நாட்டை முடக்குவதா ? – இராணுவத் தளபதியின் அறிவிப்பு

நாட்டு மக்கள் புத்திசாலிகள். தற்போதைய நிலைமையை உணர்ந்து மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென கொவிட் 19 கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேவேளை நாம் நாட்டை முடக்கும் தீர்மானத்தை எடுக்கவில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா பரவல் நிலையையடுத்து அரசாங்க  தகவல் தினைக்களத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே  கொவிட் 19 கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதைய சூழ்நிலையில் நாம் மேற்கொள்ளவில்லை .

நாட்டு மக்கள்  சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பார்களாயின் நாட்டை முடக்க வேண்டிய நிலை எதிர்வரும் நாட்களில் ஏற்படும்.

தற்போதைய சூழ்நிலையை புரிந்து கொண்டு  அனைத்து மக்களும் வேறு பிரதேசங்களுக்கோ, அல்லது பொது இடங்களுக்கோ, பொது நிகழ்வுகளிலோ கலந்துகொள்வதை தவிர்த்து அவர்அவர் வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு வழங்குங்கள்.

கடந்த புத்தாண்டு தினத்தில் பொதுமக்கள் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமையே, தற்போதைய கொரோனா பரவல் நிலைமைக்கு காரணம்.

எமது அயல்நாடான இந்தியாவில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நாளொன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.

உலக நாடுகளிலும் கொவிட் 19 தொற்று வேகமாகப் பரவி வருகிறது. புத்தாண்டு வரை நாளாந்தம் 150 முதல் 200 பேர் வரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். கடந்த காலங்களில் நாம் கொரோனா தொற்றை மக்களின் ஒத்துழைப்பினால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.

புத்தாண்டு நிறைவடைந்ததவுடன் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 300 க்கும் மேல் அதிகரித்தது. நேற்று 600 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்கள்.

இதேவேளை, குளியாபிட்டிய, கணேவத்த, வத்தளை ஆகிய பகுதிகளில் அதிகமானோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு.

இக்காலப்பகுதியில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதோடு, இயன்றளவு சமூக இடைவெளியை பேணி, முகக்கவசங்களை அணிந்துகொள்வதோடு வீடுகளிலிருந்து வெளியேறுவதை குறைத்துக்கொள்ளவும்.

எனவே நாட்டை முடக்கியோ அல்லது கொரோனா ஊரடங்கை விதித்தோ நாம் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. எமது நாட்டு மக்கள் புத்திசாலிகள். எனவே நாட்டு மக்கள் தற்போதைய நிலையை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறு இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.இதேவேளை, உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்தவுடன் சீன தடுப்பூசிகளை இலங்கையர்களுக்கு வழங்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன் மே மாதம் நடுப்பகுதியில் 2 ஆம் கட்ட கொவிட்  தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், உருமாறிய கொவிட்-19 வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கொவிட் கட்டுப்பாட்டுக்குழு எச்சரித்துள்ளது. -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter