அரச மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் ஆசன அடிப்படையில் மாத்திரம் பயணம் செய்ய வேண்டும். பேருந்துகளில் சமூக இடைவெளியை பேணுவது அத்தியாவசியமாகும்.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாத பேருந்து சாரதி, நடத்துனருக்கு எதிராக பயணிகள் முறைப்பாடு செய்யலாம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பொது போக்குவரத்து சேவையின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச மற்றும் தனியார் பஸ்களில் ஆசன அடிப்படையில் மாத்திரம் பயணிகளை ஏற்றுமாறு குறிப்பிட்டுள்ளோம். அரச பஸ்களில் ஆசன எண்ணிக்கையின் அடிப்படையில் பயணிகள் பயணம் செய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள.
இந்நடவடிக்கைகளை தனியார் பஸ்களிலும் செயற்படுத்த தனியால் பஸ் உரிமையாளர் சங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
கொவிட்-19 வைரஸ் தொற்று பொது போக்குவரத்து சேவை ஊடாக தீவிரமாக பரவலடைவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளார்கள்.
சுய பாதுகாப்பு குறித்து மக்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அனைத்து விடயங்களையும் பின்பற்றுமாறு கட்டளை பிறப்பிக்க முடியாது.
பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்தும் பயணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் உள்ளமை காணக் கூடியதாக உள்ளது.
சுகாதார பாதுகாப்பு குறித்து கடந்த காலங்களில் அலட்சியமாக செயற்பட்டதன் விளைவை தற்போது எதிர்க் கொள்ள நேரிட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் மூன்றாம் அலையாக தாக்கம் செலுத்தினால் அது பாரதூரமான விளைவினை ஏற்படுத்தும் ஆகவே பொது மக்கள் பொருப்புடன் செயற்பட வேண்டும்.
இதன்போது போக்குவரத்து சேவையினை தேவைக்கு மாத்திரம் பயன்படுத்துவது அவசியாகும். தேவையற்ற பயணங்களை முடிந்தளவிற்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பஸ்களில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுப்படுவார்கள்.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாத சாரதி, பஸ் நடத்துனர் தொடர்பில் பொது மக்கள் வீதி போக்குவரத்து அதிகார சபை, போக்குவரத்து பொலிஸாருக்கு முறைப்பாடளிக்கலாம் என்றார்.