இலங்கிலாந்தில் இனங்காணப்பட்ட பி-117 (B117) என்ற வைரஸே தற்போது நாட்டில் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, குருணாகல் மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவிலும் இதே வைரஸே பரவியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு பிரதம பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இம்மாதம் 8 ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் நிலைமாரிய வைரஸ் கண்டறியப்பட்டது.
எனவே குறித்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை காலை அது இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட வைரஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் ஊடாக இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிலைமாறிய வைரஸ் மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து இந்த வைரஸ் வேறு பகுதிகளிலும் பரவியுள்ளதா என்பதை அவதானிப்பதற்காக ஏனைய மாவட்டங்களிலிருந்தும் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. அதற்கமையவே குருணாகல் மற்றும் கொழும்பிலும் இதன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளிலேயே முதலாவதாக இந்த வைரஸ் இனங்காணப்பட்ட போதிலும் , இங்கிருந்து தான் மூன்றாம் அலை ஆரம்பமானது என்று கூற முடியாது.
இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட வைரஸ் பொரலஸ்கமுவையில் எவ்வாறு பரவியது என்பதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. இது தொடர்பில் சுகாதார அமைச்சு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.
இந்த வைரஸ் இதற்கு முன்னர் நாட்டில் இனங்காணப்பட்ட வைரஸை விட வீரியம் கூடியதாகும். இதன் மூலம் 55 வீதத்ததால் மரணங்கள் அதிகரிக்கக் கூடிய அதேவேளை, பரவல் வேகமும் 50 வீதத்தால் அதிகமாகும்.
எவ்வாறிருப்பினும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இதனை கட்டுப்படுத்த முடியும் என்று சாதகமான நிலையாகும். எனவே அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்கள் மீண்டும் அதனை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.
எனினும் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கும் அதிக காலம் தேவைப்படும். இந்தியாவிலும் இதே வைரஸே பரவியுள்ளது.
அங்கு அதிக மரணங்கள் பதிவாகுவதற்கும் இதுவே பிரதான காரணமாகும். எனினும் இந்தியாவைப் போன்று இலங்கையில் நிலைமை தீவிரமடையவில்லை. தடுப்பூசி வழங்குதல் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவ்வாறு பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக எண்ணிக் கொண்டு மக்கள் அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிதல் , அடிக்கடி கைகளைக் கழுவுதல் என்பன தொடர்ச்சியாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.