Ivan Romano/Getty Images

பாலஸ்தீனத்துக்கு எதிராக இத்தாலி அனுப்பும் ஆயுதங்கள்!கப்பலில் ஏற்ற மறுத்த துறைமுக ஊழியர்கள்!

மனிதம் என்பது வெகு சாதாரண மனிதரிகளிடமிருந்து எது குறித்தும் யோசிக்காமல் தோன்றிவிடுகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக இத்தாலியின் சுமைதூக்கும் தொழிலாளர்களின் செயல் அமைந்திருக்கிறது.

பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னை சமீபத்திய நாள்களாக போர் மூளுமோ என்ற அளவுக்குத் தீவிரமாகிவருகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவான ஹமாஸ் இரண்டும் மாறி மாறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சர்வதேச தரப்பு சமாதான முயற்சிகளை மேற்கொண்டும் தாக்குதல்கள் நின்றபாடில்லை. பல அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுவருகின்றனர். இருதரப்பிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன என பொதுவாகக் கூறினாலும் பாலஸ்தீன தரப்பில்தான் இழப்புகள் அதிகம். அங்கு குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். பெண்கள்,குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் எட்டு பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இத்தாலிய சுமை தூக்கும் தொழிலாளர்களின் மனிதநேயம்:

உலக நாடுகள் தங்களின் கொள்கையைப் பொறுத்து இஸ்ரேலின் பக்கமா அல்லது பாலஸ்தீனத்தின் பக்கமா என்று பேசிக்கொண்டிருகையில், ‘மனிதம்’ என்பது சாதாரண மனிதர்களிடமிருந்து, எதைப் பற்றியும் யோசிக்காமல் தோன்றிவிடுகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக இத்தாலியின் சுமைதூக்கும் தொழிலாளர்களின் செயல் அமைந்துள்ளது.

இஸ்ரேலின் அஷ்தோத் நகரத்திலுள்ள துறைமுகத்துக்கு இத்தாலியின் லிவார்னோ நகரிலிருந்து வெடிபொருள்களையும், ஆயுதங்களையும் சுமந்து செல்லக் காத்திருந்தது ஒரு கப்பல். ஆனால் இத்தாலியின் லிவார்னோ துறைமுகத்தில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தயங்கி நின்றனர். தாங்கள் அந்தக் கப்பலில் ஏற்றி நிரப்ப வேண்டியது பாலத்தீன மக்களின் உயிரைக் காவு வாங்கக்கூடிய இஸ்ரேல் ராணுவத்துக்கான வெடிபொருள்களும், ஆயுதங்களும்தான் என்பது தெரிந்தவுடன், தாங்கள் அந்த பாவச் செயலில் ஈடுபட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கான சங்கம், லிவார்னோ துறைமுகம் ஒருபோதும் பாலஸ்தீன மக்களின் படுகொலையில் பங்கெடுக்காது என்றும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் சுமைதூக்கும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இத்தாலி நாட்டின் பிற பகுதிகளிலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வீதிகளில் கூடிய மக்கள் “எங்கள் நிலத்தில் என்ன நடக்கிறது என்பதை உலக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தனர். இத்தாலி நாட்டிலிருந்து செல்லும் ஆயுதங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இத்தாலிய அரசுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கோரிக்கையும் வைத்துள்ளன. சூழல் எவ்வாறாக இருந்தாலும் இரு வாரங்களாகக் கடுமையாக நடைபெற்றுவரும் மோதலில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ஏதும் அறியா பொதுமக்களே.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters Flag Counter