அரசாங்கத்தின் வங்குரோத்து நிலையை மறைப்பதற்கான யுக்தியே ரிஷாதின் கைது

அரசியல் பலிவாங்கள் என்கிறார் ஹலீம் எம்.பி.

அரசாங்கம் வங்குரோத்து நிலைமைக்கு சென்றுல்லமை அம்பலமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை மூடி மறைத்து மக்களை திசை திருப்பும் யுக்தியாகவே ரிஷாதின் கைது அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.அப்துல் ஹலீம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அரசியல் பலிவாங்களின் தொடர்ச்சியாகும் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப் பட்ட பின்னர் இந்த அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால், மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவுக்கு இலங்கையை தாரைவார்க்கும் செயற்பாடுகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளும் அதிகரித்திருக்கின்றது.

அத்துடன், அரசியல் சதிகள் மூலம் ஆட்சியை கைப்பற்றிய இந்த அரசாங்கம் ஸ்தாபிப்பதற்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலே பெரும் பங்களிப்பு செய்திருந்தது. இதற்கு தீர்வை பெற்றுக்கொடுத்து நாட்டின் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதாக ஆட்சிக்கு வந்தவர்களால் இந்நாட்டை பாதுகாக்கவோ, முன்னேற்றமான பாதைக்கு இட்டுச் செல்வதற்கோ முடியாமல் போயுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்ற தொரிவுக் குழுவை நியமித்தது. அந்த குழுவின் அறிக்கையை பொருட்படுத்தாது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கிடப்பில்போட்டார். அத்துடன், அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தார். இதன் அறிக்கையில் பிரதான குற்றவாளிக் அடையாளம் காணப்படாவிட்டாலும் சாட்சியங்களின் ஊடாக அடுத்த கட்ட விசாரணைக்கு செல்வதற்கான அடித்தளம் இடப்பட்டிருந்தது. எனினும், இந்த அரசாங்கம் குறித்த விடயத்திற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு தாக்குதலில் பலியானோருக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு பின்வாங்குகின்றது.

அரசாங்கத்தின் அசட்டையான போக்கை பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் கடந்த சில வாரங்களாக் கண்டித்து வருவதுடன் அரசாங்கத்திற்கு நெருக்குவாரங்களை கொடுத்து வருகின்றார். அவரின், அழுத்தங்களுக்கு ஆடிப்போயுள்ள அரசாங்கம் என்ன செய்வதென்று தட்டுத் தடுமாறிப்போய் பல கைதுகளை மேற்கொண்டு வருகின்றது.
பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுபவர்களை சிறையில் அடைப்பதற்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.

உணிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விவகாரம் தொடர்பில் 25 பகுதிகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி ஆணைக்குழுவால் சமர்பிக்கப்பட்டுள்ள போதிலும் அறிக்கையின் இரண்டு பகுதிகள் மாத்திரமே பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் இரகசியமான விடயங்களை அம்பலப்படுத்தியதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர ஹரீன் பெர்னாண்டோவை கைது செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.

எனினும் மக்களை திசை திருப்பி யாரையோ திருப்திபடுத்துவதற்காகவும் இனவாத நோக்கத்தையும் நிறைவேற்றிக்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்பு படுத்து கைது செய்திருக்கின்றனர்.

ரிஷாத் பதியுதீன் தொடர்பில் தேர்தல் காலத்தில் பல்வேறு குற்றச் சாட்டுகள் முன்வைத்தாலும் தேர்தலுக்கு பின்னர் குறித்த குற்றச் சாட்டுகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இந்த அரசாங்கம் எடுக்காது வேறு விடையங்களுக்காகவே அவரை கைது செய்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை இ.போ.ச. பஸ்கள் மூலம் புத்தளத்திலிருந்து வன்னிக்கு அழைத்துச் செல்வதற்கு நீண்ட நாள் இடம்பெயர்ந்தோருக்கான அமைச்சின் நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்தனர். குறித்த காலப் பகுதிக்கு ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்டனர்.

இதனிடையே, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் தொழிற்சாலையொன்றுக்கு செப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஊடாக அனுமதி வழங்கியமைக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தமை தொடர்பான விடயம் குறித்து சட்ட ஆலோசனை செய்வது பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் ரிஷாட் பதியுதீனை இரவோடு இரவாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றமையானது கண்டிக்கத்தக்கது.

தற்போது, வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசாங்கம் மக்களை திசை திருப்புவதற்காகவும் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காகவுமே இந்த பலிவாங்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதாக சந்தேகிக்கத் தோன்றுகின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter