நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என மீளவும் நாடாளுமன்றுக்கு தெரிவான ரஞ்சன் ராமநாயக்க சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இன்று -10- ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் தனது சந்தேகத்தை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்
“எனது மாமனாராகிய விஜய குமாரணதுங்க தேர்தலில் போட்டியிட்டபோது வாக்கெண்ணும் பணிநேரத்தில் மூன்றுமுறை மின்வெட்டு ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அவருடைய வாக்குகள் திட்டமிட்ட சூழ்ச்சியின்படி குறைத்துக் காட்டப்பட்டன. இறுதியில் அவருக்கு தோல்வி ஏற்பட்டது.
அதேபோல இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி அமரர் வில்லியம் கொபல்லாவவின் வாக்கினையும் கள்ளவாக்கு என்றபடி எவரோ பதிவிட்ட சம்பவமும் அரங்கேறியிருந்தது. இதனைப்போலவே நமது நாட்டில் தேர்தல் என்பது நீதியானதாக நடக்காது. அப்படி நீதியாக நடந்தால் அது பிரச்சினைக்குரியதாகிவிடும்.
கடந்த தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துவந்த அட்மிரல் சரத் வீரசேகர இம்முறை கொழும்பில் முதலிடத்தை வகித்துவந்த விமல் வீரவன்சவை வீழ்த்தி முதலிடத்தை எப்படி பெற்றார்?
இதேபோல கம்பஹா மாவட்டத்திலும் முதலிடம் பிடிக்கும் பிரசன்ன ரணதுங்கவை வீழ்த்தி நாலக்க கொடஹேவா எப்படி முதலிடத்தைப் பெற்றார்? மாத்தறை, அம்பாந்தோட்டையிலும் இப்படியே நிகழ்ந்துள்ளது. இது சந்தேகத்திற்குரிய விடயமாகும்” – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.