பள்ளிவாசல்களில் குர்பான் பிராணிகள் அறுக்க ஏன் தடை?
மாடறுப்பு தடை சட்டத்திற்கு நாம் காரணமாக கூடாது
பிற சமூகத்தினரின் விமர்சனங்கள், கொவிட் நிலைமைகளை கருத்திற் கொண்டே தீர்மானம் என்கிறார் வக்பு சபை தலைவர்
சமூகத்தின் நன்மை கருதியே பள்ளிவாசல்களில் உழ்ஹிய்யாவுக்கு மாடுகளை அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஏனைய சமூகத்தினரால் பிரச்சினைகள் உருவாகக்கூடாது என்பதுடன் கொவிட் 19 தொற்றிலிருந்தும் எம்மை காப்பாற்றிக் கொள்வதற்கான தீர்மானமேயன்றி சமூ கத்தை அசெளகரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவல்ல’ என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களில் உழ்ஹிய்யா வுக்கான மாடுகள் அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான தடை இதுதான் முதன் முறையல்ல. கடந்த வருடமும் இவ்வாறான தடை அமுல்படுத்தப்பட்டது. இவ்வாறான சுற்று நிருபமொன்றினை வக்பு சபை வெளியிட்டது.
மிருகவதைச் சட்டம் அதாவது மாடுகள் அறுப்பதை தடைசெய் யவும் சட்டம் விரைவில் பாராளுமன் றத்தில் கொண்டு வரப்படவுள்ளது. இச்சட்டத்துக்கு பெரும்பான்மை ஆதரவுண்டு. இந்நிலையில் நாம் பள்ளிவாசல்களை மாடுகள் அறுக்கும் இடங்களாக உபயோ கப்படுத்துவது புத்திசாலித்தன மானதல்ல.
ஊடகங்கள் இதனைப் பெரிது படுத்தலாம். மாடுகள் அறுப்பதை தடைசெய்யும் சட்டத்துக்கு இது சாத கமாக அமையலாம். எனவேதான் பள்ளிவாசல்களை இதற்காகப் பயன் படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
உழ்ஹிய்யாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளவர்கள் தங்கள் வீடுகளில் அல்லது வேறு இடங்களில் சட்டரீதியான ஆவணங்களுடன் சுகாதார அதிகாரிகளின் நிபந்தனைகளைப் பேணி மேற்கொள்வதே சிறந்ததாகும். பள்ளிவாசல்களில் மாடறுப்பதை தடை செய்வதை எதிர்ப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றார். (ஏ.ஆர்.ஏ.பரீல்)