மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலையுடன் இடைக்கிடையே மழையுடன் கடும் காற்று வீசி வருவதுடன் இடைக்கிடையே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.
இதனால் சாரதிகள் அவதானமாக தங்களுடைய வாகனங்களை முகப்புவிளக்குகளை ஒளிரச்செய்தவாறு செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் களுகள, பிட்டவல, கினிகத்தேனை, கடவளை, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளேயர், ரதெல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வளைவுகள் நிறைந்த இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகனசாரதிகள் மிகவும் அவதானமாக தமக்குரிய பக்கத்தில் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
கடும் காற்று காரணமாக ஹட்டன் பகுதியில் பல இடங்களில் மின்சாரமும் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றது.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாகவும் கடும் குளிர் காரணமாகவும் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயமும் காணப்படுகின்றது.
எனவே மண்திட்டுக்களுக்கும் மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.