(இராஜதுரை ஹஷான்) பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு இடமளித்திருக்கமாட்டார். எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் இல்லாவிடின் மக்கள் வீதிக்கிறங்கி போராடுவார்கள். பயணத்தடை அமுலில் உள்ள காரணத்தினாலேயே மக்கள் அமைதியாக உள்ளார்கள். ஆகவே அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என கிராமிய வீதிகள் மற்றும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியிலும், வாழ்வாதார ரீதியிலும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளமை பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடாகும். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பெருமளவிற்கு பாதிப்பு ஏற்படாது என சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் கூறுகின்றனர்.
ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பினால் பெருமளவிற்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அது சார்ந்த பல துறைகளில் நெருக்கடி நிலை ஏற்படும். மீன்பிடி கைத்தொழில், போக்குவரத்து என பல தரப்பிட்ட துறைகள் மற்றும் சேவைகள் பாதிக்கப்படும். இதனை சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் அறிய மாட்டார்கள். எரிபொருள் விலை அதிகரிக்கும் போது நடுத்தர மக்களே பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சக்தி வலு அமைச்சர் உதயகம்மன்பிலவை சுட்டிக்காட்டி வெளியிட்ட அறிக்கை தற்போதைய அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் காணப்பட்ட அதிருப்தியினையே பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விடயத்தில் குறிப்பிடப்பட்ட பிரதான விடயம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எரிபொருள் விலையினை குறைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும். இல்லாவிடின் மக்கள் வீதிக்கு இறங்கி போராடுவார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது அமுலில் உள்ள பயணத்தடை மற்றும், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல் ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டு பொது மக்கள் அமைதியாக உள்ளார்கள். இதனை பலவீனமாக கருத கூடாது என்றார். -வீரகேசரி பத்திரிகை-