இஷாலினி உயிரிழந்த தினத்தில் ரிஷாட் வீட்டு CCTV கமராக்களுக்கு நடந்தது என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும், சிறுமியின் சடலத்தை தோண்டியெடுத்து சிரேஷ்ட சட்ட வைத்திய நிபுணர்கள் குழு முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

டயகம சிறுமி குறைந்த வயதில் பணிக்கமர்த்தப்பட்டமை, தீக்காயங்களுக்குள்ளாகியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை தொடர்பில் விசாரணைக்கென சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவத்தில் முதல் சந்தேகநபரான தரகர் பொன்னையா பண்டாரம் (வயது 64) சார்பில் சட்டத்தரணி சஞ்சய கமகேவும் இரண்டாவது சந்தேக நபரான ரிஷாட்டின் மாமனார் மொஹமட் சஹாப்டீன் (வயது 70) சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் மூன்றாவது சந்தேகநபரான ரிஷாட்டின் மனைவி சஹாப்டீன் ஆயிஷா (வயது 46) சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும் மனைவியின் சகோதரர் சஹாப்டீன் இஸ்மதீன் (வயது 44) சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கப்சாலி ஹ{சைனும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

சட்டமா அதிபர் சார்பிலும் பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு சார்பிலும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜராகியிருந்தார்.
வழக்கு விசாரணையின்போது பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

நீண்டநாள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அச்சிறுமி அடித்துத் துன்புறுத்தப்பட்டற்கான அடையாளங்கள் இருப்பதாக அதில் தெரி விக்கப்பட்டிருக்கவில்லை. சிறுமி, தான் துன்புறுத் தப்படுவதாக குறிப்பிட்டாரென பெற்றோரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இவை ஒன்றுக்கொன்று முரணான காரணத்தினால் சடலத்தை தோண்டியெடுத்து சிரேஷ்ட சட்டவைத்திய நிபுணர்கள் குழு முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் சடலத்தை தோண்டியெடுப்பதற்கான அனுமதியை வழங்கி யதுடன் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் சட்டவைத்திய நிபுணர்கள் தெரிவுசெய்யப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும், ரிஷாட் பதியுதீன் எம்.பி.யின் வீட்டில் உள்ள சி.சி.ரி.வி. காணொளித் தடயங்களை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி அறிக்கை பெறுவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்துடன் ஆறு தொலைபேசி இலக்கங்கள் குறித்தும் அவை எவ்வெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் தொடர்பாடல்கள் குறித்தும் அறிக்கைகளை பெறுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.

இதேவேளை, சுகயீனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாலும் சந்தேகநபர்கள் அதிகாரம் படைத்தவர்கள் என்பதால் சாட்சியங்களை மாற்றக்கூடியவர்களென்றும் பிணை வழங்குவது விசாரணைகளை பாதிக்கும் என்றும் பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, உண்மைகளை மறைப்பதற்கு முன்னாள் அமைச்சரின் மாமா செயற்பட்டார் என்பது தெரியவருவதால் பிணை மறுக்கப்படுவதாக மேலதிக நீதவான் மன்றில் தெரிவித்தார்.

இவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களுடன் தொடர்புகளை பேணுபவர்கள் என்பதால் இவர்களுக்கு பிணை வழங்கப்படுமாக இருந் தால் சாட்சியாளர்களை அச்சுறுத்துவதற்கு மற்றும் சாட்சியங்களை அழிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பிணை வழங்கல் சட்டத்திட்டங்களுக்கு அமைய பிணை கோரிக்கை நிகாரிப்பதாகவும் மேலதி நீதவான் சுட்டிக் காட்டினார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சரின் மாமா, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கும்போது, அவருடைய பெயர் ஹிஷானி என்றும் வயது 18 என்றும் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுமி தீ காயங்களுக்குள்ளான அறையில் மண்ணெண்ணெய் போத்தல் மற்றும் லைட்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வீட்டில் இதற்கு முன்னர் பணிபுரிந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த வீட்டில் மண்ணெண்ணெய் பாவிப்பதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீனின் மாமாவிடம் முன்னெடுக் கப்பட்ட விசாரணைகளின்போது, சாரதியினால் மண்ணெண்ணெய் வாங்கிவரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தான் மண்ணெண்ணெய் வாங்கி வரவில்லை என தெரிவித்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் தெரிவித்தார்.

சிறுமி உயிரிழந்த பின்னர் அந்த வீட்டிலிருந்த பொலிஸ் உடைக்கு சமனான உடையணிந்த நபரொருவர், சிறுமியின் சகோதரருக்கு அழைப்பு விடுத்து, இந்த விடயத்தை இழுத்தடிப்புச் செய்ய வேண்டியதில்லை.

பொலிஸிற்குச் செல்ல வேண்டியதில்லை என அச்சுறுத்தி, ஆரம்பத்தில் 50,000 வழங்கப் பட்டுள்ளதுடன், மரண சடங்குகளுக்காக 50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 8 சி.சி.ரி.வி கமராக்கள் இருந்தாலும் மரணம் இடம்பெற்ற தினத்தில் மாலை 6.30 மணிக்கு பின்னர் 6 கெமராக்கள் செயலிழந்திருந்தாக தெரிவித்த, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த விடயம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மன்றில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவமானது பொதுமக்களிடையே குழப்பநிலையை தோற்றுவித்திருப்பதை கருத்திற்கொண்டு அவர்களின் பிணைமனுவை நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நிராகரித்தார். மேலும் சந்தேகநபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். -tamilan paper-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter