நாட்டில் தற்போது எழுமாறாக முன்னெடுக்கப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவாகும். எனவே தான் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்படுகிறது.
எழுமாற்று பரிசோதனைகளின் அளவு அதிகரிக்குமாயின் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் தற்போது எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்படுவதில்லை. சில பிரதேசங்களில் எழுமாற்று பரிசோதனைக்காக மாதிரிகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டால் தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களை விட அதிகளவிலானோருக்கு தொற்று உறுதியாகக் கூடும்.
அத்தோடு நாட்டின் பல பிரதேசங்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக மேல் மாகாணம் , வடமேல் மாகாணம் , வடக்கு மற்றும் கிழக்கு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
இது மாத்திரமின்றி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். மேலும் தனியார் ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளிலும் கனிசமானளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். முறையான வழிகாட்டல்கள் இன்மையால் பல தொற்றாளர்கள் தொற்றுடன் வீடுகளில் உள்ளனர்.
எனவே நாட்டில் காணப்படுகின்ற தற்போதைய நிலைமை மற்றும் எதிர்வரும் வாரங்களில் ஏற்படக் கூடிய நிலைமை என்பவற்றைக் கருத்திற் கொண்டு மேல் மாகாணத்திலும் , ஏனைய மாகாணத்திலும் எழுமாற்று பரிசோதனைகளை பரந்தளவில் முன்னெடுப்பதே சிறந்த நடைமுறையாகும் என்றார். -வீரகேசரி பத்திரிகை-