18,000 பேர் சிகிச்சையில் :6,000 பேர் தனிமைப்படுத்தலில்: ஒரு வாரத்தில் 11,000 கொரோனா தொற்றாளர்கள் – முழு விபரம்

நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பமானதன் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. 

வெள்ளியன்று மாத்திரம் ஒரே நாளில் 19 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய கொவிட் மரணங்கள் பதிவானமை இது முதல்தடவையாகும். 

தனிமைப்படுத்தல் அல்லது சிகிச்சைகளை விரும்பாத சிலர் குறுகிய எண்ணங்களால் தொற்று அறிகுறிகள் ஏற்படுகின்ற போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாமையின் காரணமாகவே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.  

தற்போது பரவியுள்ள வீரியம் மிக்க வைரஸ் காரணமாக எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது என்று சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன. 

நாட்டில் கொவிட் பரவலானது மோசனமான நிலையில் சென்று கொண்டிருப்பதாகவே மருத்துவதுறை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர். எனவே போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில் யாழில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த தேசிய வெசாக் உற்வசவமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினமும் கொழும்பு , காலி, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் முடக்கப்பட்டன. மேலும் கடந்த 2 ஆம் திகதி முதல் இன்று வரையான ஒரு வார காலத்தில் மாத்திரம் 11 476 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அரச மருத்துவ சங்கம்

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்வதற்கு அல்லது வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு விருப்பமில்லாது சிலர் , தமது குறுகிய எண்ணங்கள் காரணமாக தொற்று அறிகுறிகள் ஏற்படுகின்ற போதிலும் அவற்றை கவனத்தில் கொள்ளாமலுள்ளனர். இவ்வாறானவர்களுக்கு வைரஸ் நிலைமை தீவிரமடைந்த பின்னர் தாமதித்து வைத்தியசாலைகளை நாடுகின்றமையும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகிறது என்று அரச மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

எனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அறிகுறிகள் தீவிரமடைந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். அதேபோன்று அறிகுறிகள் காணப்படுகின்ற போதிலும் , தொற்று உறுதிப்படுத்தப்படாதவர்கள் விரைவாக அதனை உறுதி செய்துகொள்ள நடவடிக்கை எடுப்பது மரணங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரே நாளில் 19 மரணங்கள்

நேற்றைய தினம் நாட்டில் கொவிட் தொற்றால் ஏற்பட்ட 19 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இலங்கையில் ஒரே நாளில் அதிக கொவிட் மரணங்கள் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சுனந்தபுரம், இளவாளை, கோங்கஹவெல, ரத்மலானை, தெஹியத்தகண்டி, பதுளை, வாத்துவ, கொழும்பு-3, ரத்தொழுகம, றாகம, போத்தல, அலபலாதெனிய, அங்குலுகஹ, ஹிக்கடுவ, நுவரெலியா மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலும் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையிலும் 11 ஆண்களும் 8 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணி வரை 1896 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை  1,23,2340 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு இலட்சத்து 3098 பேர் குணமடைந்துள்ளதோடு , 18 446 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தாண்டின் பின்னர் இன்று மாலை வரையான காலப்பகுதியில் மாத்திரம் 25 651 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த 878 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.  மேலும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற 36 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3892 நபர்களும் , 38 தனியார் தனிமைப்படுத்தல் நிலையங்களில் (ஹோட்டல்களில்) 2473 நபர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

கொழும்பு – பிலியந்தல பொலிஸ் பிரிவில் நிவந்திடிய மற்றும் மாம்பே கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , மஹரகம பொலிஸ் பிரிவில் எரவ்வல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

காலி – ஹபராதுவ பொலிஸ் பிரிவில் கொக்கல 1 மற்றும் 2 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , அஹங்கம பொலிஸ் பிரிவில் மீகஹாகொட , மாலியகொட மற்றும் பியதிகம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலபிட்டி, வத்தள, பள்ளியாவத்தை தெற்கு, ஹேக்கித்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , மஹாபாக பொலிஸ் பிரிவில் கெரங்கபொக்குன, குழுதபிட்ட மற்றும் மத்துமகல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் நாகொட கிராம உத்தியோகத்தர் பிரிவில் விஜிதா வீதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவு – வித்யாசார கிராம உத்தியோகத்தர் பிரிவில் போசிறிபுற மற்றும் மஹாவஸ்கடுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மத்துகம பொலிஸ் பிரிவு – ஹடதொடவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் கொரதுஹேன பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் கொடிகாமம் மத்தி மற்றும் கொடிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலிலுள்ளன.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

குருகாணல் மாவட்டம் – குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் குளியாபிட்டி நகர் , அஸ்செத்தும, மீகஹகொட்டுவ, திக்ஹெர, திகல்ல, கபலேவ, கிரிந்தவ, அனுக்கனே, மேல் கழுகமுவ, வெரலுகம, தப்போமுல்ல, தண்டகமுவ மேற்கு மற்றும் கிழக்கு, மடக்கும்புருமுல்ல, வீரம்புவ மேல் மற்றும் கீழ் பிரிவு, கோன்கஹகெதர, துன்மோதர மற்றும் கெடவலேகெதர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளும் , அம்பாறை – உஹண பொலிஸ் பிரிவில் குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

தேசிய வெசாக் நிகழ்வு இரத்து

 யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக விகாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசாக் நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஒரு வாரத்தை அரச வெசாக் வாரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வை யாழ்ப்பாணம் நயினாதீவில் நடத்த புத்தசாசன அமைச்சு திட்டமிட்டிருந்தது. தற்போது நிலவும் கொரோனா நிலையை கருத்திற்கொண்டு வெசாக் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாடுமாறு புத்த சாசன அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன குறிப்பிட்டுள்ளார். (எம்.மனோசித்ரா) -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter