கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நல்லடக்கம் அதிகரித்துச் செல்கின்றன. அதை சாப்பமடு எனும் பகுதிக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்குமாறு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று மாவட்டத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரனின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இக் இக்கூட்டத்திலே தவிசாளர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓட்டமாவடி மஜ்மா நகரில் கொரோனா உடல்கள் அதிகரித்துச் செல்வதைத் தொடர்ந்து நாம் ஆராய்ந்த போது கிரான் பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்ட சாப்பமடு எனும் பிரதேசத்தை அடையாளம் கண்டுள்ளோம்.
அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த இடத்தில் உடல்களை நல்லடக்கம் செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த மையவாடியில் புதன்கிழமை 28 ஆம் திகதி வரை 1170 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்