உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனிடமும் சிஐடியின் சிறப்புக் குழுக்கள் தடுப்புக் காவலில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு , சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய, மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான, குளோசஸ் எனும் செப்புத் தொழிற்சாலைக்கு , செப்புக் கழிவுகளை சட்டத்துக்கு முரணாக விநியோகித்ததாக கூறி ரிஷாத்திடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக ரிஷாத் பதியுதீன், குறித்த தற்கொலைதாரியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டது முதல், தற்கொலைதாரியின் மனைவியின் தந்தையுடனான நெருக்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் சிஐடியின் குறித்த சிறப்புக் குழு துருவி வருவதாக நான்காம்மாடி தகவல்கள் தெரிவித்தன.
இதனைவிட, ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனிடம், இன்ஷாப் அஹமட் எனும் தற்கொலைதாரிக்கு எடுக்கப்பட்ட 7 தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிய வருகிறது.