத்துக்கு உயிருடன் இருக்க முடியுமென அவுஸ்திரேலியாவின் தொற்று நோய் தொடர்பான நிபுணர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். அதனால், முடிந்தளவு மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்லாமல் இருத்தல், வெளியில் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றினால் எமக்குத் தொற்று ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
கேள்வி : குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஏதாவது | தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்: உலக நாடுகளில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்கப்படுவதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் 12 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. ஆனால், எமது நாட்டில் இதுவரையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படுகின்றது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நிறைவடைந்ததும், 18 வயதிலிருந்து 30 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
தடுப்பூசி வழங்குவது தொடர்பான குழு இதுகுறித்த தீர்மானங்களை எடுக்கும். அந்தக் குழுவின் தீர்மானங்களுக்கமைய சிறுவயதினருக்கும் தடுப்பூசி வழங்கக் கூடியதாக இருக்கும். அநேகமாக, அதிகளவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே கொரோனாவினால் மரணிக்கிறார்கள். வயது குறைவடைய குறைவடைய மரண வீதமும் குறைவடையும். சிறுவர்கள் கொரோனாவால் உயிரிழப்பார்களேயானால் புற்றுநோய், சிறுநீரக நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களே இவ்வாறு மரணிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மாறாக, சிறுவர்களுக்குத் தொற்று பரவலடைவதற்கான சிக்கல் நிலை இருக்கின்றதே தவிர உயிரிழப்புகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகும்.
கேள்வி: கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பும் அளவுக்கு அபாயமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா?
பதில் : நோயாளர்கள் அதிகரித்துள்ளார்கள். ஏற்கனவே வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக தொற்றுக்குள்ளாகிறார்கள். இவ்வாறு நோய் நிலைமை அதிகரிக்கும் போது மக்கள் வைத்தியசாலைகளுக்கு விரைந்து செல்லும் நிலை உருவாகிறது. அதனால், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பவும், தொற்றினால் பாதிக்கப்பட்டு அவதியுறுபவர்களை வைத்தியசாலைகளுக்கு அனுப்பவும், 60 வயதுக்குக் குறைந்த வேறு எந்த நோயினாலும் பாதிக்கப்படாமல் தொற்றுக்குள்ளானவர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் இல்லாதவர்களை இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கேள்வி: சில மாதங்களுக்கு முன்னர் ஜூன் மற்றும் ஜூலை மாதமாகும்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து நோயாளர்களின் மரணங்களும் அதிகரிக்குமென வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். வைத்தியர்கள் கூறியது இன்று உண்மையாகியுள்ளதல்லவா?
பதில் : ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புது வருட கொத்தணிகள் உருவாகிய போது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மரணங்கள் அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அதன் பின்னர் நோயாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்திருந்தன. இந்நிலையில், டெல்ட்டா திரிபின் காரணமாகவே மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் டெல்ட்டா திரிபு அடையாளம் காணப்பட்டதையடுத்து கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 75 சதவீதம் டெல்ட்டா திரிபின் பரவல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, மிகவும் வேகமாக இந்த டெல்ட்டா தொற்று பரவலடைகின்றது. பரவலடையும் வேகமும், வைரஸின் வீரியமும் அதிகரிக்கும் போது நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. அவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தவுடன் அவர்களுக்கு ஒட்சிசன் தேவை ஏற்படுகின்றது. ஓட்சிசன் தேவைப்பாடும், நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. அத்துடன், மரணிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இந்த நிலைமை நீடிக்குமாயின் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மேலும் அதிகளவானவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
கேள்வி: டெல்ட்டா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்ட ஆரம்ப காலப்பகுதியிலேயே வைத்திய நிபுணர்கள் கூறியதைப் போன்று நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போதைய நிலையிலிருந்து நாட்டைப் பாதுகாத்திருக்கலாம் அல்லவா?
பதில்: நாட்டை முடக்குவதால் டெல்ட்டா திரிபின் பரவலை எம்மால் தடுக்க முடியாது. இந்தத் திரிபு நபரொருவரிடத்திலிருந்து நபரொருவருக்கு பரவலடையும் நிலையே காணப்படுகின்றது. ஆகவே, மக்களின் நடவடிக்கைகளுக்கமையவே தொற்று பரவலடையும் தன்மையும் மாறுபடுகின்றது. நாட்டை முடக்கத்திலிருந்து விடுவித்ததும், மக்கள் நிலைமையை அறியாமல் நடமாட ஆரம்பித்ததால் தொற்று நிலைமை மீண்டும் பரவலடைய ஆரம்பித்துவிட்டது. இந்நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாயின் கடுமையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதுடன், தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி : தற்போதைய நிலைமையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் அரசாங்கத்திடம் இருக்கின்றதா?
பதில் : இப்போதைய சூழ்நிலையில் அவ்வாறானவொரு தீர்மானம் இல்லை.
கேள்வி: மேல் மற்றும் தென்மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நோயாளர்களுக்குத் தேவையான கட்டில்கள் இல்லாத அவசர நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்: கொழும்பு, களுபோவிலை, ராகம் போன்ற பிரதான வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான கட்டில்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா நோயாளர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கேள்வி : எமது நாடு மிகவும் அபாய நிலையை சந்தித்துள்ளது அல்லவா?
பதில்: இவ்வாறு கொரோனா நோயாளர்களும், மரணங்களும் அதிகரிக்கும் போது அதனை அபாய நிலையாகவே கருதவேண்டும்.
கேள்வி: நாட்டில் நோயாளர்களுக்குத் தேவையான அளவு கட்டில்கள் இருப்பில் இருக்கின்றனவா?
பதில்: தற்போதைக்கு தேவையான அளவு கட்டில்கள் இருக்கின்றன. இருந்த போதிலும், அவை வரையறுக்கப்பட்ட அளவிலானவையாகும். கட்டில்களை அதிகரிக்க முடியும். புதிய கட்டடங்களை நிர்மாணிக்க முடியும். ஆனால், புதிதாக மனித வளத்தை உருவாக்க முடியாது. புதிதாக வைத்தியர்கள், நிபுணர்கள், தாதியர், சிற்றூழியர்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகளை எம்மால் அழைத்துவர முடியாது. எனவே, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே மிகவும் சிறந்ததாக அமையும். தொற்று உடம்பில் நுழையாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு தனிநபரதும் பொறுப்பாகும். இன்னும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்றால், அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டியதே மிகவும் சிறந்ததாகும்.
கேள்வி: அவ்வாறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் சம்பந்தப்பட்ட இடங்களை நாடும்போது தடுப்பூசிகள் முடிவடைந்து விடும் நிலைமையும் காணப்படுகின்றதே?
பதில் : அவை சாதாரணப் பிரச்சினைகளே. முழு நாட்டிலும் அவ்வாறான பிரச்சினை இல்லை. ஒரு சில இடங்களிலே இந்த சிக்கல் நிலைமை காணப்படுகின்றது. ஆனால், மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு செல்லும்போது ஒரு சில சந்தர்ப்பங்களில் அரிசி இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அவ்வாறு தடுப்பூசிகள் நிறைவடையுமாக இருந்தால், அடுத்தகட்ட தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டவுடன் ஏனையவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும். குறைகள் இல்லாத நாடு இல்லை.
கேள்வி: சுகாதாரத்துறை செய்ய வேண்டிய விடயங்களை இராணுவத்தினரால் முன்னெடுக்க முடியாதென்றும், கொவிட் – 19 கட்டுப்பாட்டுச் செயலணி தோல்வியடைந்துள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில் : அது முன்னாள் பிரதமரின் நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால், சுகாதாரப் பிரிவினரால் மாத்திரம் இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. சுகாதாரத்துறையினருக்கு முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பு அவசியமாகும். அதேபோன்று, கிராம மட்டத்திலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பும் எமக்கு அவசியம். அதனால், கொரோனா கட்டுப்பாட்டுக்காக இராணுவத்தினரிடமிருந்து கிடைக்க வேண்டிய சகல உதவிகளும் எமக்குக் கிடைக்கின்றன.
கேள்வி: அவ்வாறானால், இந்த நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டியது யார்?
பதில்: இதற்கு யாரும் பொறுப்புக் கூற முடியாது. உலகம் முழுவதுமுள்ள ஏனைய நாடுகளைப் போன்று கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால், இது யாருடைய தவறும் இல்லை. எவருக்கும் பொறுப்புக் கூற முடியாது.
கேள்வி: நாட்டில் தற்போது டெல்ட்டா எவ்வாறான நிலைமையில் இருக்கிறது?
பதில்: தற்போதுள்ள நோய் அறிகுறிகள் மற்றும் பரவலடையும் வீதத்துக்கமைய டெல்ட்டா திரிபின் தாக்கம் அதிகரித்து வருகின்றது என்றே கூற வேண்டும். கொழும்பில் மாத்திரம் 75 சதவீதம் டெல்ட்டா தொற்றின் தாக்கம் இருக்கிறது. இலங்கையில் மாத்திரமல்ல, அநேகமான நாடுகளின் பிரதான வைரஸாக டெல்ட்டா திரிபு காணப்படுகின்றது.
கேள்வி: நாளாந்தம் இனங்காணப்படும் டெல்ட்டா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை முழுமையாக வெளியிடப்படுகின்றதா? அதில் ஏதேனும் குறைப்பாடு இருக்கின்றதா?
பதில்: நாளாந்தம் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இருந்தபோதிலும், தற்போதுள்ளதை விட அதிளவான, இனங்காணப்படாத நோயாளர்கள் சமூகத்தில் இருக்க முடியும்.
கேள்வி: இந்த டெல்ட்டா திரிபு தொடர்பான ஆய்வுகளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மாத்திரமே முன்னெடுக்கின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் மாத்திரம் பரிசோதனைகளை முன்னெடுப்பதால் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அல்லவா?
பதில் : எந்தத் திரிபானாலும் சிகிச்சை முறை, கட்டுப்படுத்தல் முறை, தடுப்பூசி வழங்குதல் என சகல விடயங்களும் ஒன்றாகவே இருக்கப் போகின்றன. அதனால், என்ன வைரஸ் என்பதை ஒவ்வொரு நோயாளரிடமும் அடையாளம் காண வேண்டிய அவசியம் இல்லை. அந்த வைரஸ் நாட்டில் இருக்கிறதா என்பதையே அறிந்துகொள்ள வேண்டும். பரவலடையும் வேகத்துக்கமைய அதன் தன்மை வைத்தியர்களுக்குத் தெரியும். அதற்கமைய சிகிச்சைகள் வழங்கப்படும். அதனால், ஒவ்வொரு ஆய்வுகூடங்களிலும் வைரஸ் பரிசோதனை திறனை அதிகரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமாயின் அதற்கான வசதிகளுக்கு பெருமளவு நிதி செலவிட வேண்டியேற்படும். ஆகவே எழுமாறான பரிசோதனைக்கான ஆய்வுகூட வசதி போதுமானதாகும்.
கேள்வி: இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கமைய டெல்ட்டா தொற்றுடன் எத்தனை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்?
பதில் : ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கமைய 100 பேர் வரையில் டெல்ட்டா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், பரவலடையும் வீதத்துக்கமைய நிலைமை வைத்தியர்களுக்குத் தெரியும். அதனால், நோயாளர்கள் தற்போது அதிகரித்து வருவதற்கான காரணம் டெல்ட்டா என்பதும் வைத்தியர்களுக்கு தெரியும். ஆய்வுகூடத்தில் இனங்காணப்பட்ட டெல்ட்டா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 167 என்பதற்காக அதில் எந்தப் பயனுமில்லை. நோய் அறிகுறிகளுக்கமைய அதனை வைத்தியர்களால் அடையாளம் காண முடியும்.
கேள்வி : கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பான குழுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறீர்களா?
பதில் : ஆம். சகல கூட்டங்களிலும் கலந்து கொள்கிறேன்.
கேள்வி: இறுதிக் கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டது?
பதில்: சுகாதாரத் திருத்தங்களில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, 500இற்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றக்கூடிய மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேர் வரையில் மாத்திரமே கலந்துகொள்ளுதல் போன்ற மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கேள்வி: இதனை எம்மால் நான்காவது அலையாகக் கருதமுடியுமா?
பதில்: அவ்வாறு குறிப்பிட முடியாது. ஆனால், தொற்றுப்பரவல் நிலை மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதுள்ள நிலைமை பாரதூரமான ஆபத்து நிலையாகும். நான்காவது அலையா, ஐந்தாவது அலையா என்று கணக்கெடுப்பதை விட எதிர்காலத்தில் நோயாளர்களதும், மரணங்களினதும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதே தற்போதுள்ள பாரதூர சிக்கல் நிலைமையாகும்.
உரையாடல்: நா. தினுஷா