கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நகரங்களும் முழுமையாக அடைக்கப்பட்டு வருகின்றன. எனவே மக்கள் இயல்பாகவே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு கவலை தரும் செய்திகளுக்கு மத்தியில் மனதிற்கு நம்பிக்கை அளிப்பது போன்ற நன்மைகளும் நடக்கின்றன.
மாசு குறைகிறது
பல நாடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சீனா மற்றும் வட இத்தாலியில் காற்றில் நைட்ரஜென் டை ஆக்சைட் அளவு குறைந்துள்ளது. காற்றை மாசுபடுத்தி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு காற்றில் குறைந்து காணப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் காரில் இருந்து வெளியேறும் புகை குறைந்துள்ளதால் காற்றில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவும் குறைந்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள ஆர்வலர்கள் பிபிசியிடம் பேசுகையில், தற்போது பெரும்பாலும் கார்களில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைட் அளவும் குறைந்து காணப்படுகிறது என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கார்பன் மோனாக்சைட் 50% குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
விமானப் போக்குவரத்தும் சில நாடுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் காற்றுமாசு அளவைக் கட்டுப்படுத்தும்.
சுத்தமாகும் நீர்நிலைகள்
வெனிஸ் நகரவாசிகள் தங்கள் நகரத்தை சூழ்ந்திருக்கும் தண்ணீர் மாசு இல்லாமல் தூய்மையாக காணப்படுவதாக கூறுகின்றனர்.
வடக்கு இத்தாலியில் பிரபலமான சுற்றுலா தலமான வெனிஸ் நகர கால்வாய்த் தெருக்களில் படகு போக்குவரத்து முடங்கியுள்ளதால் நகரம் முழுவதும் தண்ணீர் மிகத் தெளிவாக இருக்கிறது. தற்போது அந்த தண்ணீரில் மீன்களை கூட காணமுடிகிறது.
மக்கள் மத்தியில் இரக்க குணம்
பல இடங்களில் கடை அடைப்புக்கு முன்பு தேவையான உணவு பொருட்களை வாங்க மக்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஆனால் அதே சமயம் மக்கள் மத்தியில் இரக்க குணமும் பரவலாக காணப்படுகிறது.
நியூயார்க்கை சேர்ந்த இருவர் 1,300 தன்னார்வலர்களை ஒன்று திரட்டி 72 மணிநேரத்தில் அத்தியாவசியப் பொருள்களையும், மருந்து பொருட்களையும் முதியவர்களுக்கும், வெளியில் வர இயலாத மக்களுக்கும் வீட்டிற்கே கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் குழுக்களாக இணைந்து வைரசை கட்டுப்படுத்த தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். கனடாவிலும் சில குழுக்கள் இவ்வாறு செயல்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் மட்டும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பலர் நன்கொடைகள் அளித்து வருகின்றனர். உணவு தயாரிக்க செய்முறை விளக்கங்களை பகிர்கின்றனர், தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கான உடற்பயிற்சி அறிவுரைகளையும் பலர் பகிர்கின்றனர்.
மக்களிடையே ஒற்றுமை
கடுமையான அலுவலகப் பணிக்கு பிறகு வீட்டிற்கு வந்து உறங்குவது என பரபரப்பான சூழலில் நாம் இயங்கும்போது வெளியுலகத்தில் இருந்து நாம் தனித்து விடப்பட்டது போல உணருவோம். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பிறகு அனைத்து மக்களும் ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்துள்ளனர்.
இத்தாலியில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்ட சூழலில், மக்கள் அனைவரும் வீட்டு பால்கனியில் நின்றபடி பாடல் பாடி, இசை கருவிகள் வாசித்து கூடி மகிழ்கின்றனர்.
தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிபுணர் அபார்ட்மெண்டின் நடுவில் நின்று உடல் பயிச்சி மேற்கொள்கிறார். உடற்பயிற்சி நிபுணர் மேற்கொள்ளும் பயிற்சிகளை அதே அபார்ட்மெண்டில் உள்ள மக்கள் தங்கள் பால்கனியில் இருந்தபடி கற்றுக்கொண்டு தாங்களும் அதை தொடர்ந்து செய்கின்றனர்.
மக்கள் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதால் மொபைல் மூலம் பழைய நண்பர்களை தொடர்ப்பு கொண்டு பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரசால் மருத்துவத் துறையில் பணியுரியும் ஊழியர்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். லண்டனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உதவுகின்றனர்.
திறமை, ஆற்றல் அதிகரிக்கிறது
மில்லியன் கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பலர் வீட்டில் இருந்தபடி திறமையை வளர்த்துக்கொள்கின்றனர். சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் தங்களின் பொழுதுபோக்கு குறித்து தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கமாக பதிவிடுகின்றனர். புத்தகம் படிப்பது, கேக் செய்வது, ஓவியம் வரைதல் என பல திறமைகளை மக்கள் வளர்த்துக்கொள்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஓவிய ஆசிரியர் ஒருவர் இணையம் மூலம் தன் மாணவர்களுக்கு ஓவியம் வரைய கற்றுத்தருகிறார்.