முகக்கவசத் தயாரிப்பில் ஈடுபடும் வாகன உற்பத்தி நிறுவனங்கள்

உலகலாவிய கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு உதவும் விதமாகக் கூடுதல் எண்ணிக்கையில் காற்றோட்ட சாதனங்களையும் (Ventilators), முகக்கவசங்களையும் தயாரிக்குமாறு அரசாங்கங்களினால் விடுக்கப்படும் அழைப்பை உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுச்செயற்பட ஆரம்பித்திருக்கின்றன.

பியட் கம்பனி, சீனாவிலுள்ள அதன் கார் தொழிற்சாலைகளில் ஒன்றை முகக்கவசங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றும் செயற்பாடுகளைக் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்திருக்கின்றது.

மாதமொன்றுக்கு சுமார் 10 இலட்சம் முகக்கவசங்கள் தயாரிப்பதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டிருக்கிறது. இக்கம்பனி எதிர்வரும் வாரங்களில் அதன் புதிய தயாரிப்புப் பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக் மான்லி பி.பி.சி செய்திச்சேவைக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்திருக்கிறார்.

ஏனைய மிகப்பெரிய கார் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு முறைகளை மாற்றி, காற்றோட்ட சாதனங்களைத் தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றன. அமெரிக்காவிலுள்ள ஜெனரல் மோட்டர்ஸ், போர்ட் மற்றும் டெஸ்லா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜப்பானிய நிஸான், ஐக்கிய இராச்சியத்தின் ஃபோர்மியூலா – 1 நிறுவனங்களுடன் சேர்ந்து கூடுதல் எண்ணிக்கையில் காற்றோட்ட சாதனங்களைத் தயாரிப்பதற்கு வளங்களைக் கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளன. அமெரிக்காவிலும்,

ஐரோப்பிலும், ஆசியாவிலும் உள்ள மிகப்பெரும் கார்த்தொழிற்சாலைகள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் வகையில் தங்களது தயாரிப்புக்களை நிறுத்தியிருக்கின்றன. ஆனால் அவை காற்றோட்ட சாதனங்களையும், வேறு முக்கிய மருத்துவ உபகரணங்களையும் தயாரிப்பதற்கு உறுதிபூண்டிருக்கின்றன.

ஜி.சி.ஹெல்த் கெயார் மற்றும் 3எம் ஆகிய சுகாதார உபகரணத்தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து போர்ட் நிறுவனம் புதிய வடிவிலான சுவாசக்கருவிகளையும், காற்றோட்ட சாதனங்களையும் வடிவமைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கார் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற காற்றாடிகள், பற்றரிகள் மற்றும் உதிரிப்பாகங்களை இந்தப் புதிய சாதனங்களைத் தயாரிப்பதற்கு போர்ட் நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது.

ஆனால் இந்த நிறுவனங்கள் அவற்றின் புதிய தயாரிப்புக்கள் எப்போது பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்படும் என்பதற்குக் கால அட்டவணையொன்றைக் குறிக்கவில்லை. ஆனால் போர்ட் நிறுவனம் வைத்தியசாலைப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கென ஏற்கனவே இருக்கும் பாதுகாப்புக் கருவிகளுக்குப் பதிலாக ஒளிபுகக்கூடிய முகக்கவசங்களைத் தயாரிக்கும் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

இந்தப் புதிய உற்பத்தி நடவடிக்கைகளின் முதல் தொகுதியாக 1000 தயாரிப்புக்களை இவ்வாரம் டெட்ரொயிட் பகுதியிலுள்ள 3 வைத்தியசாலைகளுக்கு போர்ட் நிறுவனம் விநியோகிக்கவிருக்கிறது. இவ்வாரம் அத்தகைய 75 ஆயிரம் ஒளிபுகும் முகக்கவசங்களைத் தயாரிக்க முடியுமென அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

‘போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், டெஸ்லா ஆகிய கம்பனிகள் காற்றோட்ட சாதனங்களையும், ஏனைய உலோக உற்பத்திகளையும் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவுசெய்தார்.

இதேவேளை காற்றோட்ட சாதனங்களின் தயாரிப்பைத் துரிதப்படுத்துவதற்கு உதவியாக மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கு அனுமதி வழங்குவதிலுள்ள தடைகளைத் தளர்த்தியிருப்பதாக அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள் தங்களது தற்போதைய உற்பத்திகளில் சுலபமாக மாற்றங்களைச் செய்யக்கூடியதாக இருக்கும். மருத்துவ சாதனங்களுக்குத் தற்போதிருக்கும் தட்டுப்பாட்டை மனதிற்கொண்டு மூலப்பொருள் விநியோகங்களில் மாற்றங்களைச் செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று அமெரிக்க சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகள் செயலாளர் அலெக்ஸ் அஸார் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறார். மருத்துவ உபகரண விநியோகங்களை அதிகரிப்பதற்கு உதவியாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி முறைகளில் சுலபமாக மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் உற்பத்திகளை மாற்றுவது அத்தனை இலகுவானதாக இருக்கப்போவதில்லை என்று சில நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

காற்றோட்டச் சாதனமொன்றை தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களும், உதிரிப்பாகங்களும் மிகவும் பிரத்யேகமானவையாகும். அத்துடன் அவற்றைத் தயாரிப்பதற்கான அறிவுநுட்பம் தேவை என்று காற்றோட்ட சாதனங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஹமில்டன் மெடிக்கலின் தலைவரான ஜென்ஸ் ஹல்லெக் கூறினார்.

‘இவை மிகவும் கூருணர்வுடைய இயந்திரங்களாகும். அவற்றில் பெருமளவு வன்பொருட்கள் மாத்திரமல்ல, மென்பொருட்களும் அடங்கியிருக்கின்றன. அவற்றின் கூறுகளில் ஒன்று சரியாகச் செயற்படவில்லையெனினும் முழு இயந்திரமும் செயற்படாமல் போய்விடும். அதனை மீண்டும் பயன்படுத்த முடியாது” என்றும் கூறினார்.

இதேவேளை இந்திய கோடீஸ்வரரான ஆனந்த் மஹிந்ரா தனது நிறுவனமான மஹிந்ரா குழுமம் காற்றோட்ட சாதனங்களைத் தயாரிப்பதற்கு அதன் தொழிற்சாலைகளை எவ்வாறு மாற்றிப்பயன்படுத்துவது என்ற ஆராய்வை விரைவில் ஆரம்பிக்கும் என்று கூறினார். மஹிந்ரா குழுமம் உலகின் மிகப்பெரிய உழவியந்திர தயாரிப்பு நிறுவனம் மாத்திரமல்ல, இந்தியாவின் இலத்திரனியல் வாகனத் தயாரிப்பு நிறுவனமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters Flag Counter