நியூசிலாந்தின் மவ்ரி முஸ்லிம்கள் (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்)

உலகின் தலைச்சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரும், நியூசிலாந்த்தின் வரலாற்றிலிலேயே அதிக வருமானம் பெறும் ரக்பி வீரருமான சோனி பில் வில்லியம்ஸ், 2009-ஆம் ஆண்டு இஸ்லாமை தழுவுவதாக கூறியபோது பலரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மனைவியிடம் குடித்து விட்டு தகராறு செய்தது முதற்கொண்டு பல்வேறு தவறான செய்கைகளுக்காக அப்போது விமர்சனங்களை எதிர்க்கொண்டிருந்தார் வில்லியம்ஸ். ஆக, இப்படியான பின்னணி கொண்ட ஒருவர் இஸ்லாமை தழுவிய போது அவரது நாட்டு மக்கள் வியப்படைந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு, 2019-ல், எப்படியான மாற்றத்தை இஸ்லாம் தன்னிடம் கொண்டுவந்தது என்பது குறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், ‘நான் பெண்களை விரட்டிக்கொண்டிருந்தேன், அதிகமதிகமாக குடித்தேன். விரும்பிய அளவு செலவு செய்தேன். யாரும் வாழாத வாழ்வை வாழ்வதாக நினைத்தேன். இருப்பினும் இந்த அனுபவம் எனக்கு எதை கொடுத்தது? இதயத்தில் வெற்றிடத்தை மட்டுமே கொடுத்தது. இஸ்லாம் என்னிடத்தில் பாசிட்டிவ்-வான எண்ணங்களை கொண்டுவந்தது. ஆம், இதற்கு காலம் எடுத்தது. ஒரு வெற்றிகரமான விளையாட்டு வீரனாக என்னை மாற்றியது. இன்று நான் இருக்கும் நிலைக்கு இஸ்லாமே காரணம். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்’ என்று நெகிழ்வுடன் கூறினார் வில்லியம்ஸ்.

மிகத் தவறான வழியில் இருந்த தன் மகனை இஸ்லாம் நேர்வழிப்படுத்தியதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த வில்லியம்ஸ்சின் தாயாரும், சகோதரரும் பிறகு இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர். சோனி பில் வில்லியம்ஸ் மவ்ரி இனத்தை சேர்ந்தவராவார். மவ்ரி இனத்தவர், கடந்த ஏழு நூற்றாண்டுகளாக நியூஸிலாந்தில் வசிக்கும் பழங்குடி மக்களாவர். இன்று, இவர்களிடையே வேகமாக பரவும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. 2000-ஆம் ஆண்டில் 99 ஆக இருந்த மவ்ரி முஸ்லிம் எண்ணிக்கை, 2013 நியூஸிலாந்து சென்சஸ்படி 1536 – ஆக உயர்ந்திருக்கிறது. இஸ்லாமை ஏற்றதற்கு, இம்மார்க்கம் போதிக்கும் சுயஒழுக்க நெறிகளையே பலரும் காரணமாக கூறுகின்றனர்.

மிக வீரியமான செயல்பாட்டிற்கு பெயர்பெற்றவர்கள் மவ்ரி முஸ்லிம்கள். அளவில் மிகக் சிறிய சமுதாயமாக இருந்தாலும் மவ்ரி மொழியில் குர்ஆன் மொழிபெயர்ப்பை வைத்திருக்கிறார்கள் (படம் 2). மவ்ரி முஸ்லிம் அசோசியேஷனின் தலைவரான அமோரங்கி இஷாக் உலகின் செல்வாக்கு மிகுந்த 500 முஸ்லிம்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். முஹம்மது நபி (ஸல்) கார்ட்டூன் பிரச்சனையின் போது, நியூஸிலாந்தின் ஊடகம் ஒன்று அதனை மறுபதிப்பு செய்ய, தீவிர போராட்டங்களின் மூலம் அவ்வூடகத்தை திணறடித்தார்கள் இவர்கள். முடிவில், ‘மன்னிப்பு கேட்க மாட்டோம் அதே நேரம் இனி இதுபோன்ற கார்ட்டூன்களை பிரசுரிக்கவும் மாட்டோம்’ என பின்வாங்கியது அந்த ஊடகம்.

கிரிஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், மவ்ரி முஸ்லிம்களுடன் இணைந்து ஏனைய மவ்ரி இன மக்களும் பள்ளிவாசல்களுக்கு பாதுகாவலாக நின்ற சம்பவங்கள் எல்லாம் நெகிழ்ச்சி ஊட்டுபவை. மண்ணின் பூர்வகுடிகளான இவர்கள், நியூஸிலாந்த்தில் குடியேறும் ஏனைய முஸ்லிம்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் உறுதுணையாக இருக்கின்றனர். ஒரு மிக அழகான, முன்னுதாரணமான சமூகமாக மவ்ரி முஸ்லிம்கள் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

செய்திக்கான ஆதாரங்கள்: பிபிசி, நியூஸிலாந்து ஊடகங்கள் மற்றும் விக்கிபீடியா

Check Also

மாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..!

“பெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு …

Free Visitor Counters Flag Counter