ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட வேளையில் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத 20 ஆயிரம் தொழிலாளர்கள் கொழும்பில் பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்க்கொண்டுள்ளார்கள்.
இவர்களுக்கு மாத சம்பளத்தை வழங்கி பாதுகாப்பான முறையில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சி பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்த வகையில் காணப்படுகின்றது.
நிலைமையை கட்டுப்படுத்த நாடுதழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களும் அவதானத்திற்குரிய வலயமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் சுதந்திர வர்த்தக வலயங்களில் காணப்படும் கைத்தொழில் பேட்டைகளில் கடமையாற்றும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் தங்களின் சொந்த இடங்களுகக்கு செல்ல முடியாமல் தலைநகரிலேயே தங்கியுள்ளார்கள்.
இவர்கள் தற்போது பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் பல வகையான நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
கட்டுநாயக்க, பியகம மற்றும் சீத்தாவாக்கை ஆகிய சுதந்திர வர்த்தக வலயங்களில் காணப்படும் ஆடைகள் உற்பத்தி உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களே இவ்வாறு பாரிய சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த தொழிலாளர்கள் தொழில்புரியும் நிறுவனங்கள் இம்மாதத்திற்கான கொடுப்பனவை வழங்கி, அவர்களை பாதுகாப்பாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.