சாய்ந்தமருதுவை உலுக்கிய மீனவர்களின் மரணம்

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகரின் சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது – 42), எம்.எஸ்.அர்சாத் (வயது-35) ஆகிய இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஜனாஸாவாக கரை திரும்பிய சோகம் கடந்த வெள்ளியன்று இரவு சாய்ந்தமருதில் பதிவானது. இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் அடுத்தநாள் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் காயமடைந்தவர்களும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பிலான தமிழனின் பத்திரிகையில் வந்த விசேட தொகுப்பு

மீன்பிடி என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய பங்கை வகிக்கும் ஒன்றாகும். அதிலும் கிழக்கு மாகாணம் மீன்பிடியில் எப்போதும் முதன்மையான பிரதேசமாக இருந்துவருகிறது. கிழக்கு மக்களில் முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் மீன்பிடியுடனும் கடலுடனும் கடற்கரையுடனும் நேரடி உறவைக்கொண்டவர்கள். சுனாமியால் அதியுச்ச பாதிப்பை கிழக்கு மக்கள் சந்தித்திருந்தும் கடலுடனான காதல் முறியவில்லை எனலாம். அதிலும் அம்பாறை மாவட்டத்தில் சுனாமி பாதிப்பு அதிகம். கிராமங்கள் அடியோடு அழிந்தது முதல் உயிர்கள் பல ஆயிரம் அழிந்ததுவரை அந்த மக்களின் இழப்புகள் அதிகம். அப்படி போராட்டம் இருக்கும் திசைக்கு சம பலம் மிக்கதாக மரணங்களும் இவர்களை விட்டுவைத்த பாடில்லை.

மீன்பிடி என்பது கிழக்கு மீனவர்களில் அதிகமானவர்களுக்கு பரம்பரை தொழில். அப்படி பரம்பரையாக தொழில் செய்யும் பலரும் தன்னுடைய மீனவ வாழ்க்கையில் சந்திக்காத பல சம்பவங்களையும், அனுபவங்களையும் அண்மைய நாட்களில் அனுபவித்து வருகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.

அப்படி யாரும் நினைக்காத அல்லது வரலாற்றில் கிழக்கு மீனவர்கள் கேள்விப்படாத செய்தியொன்றை அண்மையில் அனுபவமாகக் கண்டார்கள். வழமைபோன்று தன்னுடைய பெருநாளை சந்தோஷமாக மனைவி,மக்களுடன் கொண்டாட முடியும். ஏழ்மையை போக்க முடியும் குடும்பம் சந்தோஷம் நிறைந்ததாக வாழும் எனும் பெரும் கனவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு மீன்பிடிக்க சாய்ந்தமருது துறையிலிருந்து கடலை நோக்கி பயணமானார்கள் நால்வர்.

நால்வரும் இளம் வயதினர். தசாப்தம் கடந்த கடலின் காதலும், அனுபவமும், கடலின் நெளிவுசுளிவும் தெரிந்த மீனவர்கள் அவர்கள். குடும்பத்தாரிடமிருந்து விடைபெற்ற அவர்கள் இந்த உலகைவிட்டே விடைபெறுவார்கள் என்பதை யாரும் எண்ணியிருக்கமாட்டார்கள்.

கடலுக்குள் சென்றால் பிணம், வெளியே வந்தால் பணம் எனும் மூத்தோர் வாக்கு இருக்கிறது. மீனவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்? எனும் கேள்வி நீண்டகாலமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பதுபோன்று பாதுகாப்பு நடவடிக்கை செய்துகொடுக்க அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவார்களா? மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் செல்வதானது யுத்தம் செய்ய செல்வதைப் போன்றதாகும். பல மணித்தியாலங்கள் கடலுடன் போராடி பயணஞ்செய்து மீன்பிடியில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து மீண்டும் கரைக்கு உயிருடன் திரும்பி வருவதற்கான எந்தவித உத்தரவாதமுமில்லை. கடந்த காலங்களில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போனவர்களின் பட்டியல் நீளமானது.

அத்துடன், இந்தியா, மாலைதீவு, மலேசியா, இந்தோனேசியா போன்ற பகுதிகளில் படகுகள் திசை மாறிச்சென்று பல வாரங்களுக்குப் பின்பு காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் ஏராளம். வரலாற்றில் பதிவாகியுள்ளது. அது போலவே ஒரு துயர் சம்பவமாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருது பிரதேசம் முழுவதும் ஒரு பதற்றம் நிலவியது. மீன்பிடிக்கப்போன இருவர் மின்னலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக கதை இந்தியாவில் பரவும் கொரோனாவை விட வேகமாக சாய்ந்தமருதில் பரவிக்கொண்டிருந்த சூழ்நிலையில், மக்கள் சாரைசாரையாக ஜனாஸாக்கள் கொண்டுவரப்படும் இடமாக அறிவிக்கப்பட்ட ஆப்பிள் தோட்டம் எனப்படும் இடத்திற்கு அருகில் கூடி நிற்கிறார்கள்.

பாதுகாப்புப் படையும் சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்கக்கோரி தனக்கே உரிய பாணியில் மக்களை துரத்திக்கொண்டிருக்க, கல்முனை பொலிஸாரும் வந்துசேர்கிறார்கள். ஜனாஸாக்கள் சிறிய இயந்திர படகினுடாக கரைக்கு கொண்டுவரப்பட்டு காயமுற்ற மீதி இருவரும் வேறு படகினுடாக கரைக்கு அழைத்துவரப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களில் சாய்ந்தமருது தனியார் நிறுவன அம்பியூலன்ஸில் ஜனாஸாக்களும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பிண அறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டது.

குடும்பத்தினரின் அழுகுரல் நீடிக்கிறது. மறுநாள் (சனிக்கிழமை) காலை ‘தமிழன்’ பத்திரிகையின் செய்திகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாகத்தின் அனுமதியுடன் எட்டாம் நோயாளர் விடுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சைபெற்றுவந்த ஏ.நௌசாத்தை (31 வயது) சந்தித்து நடந்த விடயங்கள் தொடர்பில் வினவினேன்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) சாய்ந்தமருதிலிருந்து பெரிய படகொன்றில் மீன்பிடிப்பதற்காக அன்சார், அர்சாத், அன்வர் மற்றும் நௌசாத் ஆகிய நாங்கள் நால்வரும் கடலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் நால்வரும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் வழமையாக கடலில் சுமார் ஒரு வாரகாலம் தங்கி மீன் பிடிப்பது வழமையாகும். கரையிலிருந்து கிளம்பி நான்காவது நாள் (வெள்ளிக்கிழமை) காலை, கடலில் மழை பெய்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அந்தப் படகில் பயணித்த நிலையில், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் ஏ.நௌசாத் (31 வயது) எனக்கு தெரிவித்தார்.

மேலும் அவர் என்னிடம் பேசிய போது, “வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தூக்கத்திலிருந்து விழித்து, கடலில் போட்டிருந்த வலைகளை படகில் ஏற்றுவதற்குத் தயாரானோம். 50 துண்டளவில் வலைகள் ஏற்றிக்கொண்டிருந்தபோது கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது. வாழைச்சேனை கடலிலிருந்து கரைக்கு வருவதற்கு 14 மணித்தியாலம் ஓடவேண்டிய பயண தூரத்தில் அப்போது எங்கள் படகு கடலில் தரித்து நின்றிருந்தது.

வலைகளை படகில் ஏற்றிய நிலையில், தேநீர் தயாரித்து குடித்தோம், கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது கடுமையான காற்று வீசியதால் நாம் படகின் உள்ளே வந்தோம். அன்சார் படகின் வெளிப்பகுதியில் நின்றிருந்தார். அவரை உள்ளே அழைத்தோம், படகில் வலை கொழுவியுள்ளதால் அதனை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார். அதனால் நாங்களும் படகின் வெளிப்பகுதிக்கு வந்தோம். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

படார் என்று வெடிப்பதுபோல் ஒரு சத்தம் கேட்டது. நான் உணர்விழந்துவிட்டேன். சற்று நேரத்தின் பின்னர்தான் கண் விழித்தேன். (காலை 6 மணியளவில்) என் முன்னால் அன்சாரும், அருகில் இருந்த அர்சாத்தும் விழுந்து கிடந்தார்கள். அல்லாஹ், அல்லாஹ் என்று கத்தினேன். படகின் உள்ளே வந்து பார்த்தபோது இயந்திரப்பகுதியில் புகையாக இருந்தது. எஞ்சின் வெடித்துச் சிதறிவிட்டதாக நினைத்துக்கொண்டேன். எங்கள் படகு எரிந்து விடுமோ என்கிற பயத்தில் படகின் இயந்திரத்துடன் தொடர்புபட்ட வயர்களை துண்டித்துவிட்டேன்.

காலை 8 மணியிருக்கும். எங்கள் படகுக்கு அருகில் இன்னொரு படகு நிற்பதைக் கண்டு அதனை அபாய சைகை காட்டி அழைத்தேன். அந்தப் படகில் இருந்தவர்களில் இருவர் எங்கள் படகுக்கு வந்தனர். கடலில் கிடந்த எங்கள் வலைகளையும் பாதிக்கப்பட்டிருந்த எங்களையும் மரணித்தவர்களின் சடலங்களையும் ஏற்றிக்கொண்டார்கள். (சடலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ) வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் சாய்ந்தமருது கரைக்கு நாங்கள் திரும்பினோம் – என்றார் சம்பவத்தில் உயிர் பிழைத்த நௌசாத்.

கடற்றொழிலில் தசாப்தகால அனுபவம் வாய்ந்தவர்களே மின்னலுக்கு இலக்கானவர்கள்

மேற்படி நால்வரும் குறித்த படகில் கடந்த 04 வருடங்களாக கடலுக்குச் சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே இந்தத் துக்ககரமான சம்பவம் நடந்துள்ளது. மின்னலுக்கு இலக்காகி உயிரிழந்த அன்சார் (42 வயது) என்பவர் நான்கு பிள்ளைகளின் தந்தை. 20 வருடங்களாக இவர் கடற்றொழிலில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே கடலில் மின்னல் தாக்கி இறந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மரணித்த மற்றைய நபரான 32 வயதுடைய அர்சாத், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் 12 வருட கடற்றொழில் அனுபவத்தைக்கொண்டவர்.

உயிர் பிழைத்தோர் நிலை என்ன?

குறித்த சம்பவத்தில் உயிர் பிழைத்த நௌசாத் மற்றும் அன்வர் ஆகியோர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் அன்வர் என்பவர் நெஞ்சி லுள்ள நோவு காரணமாக தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த அன்சார் இவரின் சகோதரர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.எம். நஜாத் கூறிய முற்பாதுகாப்பு நடவடிக்கை

பெரிய படகுகளில் கடலுக்குச் செல்வோர் கால நிலையை முன் கூட்டியே தெரிந்துகொள்வதற்காக அந்தப் படகுகளில் டப் (Tab) ஒன்று பொருத்தப்பட்டு அதில் அப் (app) ஒன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த அப் (app) மூலம், காலநிலை எதிர்வுகூறல்களை அறிந்து கொள்ள முடியும். கடலில் பயணித்துக் கொண்டிருக்கும்போது மின்னல் அடித்தால், அதில் பயணிப்போர் படகை நிறுத்திவிட்டு, படகில் கயிற்றைக் கட்டி, அந்தக் கயிற்றைப் பிடித்தவாறு கடல் நீரில் மிதக்கவேண்டும். இதுதான் கடலில் மின்னல் தாக்குதலிலிருந்து தப்புவதற்கான முற்பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

இதேவேளை, கடற்றொழிலுக்குச் செல்வோர் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்கள் காப்புறுதி செய்திருந்தால் இழப்பீட்டுப் பணத்தை அவர்களின் குடும்பத்தவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். எனவும் நஜாத் மேலும் குறிப்பிட்டார். கடற்றொழிலாளர்கள் இரு வழிகளில் காப்புறுதி செய்ய முடியும். அந்தவகையில் ஒவ்வொரு கடற்றொழிலாளரும் தத்தமக்கென காப்புறுதி செய்யலாம். இந்தக் காப்புறுதியை செய்யும் ஒருவர் கடற்றொழில் நடவடிக்கையின்போது மரணித்தால், அவரின் குடும்பத்தவர் 10 இலட்சம் ரூபா நஷ்டஈட்டைப் பெறலாம்.மற்றைய காப்புறுதியானது படகு மற்றும் அதில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு சேர்த்து, படகின் உரிமையாளர் செய்யும் காப்புறுதியாகும். இவ்வாறான காப்புறுதியைப் பெறுபவர் மரணிக்கும்போது, அவரின் குடும்பத்தவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் – என மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் நஜாத் தெரிவித்தார்.

சோகத்தின் மத்தியில் மண்ணறையை நோக்கிச்சென்ற ஜனாஸாக்கள்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பிண அறையில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்கள் கடந்த சனிக்கிழமை மாலை 7 மணியளவில் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு இரவு 9 மணியளவில் குடும்பத்தாரினதும், நண்பர்களினதும் தோளில் பயணித்து சாய்ந்தமருது அக்பர் ஜும்மா பள்ளிவாசல் ஜனாஸா மையவாடியில் 9.30 மணியளவில் கொரோனா சுகாதார வழிமுறையான மட்டுப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சனிக்கிழமை காலைமுதல் இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் நிமிடம்வரை சாய்ந்தமருது கடற்கரையில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. இளவயதில் நண்பர்களை இழந்த சோகத்தில் மீனவ நண்பர்கள் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் கடற்தொழிலில் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி கேட்டபோது மிக மனவேதனையுடன் சில விடயங்களை பகிர்ந்துகொண்டனர்.

அடிக்கடி மீனவ உறவுகளின் இழப்பை நாங்கள் சந்திப்பதும், மீன்பிடிப் படகுகள் காணாமல்போவதும் வாடிக்கையாகியுள்ளது. நவீன தொழில்நுட்ப சாதனங்களை எங்களின் இயந்திரப் படகுகளில் இணைக்கவேண்டும் அப்போதுதான் எங்களால் எங்களின் படகுகள் இருக்கும் இடத்தை இலகுவாக அடையாளம் காணமுடியும். இது தொடர்பில் நாட்டின் மீன்பிடி அமைச்சும், தொழில்நுட்ப அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன்,

இளவயதில் இந்தத் தொழிலுக்கு வரும் புதிய மீனவர்களுக்கு நவீன மீன்பிடி நுட்பங்கள், கடற்றொழில் நுட்பங்கள், இயற்கை சீற்றங்களிலிருந்து தம்மைத்தானே காப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அம்பாறையில் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரை இருக்கின்ற ஆழ்கடல் மீனவர்கள் ஒலுவில் துறைமுகத்தை பயன்படுத்தமுடியாத சூழல் ஏற்பட்டபின் வாழைச்சேனை துறைமுகத்தை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒலுவில் துறைமுகம் அமைப் பதற்கு முதல் மிக நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் வாழைச்சேனை துறைமுகத்தை பயன்படுத்தியது வந்தனர். ஆனால், தற்போது வாழைச்சேனை துறைமுகத்தில் காணப்படும் மீன்பிடிப் படகுகளை கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான மீன்பிடித்தொழிலாளர்கள் தொழிலுக்குப் பயன்படுத்துவதற்கு முடியாத சூழ்நிலையை தடைவிதித்து தடுத்து வருகின்றனர். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலுள்ள படகுகள் பயணிக்கும் வழியை மணல் மூடியுள்ளது. இதனால், மீனவர்கள் கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. ஒலுவில் துறைமுகத்தை நாங்கள் பயன்படுத்தும் விதமாக மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன்போது கேட்டுக்கொண்டனர். (தொகுப்பு: நூருல் ஹுதா உமர்)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter