நாளுக்கு நாள் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் நிறுவங்கள்

நாலு காசு சம்பாதிச்சு, நாள் பிழைப்பை பார்ப்பதென்பதே பெரும்பாடாய் இருப்பதாக இன்று பலர் புலம்புவதைக் கேட்டிருப்போம். ஏன், நாமே அவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கக் கூடும்.

அடுத்தநாள் உலை வைப்பதற்கு எங்கு கடன் வாங்குவது, எந்த அடகுக்கடைக்குச் செல்வது எனச் சிந்தித்தே பலரது காலம் கழிகிறது. அந்தளவுக்குப் பலரின் பொருளாதார நிலைமை மந்தமாகியுள்ளது.

ஒரு நாளுக்கான அத்தியாவசியத் தேவைகளைக் கொள்வனவு செய்வதற்கான செலவுகள் வருமானத்தையும் மீறி, ஜெட் வேகத்தில் செல்கின்றன. எனினும், வருமானமோ, அடுப்பங்கரை பூனையாட்டம் அங்கேயே படுத்துக் கிடக்கின்றது.

இவ்வார ஆரம்பத்தில் தமிழ்மிரரின் பிராந்திய நிருபர் வி.ரி. சகாதேவராஜா மின்னஞ்சலில் அனுப்பியிருந்த படங்களே. இந்தக் கட்டுரையை எழுத வேண்டுமென என்னைத் தூண்டின. உண்மையில் ஓர் ஊடகவியலாளர் பக்கச்சார்பற்றவராக இருக்க வேண்டும். எனினும், சமூக நலனில் பொறுப்புவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகவியலாளர்கள் சார்பாக, நுகர்வோராக உள்ள பொதுமக்களுக்கு ஒருசில விடயங்களை எடுத்துரைப்பதில் தவறில்லை.

சரி! உலகளாவிய ரீதியில் கொரோனா பரவல் ஏற்படுத்திய தாக்கங்களால், தற்காலத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்களின் விலை நாளுக்குநாள், 10 அல்லது 20 ரூபாய்களால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, சோப் ஒன்றை இரு தடவைகள் வாங்கிப் பாவித்துவிட்டு, மூன்றாவது தடவையாக அதையே மீண்டும் வாங்கும் போது, அதன் விலை இரு மடங்காக மாறியிருக்கின்றது. எனினும், அதே சோப் என்பதைப் பார்த்து வாங்கும் நுகர்வோர். விலையை வீட்டுக்கு வந்தே சுவனிக்கின்றனர்.

அதேபோன்று, சிறார்களுக்கான பால்மாவை ஆரம்பத்தில் 630 ரூபாய்க்கு வாங்கினால், அது முடிந்த பின் மீண்டும் சென்று வாங்கும் போது அது 650 ரூபாயாக இருக்கும். மூன்றாவது முறை வாங்கும் சந்தர்ப்பத்தில் அதுவே 680 ரூபாயாக மாறியிருக்கும். இவ்வாறு,நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள் நாளுக்கு நாள் கிடுகிடுவென விலை ஏறி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாறிக்கொண்டே போகின்றது.

இப்பொருள்களின் விலைகளை, வர்த்தகர்கள் அதிகரிப்பதை விடவும் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களே, எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி, விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

ஒரு பொருளின் விலை ஓரிரு மாதங்களுக்குள் இரண்டு அல்லது மூன்று தடவைகள் அல்லது அதற்கு மேல், இவ்விரண்டு மடங்குகளால் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையானது, தற்போது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, கடந்த 6 மாத காலப் பகுதிக்குள் இரண்டு மற்றும் மூன்று தடவைகள் விலையேற்றம் கண்டுள்ளன.

உணவுப் பொருள்கள். பெண்களுக்கான பொருள்கள், மருத்துவப் பொருள்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பல பொருள்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பால்மா, பால் சாரந்த உற்பத்திகள், சோப், பிஸ்கெட்டுகள், அழகுசாதனப் பொருள்கள் எனப் பலவற்றை இங்கு சுட்டிக்காட்டலாம்.

இதில் துரதிர்ஷ்டம் என்றவென்றால், இதைப் பல நுகர்வோர் கவனித்தும் தம் மீது வலிந்து சுமத்தப்படும் இப்பொருளாதார சுமையை உணராமல் இருப்பதுதான். ஏற்கெனவே, கொரோனா தொற்றுக்குள் அல்லல்படும் மக்களை இந்த விலையேற்றங்களும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளன.

இது குறித்து எந்தவோர் அரசியல்வாதியும் வாய்திறப்பார்கள் என நுகர்வோர் எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில், நாட்டிலுள்ள பல அரசியல்வாதிகள் ஒருசில தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களாகவும் உள்ளனர். அவர்களே வியாபாரிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில், அவர்கள் எவ்வாறு நுகர்வோரின் அல்லல்கள் குறித்து அலட்டிக்கொள்வார்கள்?

எப்பொழுதுமே தயாரிப்பு நிறுவனங்கள், அவர்களின் தயாரிப்புகளை விற்றுத் தீர்த்திட பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவர். கொரோனா இடர் காலத்திலும் இது விதிவிலக்கல்ல. இக்காலத்திலும் அவர்களின் வியாபார தந்திரோபாயங்களின் வடிவங்கள் சில மாறியிருக்கலாமே தவிர, தயாரிப்புகளை விற்றுத் தீர்த்திடல் எனும் இலக்கு ஒருபோதும் மாறியிராது.

உதாரணமாக, முகக்கவசங்கள் மற்றும் கைகழுவும் திரவங்கள் சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் வைத்தியசாலை சார்ந்தோரே அதிகளவில் பயன்படுத்தினர். எனினும், இன்று அவை அனைவருக்கும் கட்டாயமாகியுள்ளன. இதனால் இவற்றை மையப்படுத்தியே புதிய புதிய தயாரிப்புகள் அன்றாடம் அறிமுகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன. பல கார் இறக்குமதி நிறுவனங்கள் கூட தற்போது இதில்தான் களமிறங்கியுள்ளன.

இவ்வாறு புதிய தயாரிப்புகளின் விளம்பரங்களில் மயங்கும் நுகர்வோரும் அதை வாங்கிச் செல்கின்றனர். உடனே தயாரிப்பு நிறுவனங்களும் அப்பாடா, பொருள்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என, இரு தவணையிலேயே அவற்றின் விலையை இரட்டிப்பாக்கி ஏற்றிவிடுகின்றனர்.

இது போதாதென சில நிறுவனங்கள், உற்பத்திகளின் பெட்டிகளின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது, பெட்டிகளினுள் உள்ள பொருள்களின் நிறையைக் குறைத்துவிடுகின்றனர்.

பெட்டிகளில் நிறையின் புதிய அளவையும் குறிப்பிட்டிருப்பர். எனினும், பெட்டிகளின் அளவில் மாற்றம் இல்லை; ஆகையால், நுகர்வோரும் அதைக் கவனியாது பழைய விலைக்கே, நிறை குறைக்கப்பட்ட தயாரிப்புகளையும் வாங்கிச் செல்கின்றனர்.

உளுந்து ஒரு கிலோ கிராம் தற்போது 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில், இட்லி மா என விற்கப்படும் சில பக்கெட்டுகளில் உளுந்தின் அளவைக் குறைத்திருப்பது பயன்படுத்தும் நுகர்வோருக்குப் புரியாமல் இல்லை.

தயாரிப்பு நிறுவனங்கள் போன்றே சுப்பர் மார்கெட்டுகள் கையாளும் தந்திரோபாயங்களும் நுகர்வேர் மீது மேலும் சுமையை ஏற்றிவிடுகின்றது.

‘வேலைக்காரன்’ எனும் தென்னிந்தியத் திரைப்படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு, அத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஃபகத் பாசில், சுப்பர் மார்கெட்டுகளின் சில தந்திரோபாயங்களை விளக்கியிருப்பார். அதாவது, ‘Supermarket in Super Marketing’ என்பது. ஏழைகள் எப்பொழுதும் ஏழைகளாகவே இருக்கின்றனர். அவர்கள் தமது தகுதிக்கேற்ப ஆசைப்படுகின்றனர். செல்வந்தர்கள் இருக்கும் பணத்தில் நிறைவாக வாழ்கின்றனர். ஆனால், இங்கு நடுத்தர வர்க்கத்தினரின் நிலையோ வேறு. இரு தோணியில் கால் வைத்தவர்களாகத் தான் அவர்கள் உள்ளனர்.

சுப்பர் மார்கெட்டுகளின் தந்திரங்களில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரே சிக்குகின்றனர். வெளிநாடுகளில் நுகர்வோர் எப்பொழுதும் காலாவதித் திகதியைப் பார்த்துத்தான் பொருள்கள் வாங்குவார்களாம். லண்டனில் தேய்காய்க்குக் கூட காலாவதித் திகதி இட்டிருப்பர். ஆனால், இங்கு நிலைமை அவ்வாறா இருக்கின்றது?

இந்தியாவில் ஒரு கிலோ கிராம் அரிசி 20 ரூபாய்க்குக் கூட வாங்க முடியும். அப்படியெனில், இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசி 54 ரூபாய்க்கா வாங்குகின்றோம்? உதாரணமாக கீரி சம்பா ஒரு கிலோ கிராமின் தற்போதைய விலை சுமார் 170 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சென்றுள்ளது. இவற்றுக்கிடையில் பொருள்களுக்கான தட்டுப்பாடுகளும் மக்களை மென்மேலும் சுமைக்குள் தள்ளிவிட்டுள்ளன.

பால்மா தட்டுப்பாடு, எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு எனப் பட்டியல் நீண்டுகொண்டுதான் போகிறது. பால்மா விநியோகிக்கும் கம்பனிகள் பால்மா வரவில்லை எனத் தெரிவித்து, பால்மா விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஒரு சில வர்த்தக நிலையங்களில், பால்மா தயாரிப்பு நிறுவனங்களின் பிற தயாரிப்புகளான யோகட் மற்றும் தேயிலை வாங்கினால் அந்த நிறுவனங்களின் பால்மாக்களை வாங்கக் கூடியதாக உள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் பால்மாவை வாங்கவே கையிலிருக்கும் பணத்தை திரும்ப திரும்ப சரிபார்க்கும் பொதுமக்களால், பால்மாவுடன் சேர்த்து வாங்க நிர்ப்பந்திக்கப்படும் பிற பொருள்களையும் எப்படி வாங்க முடியும்? இந்நிலை எங்கு சென்று முடியும் எனக் கூறுவதற்கு இல்லை.

எனவே, நுகர்வோரே! இந்தக் கட்டுரையையும் படித்தும் படிக்காதது போல் இல்லாமல், சற்று சிந்தியுங்கள். தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சுப்பர் மார்கெட்டு எனும் குள்ளநரிகளின் தந்திரத்துக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் வியர்வையைச் சிந்தி, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி சம்பாதித்த பணத்தில் வாங்கும் ஒவ்வொரு பொருள்களுக்கான காலாவதித் திகதி, அதன் நிறை, தரம், விலை என்பவற்றை நன்றாகப் பார்த்தே வாங்குங்கள். அதில் எந்தத் தவறும் இல்லை.

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter