கொரோனா தொற்று பரவல் நிலைமைக்கு மத்தியில், வாகன இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் கார்கள் பலவற்றின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது காணப்படும் பாரிய கேள்விக்கு மத்தியில் நாட்டில் புதிய கார்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இறக்குமதி தடையால், வாகன கேள்வி மற்றும் நிரம்பல் விகிதத்துக்கு ஏற்ப நாளுக்கு நாள் வாகன விலைகள் அதிகரிக்கின்றன.
வெகன் ஆர் ரக வாகனங்களின் விலை சுமார் 5 இலட்சத்தினால், அதிகரித்துள்ளதுடன், சில ஜீப் ரக வாகனங்களின் விலைகள் 40 முதல் 50 இலட்சம் வரை அதிகரித்துள்ளன.
வெகன் ஆர், டொயோட்டா போன்ற முன்னணி வாகனங்களின் விலைகளே அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போது, 75 சதவீதமான வாகன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
90 சதவீதமான இறக்குமதியாளர்கள் வங்கிகளில் கடன் பெற்றே வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, இறக்குமதிக்கு மீள அனுமதியளிக்கப்படும் வரையில் தமக்கான சலுகைகளை வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். Thinakaran