பள்ளிவாசல் கொத்தணி உருவாகும் அபாயம்

பள்ளிவாசல் கொத்தணி உருவாகும் அபாயம் எச்சரிக்கும் வக்பு சபை

நாடளாவிய ரீதியில் கொவிட் 19 பள்ளிவாசல் கொத்தணியொன்று உருவாகும் அபாய நிலை உருவாகியுள்ளதாக சுகாதார தரப்பினரும், பாதுகாப்பு தரப்பினரும் வக்பு சபைக்கு அறிவித்துள்ளார்கள்.

முஸ்லிம் சமூகத்தில் சட்டத்தை மதிக்கும் தரப்பினரும் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே வக்புசபை சுகாதார வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும், நிபந்தனைகளையும் மீறும்பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதுடன் அவ்வாறான பள்ளிவாசல்களை மூடிவிடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக வக்பு சபையின் தலைவர் சட்டத் தரணி சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் ‘பள்ளிவாசல்களில் கொவிட் 19 வழிகாட்டல்கள், பள்ளிவாசல்களுக்கான நிபந்தனைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணித்து வக்பு சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி வக்பு சபை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளது.

பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்காக வருகை தருபவர்களில் பலர் மாஸ்க் (முகக்கவசம்) அணியாதும். தொழுகை விரிப்பு (முஸல்லாஹ் ) இன்றியும் வருகை தருவதாகவும் முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பெரும் எண்ணிக் கையானோர் பள்ளிவாசல்களிலே வுழுச் செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிவாசல்களையும் கொவிட்19 தொற்று தொடர்பான வழிகாட்டல்கள் நிபந்தனைகள் மீறப்படுகின்றனவா என கண்காணிக்கும்படி மாவட்டத்தின் அனைத்துப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளை கடிதம் மூலம் கோரியுள்ளார். கடிதத்தின் பிரதி பிரதிபொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வக்பு சபையும் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் பணியாற்றும் வக்பு சபையின் அதிகாரிகள் தங்களது பிரதேச பள்ளிவாசல்களை கண்காணித்து அறிக்கை சமர்ப் பிக்கும்படி வேண்டப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெறும் அறிக்கையின் அடிப்படையில் வக்புசபை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

கொவிட் 19 வழிகாட்டல்களையும் நிபந்தனைகளையும் பள்ளிவாசல்களுக்குள் மீறுவதற்கு துணைபோகும் பள்ளிவாசல் நிர்வாகிகள் இடைநிறுத்தப்படுவதுடன், அவ்வாறான பள்ளிவாசல்களை மூடிவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை மொத்த சனத்தொ கையில் 10 வீதமாக இருக்கும் நிலையில் முஸ்லிம்களின் கொவிட் 19 மரணவீதமும், தொற்றுவீதமும்45 வீதத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களின் கொவிட் 19 மரணவீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமூகம் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு விவாதங்களில் ஈடுபடாது சுகாதார பிரிவினரதும், வக்பு சபையினதும் வழிகாட்டல்களை கண்டிப்பாக தவறாது பின்பற்றவேண்டும். முஸ்லிம்களே நாட்டில் கொவிட் தொற்றினை அதிகரிக்கச் செய்தார்கள் என்ற பழிச்சொல்லுக்கு நாம் காரணமாய் விடக்கூடாது.

நாட்டின் நிலைமையையும் சமூகத்தின் நன்மையையும் கருத்திற்கொண்டு பள்ளிவாசல்களை கொவிட் 19 சுகாதார வழிகாட்டல் களைப் பின்பற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென வக்பு சபை முஸ்லிம் சமூகத்தை வேண்டிக் கொள்கிறது.

மாஸ்க், முஸல்லாஹ் இன்றியும், வுழுவை வீடுகளில் நிறைவேற்றிக் கொள்ளாமலும் பள்ளிவாசல்களுக்கு வருகை தரும் தொழுகையாளிகளுக்கு இடமளிக்கவேண்டாமெனவும் வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகிகளை வேண்டிக்கொள்கிறது என்றும் தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter