ரமழான் மாதம்- பள்­ளிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்ப­டுமா?

அன்று வெள்­ளிக்­கி­ழமை… நண்­பகல் 12.05 மணி­ய­ளவில் ஜும்ஆத் தொழு­கைக்­காக விரைந்­து­கொண்­டி­ருந்தேன்.
அப்­போது, கொழும்பு நக­ரி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு அருகில் பாரிய கூட்டம். என்­ன­வென்று அருகில் நின்­ற­வ­ரிடம் கேட்டேன்.

“பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­காக ஒரு சம­யத்தில் 50 பேர் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். 50 பேர் பள்­ளிக்குள் ஏற்­க­னவே சென்­றுள்­ள­மை­யினால் பள்­ளி­வா­சலின் கத­வினை மூடி­விட்­டார்கள்.

முத­லா­வது ஜும்ஆ முடிந்த பின்னர், பி.ப 1.00 மணி­ய­ள­வி­லேயே மீண்டும் 50 பேரை பள்­ளிக்குள் அனு­ம­திப்­பார்­களாம். அது­வரை காத்­துக்­கொண்­டி­ருக்­கின்றேன்” என பள்­ளி­வா­சலின் கேட்­டி­யி­லி­ருந்­த­வாறு பதி­ல­ளித்தார் சுமார் 55 வயது மதிக்­கத்­தக்க ஒருவர். பின்னர் என்ன செய்­வது, நான் ஜும்ஆ தொழு­கை­யின்றி வீடு வந்து லுஹர் தொழு­கையினை நிறை­வேற்­றினேன்.

இதே­வேளை, கடந்த பெப்­ர­வரி 5ஆம் திகதி கொழும்­பிலுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு ஜும்ஆ தொழு­கைக்­காக சென்ற போது, கொவிட் – 19 கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக விரும்­பத்­தகாத சம்­ப­வ­மொன்­றினை எதிர்கொண்டதாக ஊட­க­வி­ய­லாளர் அஷ்ரப் ஏ. சமத் தனது பேஸ்­புக்கில் பதி­விட்­டி­ருந்தார்.
பள்­ளி­வா­சல்கள் மீது விதிக்­கப்­பட்­டுள்ள கொவிட் – 19 கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக இது போன்ற பல பிரச்­சி­னை­களை நாளாந்தம் தொழு­கைக்­காக செல்லும் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

கடந்த வருடம் நாட்டில் ஏற்­பட்ட கொரோனா வைரஸ் பரவல் கார­ண­மாக 2020 மார்ச் 15ஆம் திகதி நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­களும் மூடப்­பட்டு ஜூன் 12ஆம் திகதி பல்­வேறு நிபந்­த­னை­க­ளுக்கு மத்­தியில் திறக்­கப்­பட்­டன.

எனினும் கடந்த ஒக்­டோபர் 4ஆம் திகதி நாட்டில் மீண்டும் ஏற்­பட்ட இரண்­டா­வது கொரோனா வைரஸ் பரவல் கார­ண­மாக நாட்டின் பல பிர­தே­சங்கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டன. இந்த தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட பிர­தே­சங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­களும் மூடப்­பட்­டன.

அப்­பி­ர­தே­சங்­களில் தனி­மைப்­ப­டுத்தல் நீக்­கப்­பட்­ட­தனை அடுத்து பள்­ளி­வா­சல்கள் மீண்டும் திறக்­கப்­பட்­டன. எனினும், பள்­ளி­வா­சல்கள் மீது விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டுகள் இன்று வரை தொடர்ந்து வரு­கின்­றன.

குறிப்­பாக பள்­ளி­வா­சலில் தொழு­கைக்கு ஒரு நேரத்தில் 50 பேர் அல்­லது அதை விட குறை­வா­னர்கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டுவர், பள்­ளி­வா­ச­லினுள் நுழை­வ­தற்கு, ஒரு நுழை­வா­யிலை மட்டும் பயன்­ப­டுத்தல், பள்­ளி­யினுள் இருக்­கின்ற போது ஒவ்­வொ­ரு­வரும் மாஸ்க் அணிந்­தி­ருப்­ப­தோடு ஒரு மீட்டர் இடை­வெ­ளி­யையும் பேண வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் தொழு­கைக்கு செல்­வ­ப­வர்கள் முஸல்லா எனப்­படும் தொழுகை விரிப்­பொன்றை கொண்டு செல்­வ­தோடு ஒரு மீட்டர் இடை­வெ­ளியை பேண வேண்டும், பள்­ளிக்கு வரு­ப­வர்கள் அனை­வ­ரது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடை­யாள அட்டை இலக்கம் ஆகி­ய­வற்­றினை பதி­வேட்டில் பதிய வேண்டும். ஒவ்­வொரு தொழு­கைக்­கான அதா­னுக்கு 15 நிமி­டங்­க­ளுக்கு முன்னர் பள்­ளி­வாசல் திறக்­கப்­பட்டு, தொழு­கையைத் தொடர்ந்து 45 நிமி­டங்­களில் மூடப்­பட வேண்டும். பள்­ளி­வா­சலில் வுழூச் செய்யும் பகுதி, மல­சல கூடங்கள் மறு அறி­வித்தல் வரை மூடப்­பட வேண்டும் உள்­ளிட்ட பல நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­டன.இன்று வரை தொடர்­கின்ற இந்த கட்­டுப்­பா­டு­கள் தலைநகரில் இறுக்கமாக பின்பற்றப்படுகின்ற போதிலும் ஏனைய பகுதிகளில் முறையாக அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனவா என்­பதும் கேள்­விக்­கு­றி­யாகும்.

நாட்­டி­லுள்ள பல பிர­தே­சங்­களில் இந்த சுகா­தார வழி­காட்­டல்­களை அமுல்­ப­டுத்­தப்­ப­டா­மை­யினை நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.
எவ்­வா­றா­யினும், “கொழும்பு மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களில் வக்பு சபை­யினால் வெளி­யி­டப்­பட்ட சுகா­தார வழி­காட்டல் இன்று வரை அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­தாக மாவட்ட பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார்.

இதன் கார­ண­மாக தூரப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து கொழும்­பிற்கு வரும் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்­கப்­ப­டு­வ­தையும் எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது. தூரப் பிர­தே­சங்­க­ளி­லிருந்து வரு­கின்­ற­வர்­களின் மார்க்க, இயற்கைத் தேவைகளை நிறைவேற்றவும் ஓய்­வெடுக்கவும் பள்­ளி­வா­சல்­களே பெரிதும் உதவுகின்றன.
எனினும் தொழுகை நிறை­வ­டைந்­த­வுடன் பள்­ளி­வா­சல்கள் மூடப்­ப­டு­கின்­ற­மை­யினால், பலர் பள்­ளி­வா­சலுக்குச் செல்ல முடி­யாது வீதி­களில் அலைந்து திரி­கின்­றனர்.
அது மாத்­தி­ர­மல்­லாமல், உட­ன­டி­யாக பள்­ளி­வா­சல்கள் மூடப்­ப­டு­கின்­ற­மை­யினால், ஜமாஅத் தொழு­கையில் கலந்­து­கொள்­ளா­வ­தர்களால் பள்­ளிக்குள் செல்ல முடி­யாதுள்ளது. இதனால் பலரின் தொழு­கை­கள் கழா­வா­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸல்லா இல்­லாமல் செல்­கின்­ற­வர்­க­ளுக்கு பள்­ளிக்கு அருகில் நிற்­ப­வர்கள் நன்மை என்ற அடிப்­ப­டையில் தங்­களின் முஸ­ல்லாக்­களை வழங்­கு­­கின்­றனர். இது­ ஒருவகையில் உதவியாக அமைகின்ற போதிலும் கொரோனா பரவலைப் பொறுத்தவரை பாரதூரமான செயற்­பா­டாகும். இதன் கார­ண­மாக கொரோனா வைரஸ் பர­வு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

“வக்பு சபை­யினால் வெளி­யி­டப்­பட்ட சுகா­தார வழி­காட்­டி­யினை எமது பள்­ளி­வாசல் இன்று வரை அமுல்­ப­டுத்தி வரு­கின்­றது” என கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் தலைவர் எம். தௌபீக் சுபைர் தெரி­வித்தார்.

“இதனால், தொழு­கைக்கு வரு­கின்­ற­வர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கு­வது எமக்கு தெரியும். எனினும் பள்­ளி­வா­சல்­களின் ஊடாக கொரோனா வைரஸ் பர­வி­விட்­டது என்ற குற்றச்சாட்டு வந்துவிடக்கூ­டாது என்­பதன் கார­ண­மாக இந்த வழி­காட்­டல்­களை தொடர்ச்சியாக பேணி வரு­கின்றோம்” என அவர் குறிப்­பிட்டார்.
இந்த நட­வ­டிக்­கை­யினால் தமது பள்­ளி­வா­சலில் கட­மை­யாற்­று­ப­வர்கள் பல்­வேறு சிக்­கல்­க­ளையும், எதிர்­நோக்­கி­ய­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை, கடந்த ரமழான் மாதத்தில் பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட்­ட­மை­யினால் வீடு­க­ளி­லி­ருந்தே ரமழான் மாத அமல்­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. வழ­மை­யாக ரமழான் மாதம் முழு­வதும் பள்­ளி­வா­சல்கள் சுறு­சு­றுப்­பாக இயங்­கு­வ­துடன் பல்­வேறு நிகழ்ச்­சிகள் தொடர்ந்து 30 நாட்­களும் இடம்­பெ­று­வது வழ­மை­யாகும்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், இப்தார், தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் போன்று இரவு நேரத் தொழு­கை­களும் இடம்­பெ­று­வது வழ­மை­யாகும். இந்த வருட ரம­ழா­னிற்கு இன்னும் 15 நாட்­களே மாத்­திரம் உள்­ளன.

எனினும் வக்பு சபை­யினால் விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டுகள் இது­வரை தளர்த்­தப்­ப­டா­மை­யினால், இந்த ரமழான் காலப் பகு­தியில் பள்­ளி­வா­சல்­களில் எவ்­வாறு நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்­வது என்­பது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­கள் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

இதன் கார­ண­மாக கொவிட் – 19க்கு மத்­தியில் எவ்­வாறு ரமழான் அமல்­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பி­லான வழி­காட்­டி­யொன்­றினை வெளி­யி­டு­மாறு முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்­திடம் கோரி­யுள்­ள­தாக கொழும்பு மாவட்ட பள்­ளி­வாசல் சம்­மே­ளத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார்.

“இந்த கோரிக்கை இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் அனுப்­பி­யி­ருந்தோம். எனினும் வக்பு சபை­யி­ட­மி­ருந்து இது­வரை எந்த பதி­லு­மில்லை” என அவர் குறிப்­பிட்டார்.
“தற்­போ­தைய சூழ்­நி­லையில் சுகா­தார வழி­காட்­டலுக்கு அதிக முக்­கி­யத்­துவம் வழங்க வேண்­டி­யுள்­ளது. பள்­ளி­வா­சல்­களில் அடிக்­கடி ஒன்­று­கூ­டல்கள் இடம்­பெ­று­வ­தனால் கொரோனா வைரஸ் இல­கு­வாக பரவும் என்ற அச்ச உணர்­வொன்­றுள்­ளது” என அவர் கூறினார்.

எவ்­வா­றா­யினும் ரமழான் மாதத்­தினை சிறப்­பாக அனுஷ்­டிப்­ப­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் சுகா­தார அமைச்­சுடன் இணைந்து வக்பு சபை உடன­டி­யாக எடுக்க வேண்டும் என அஸ்லம் ஒத்மான் வேண்­டுகோள் விடுத்தார்.

இதே­வேளை, “நாட்டுச் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்டு புனித ரமழான் மாத அமல்­களை இலங்கை முஸ்­லிம்கள் சிறப்­பாக முன்னெ­டுக்க வேண்டும்” என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பதில் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் தெரி­வித்தார்.

கொரோ­னா­விற்கு மத்­தியில் எவ்­வாறு ரமழான் மாத அமல்­களை மேற்­கொள்­வது என்­பது தொடர்­பான விசேட அறிக்­கை­யொன்­றினை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா இன்னும் ஓரிரு தினங்­களில் வெளி­யி­ட­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

கடந்த சில வரு­டங்­களில் புனித ரமழான் மாத அமல்­களை சிறப்­பாக நிறை­வேற்ற முடி­யாமல் போய்விட்­டது. இதன் கார­ண­மாக இந்த வருடம் புனித ரமழான் மாதத்தில் அதிக அமல்­களை நிறை­வேற்ற முயற்­சிக்­கு­மாறு அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் வேண்­டுகோள் விடுத்தார்.

“ரமழான் மாதத்தில் பள்­ளி­வா­சல்­களில் எவ்­வாறு செயற்­ப­டு­வது என்பது தொடர்பில் பிர­தேச சுகா­தார வைத்­திய அதி­கா­ரிகள் மற்றும் பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்கள் ஆகி­யோ­ருடன் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­கள் கலந்­து­ரை­யாடி சிறப்­பாக அமல்­களை மேற்கொள்ள நட­வ­டிக்கை எடுக்­க வேண்டும் என அவர் மேலும் தெரி­வித்தார்.
இதே­வேளை, “கொவிட் – 19க்கு மத்­தியில் ரமழான் அமல்­களை பள்­ளி­வா­சல்­களில் எவ்­வாறு மேற்­கொள்­வது என்­பது தொடர்­பான வழி­காட்­டி­யொன்று விரைவில் வெளி­யி­டப்­படும்” என முஸ்லிம் சமய கலா­சார திணைக்­கள பணிப்­பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரி­வித்தார்.

தராவீஹ், இப்தார், கஞ்சி வழங்கல் போன்ற செயற்­பா­டு­களை எவ்­வாறு மேற்­கொள்­வது என்­பது தொடர்பில் விளக்கம் கோரி பள்­ளி­வா­சல்­க­ளினால் திணைக்­க­ளத்­திற்கு கடிதங்கள் அனுப்­பப்பட்­டுள்­ள­தாகவும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் இன்று (நேற்று) நடை­பெ­ற­வுள்ள வக்பு சபையின் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. விரைவில் இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ முடிவு அறி­விக்­கப்­படும்” என பணிப்­பாளர் மேலும் கூறினார்.

இதே­வேளை, “ரமழான் மாதத்தில் பள்­ளி­வா­சல்கள் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பான வழிகாட்டல் சுற்றுநிருபம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்” என சுகாதா அமைச்சின் கொவிட் – 19 செயற்பாடுகளுக்கான இணைப்பு பொறுப்பதிகாரி வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறினார்.

ரமழான் மாதத்­தி­னை­யொட்டி பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களில் சில தளர்­வு­களை மேற்­கொள்ள சுகா­தார அமைச்சு எதிர்­பார்க்­கி­றது. அது­போன்று பள்­ளி­வா­சலின் பரப்­ப­ள­வினைப் பொறுத்தே தொழு­கைக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­பவர்­களின் எண்­ணிக்­கை­யினை தீர்­மா­னிப்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­ப­டு­வ­தாக தெரி­வித்த வைத்­தியர் அன்வர் ஹம்தானி, இது தொடர்பில் அமைச்சு மட்­டத்­தி­லான கலந்­து­ரை­யா­டல்கள் தற்­போது இடம்­பெற்று வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

நாட்டில் சினிமா திரை­யரங்­குகள், அர­சியல் மற்றும் பொது ஒன்­று­கூ­டல்கள் மற்றும் களி­யாட்ட நிகழ்­வு­களில் சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்கு அமைய சுமார் 100க்கு மேற்­பட்டோர் பங்­கு­பற்ற முடியும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­சல்­களில் மாத்­திரம் இவ்­வாறு 50 பேருக்­கான கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விதிகள் தளர்த்தப்பட்டு எதிர்வரும் புனித ரமழானை இலங்கை முஸ்லிம்கள், சுகாதார விதிகளை பேணியும் திருப்தியான முறையிலும் பள்ளிவாசல்களோடு இணைந்து சிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.


சிங்கள சமூகம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய விடயம்.

கட்டுரையினை வாசிக்க >>>

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter