இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெரி கேர்ஸ்டன், டோம் மூடி மற்றும் மஹேல ஜயவர்தன, விரேந்திர சேவாக் ஆகியோர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சிவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிப்பார்கள் என இந்திய செய்தி இணையத்தளமான “பினான்சியல் எக்ஸ்பிரஸ்” (Financial Express) செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கெரி கேர்ஸ்டன் 2011 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிச்சியாளராக செயற்பட்ட காலத்திலேயே இந்திய அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. தற்போது கேர்ஸ்டன் ஐ.பி.எல்.லில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவுள்ளார்.
இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு இரண்டு முறை கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தவர்.
அத்துடன் சேவாக் மற்றும் டோம் மூடி ஆகியோர் 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டபோது அப் பதவிக்கு விண்ணப்பதிருந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்ரீதர், முகாமையாளர் சுனில் சுப்பிரமணியன் ஆகியோரின் பதவி காலம் உலக கிண்ண போட்டியுடன் காலாவதியாகியுள்ளது.
இந்திய அணி எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று இருபதுக்கு 20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
இந்த தொடருக்காக தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர்கள், நிர்வாக முகாமையாளர் ஆகியோரின் பதவி காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், துடுப்பாட்ட பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர், களத்தடுப்பு பயிற்சியாளர், உடற்பயிற்சி நிபுணர், நிர்வாக முகாமையாளர் ஆகிய பதவிக்கு விண்ணப்பம் கோரியிருந்தது.
இந்த பதவிகளுக்கு குறைந்தபட்ச தகுதிகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. இதன்படி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியின் தலைமை பயிற்சியாளராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். அல்லது உறுப்பு நாட்டு அணிகளின் தலைமை பயிற்சியாளராகவோ, ஐ.பி.எல். மற்றும் அதற்கு இணையான லீக் போட்டிக்கான அணியின் தலைமை பயிற்சியாளராகவோ, முதல் தர அல்லது தேசிய ‘ஏ’ அணியின் தலைமை பயிற்சியாளராகவோ குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இருந்து இருக்க வேண்டும். மேலும் குறைந்தது 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.
துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு பயிற்சியாளர் பதவிக்கு மேற்கண்ட தகுதிகளில் ஒரே ஒரு மாற்றமாக குறைந்தது 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.