பல பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்துள்ளதன் மூலம் அமைச்சர்களும் அவர்களுக்கு நெருக்கமான மாபியா காரர்களும் கொள்ளை இலாபம் அடிக்க அரசு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான 5 ஒழுங்கு விதிகள் மற்றும் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது என்ற பெயரில் பல பொருட்களின் வெளிநாட்டு இறக்குமதியை அரசு தடை செய்துள்ளது.
ஆனால் இதன் மூலம் மக்களுக்கு மேலும் சுமையே ஏற்றப்பட்டுள்ளது.பல பொருட்களை சந்தையில் பல நாட்களுக்கு காணமுடியாதிருக்கும் .
திடீரென அதிகரித்த விலையுடன் அவை சந்தைக்கு வரும் . பின்னர் மீண்டும் காணாமல் போய் சில காலத்துக்கு பின்னர் மீண்டும் அதிகரித்த விலையுடன் சந்தைக்கு வரும் . இது ஒரு வியாபார தந்திரமாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
பல பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்துள்ளதன் மூலம் அமைச்சர்களும் அவர்களுக்கு நெருக்கமான மாபியாக்களும் கொள்ளை இலாபம் அடிக்க அரசு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்த இறக்குமதித்தடையால் உள்ளூர் உற்பத்திகள் அதிகரிப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட பொருட்களைபலமடங்கு அதிகரித்த விலையில் விற்கும் வியாபாரமே இடம்பெறுகின்றது என்றார். -வீரகேசரி பத்திரிகை-