பயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன – ஹக்கீம் விளக்குகிறார் இதோ

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (19) கண்டி, கலகெதர தேர்தல் தொகுதியில் ஹத்தரலியத்தவில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

சில சிங்கள மொழி இலத்திரனியல் ஊடகங்களில் என்னையும் தீவிரவாதி ஸஹரானையும் தொடர்புபடுத்தி பழைய காணொளியொன்றை ஒளிபரப்பி, பொது மக்கள் மத்தியில் தவறான மனப்பதிவை ஏற்படுத்தக்கூடிய விஷமத்தனமான செய்தியொன்று பரப்பப்பட்டது.

2015 ஓகஸ்ட் 16ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பில் போட்டிட்ட ஹிஸ்புல்லாஹ் படுதோல்வியடைந்தார். அதன்பின், பின்கதவால் சென்ற ஹிஸ்புல்லாஹ், அவர் எதிர்த்துப் போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தேசியப்பட்டியல் ஆசனமொன்றை பெற்றுக்கொண்டார். 

அதன்பின், உடனடியாக குண்டர்களை கொண்டு அவரது அரசியல் எதிரிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை தாக்கினார். அத்துடன் அவர்களது வீடுகளுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் பாரதூரமான சேதங்களையும் ஏற்படுத்தினார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவிடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 

பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளையடுத்து, ஹிஸ்புல்லாஹ்வின் அடாவடித்தனத்தினால் பாதிப்புக்குள்ளானவர்களை வைத்தியசாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டேன். நிலைமைகளை நேரில் கண்டறிய கட்சி முக்கியஸ்தர்களுடன் சேதம் விளைவிக்கப்பட்ட இடங்களுக்கும் சென்றேன். 

அப்படிச்சென்ற இடமொன்றில் ஏனையவர்களுடன் ஒருவராக பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அப்போது அவனைப்பற்றி எனக்கு தெரிந்திருக்கவில்லை. 

இந்த செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்து சில வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தல் இப்போது அதை தூக்கிப்பிடிக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதால், சிங்கள மக்கள் மத்தியில் இனவாத பிரசாரத்தை முன்னெடுப்பதற்காக இந்தக் கதையை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பேணி, சகவாழ்வுக்காக பாடுபட்டுவரும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். எமது கட்சியின் உயரிய நோக்கங்களை சிதறடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான கீழ்த்தரமான சதித்திட்டங்களை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். 

இந்த சம்பவம் நடைபெற்ற சூழ்நிலை பற்றி ஹிஸ்புல்லாஹ்வே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் எங்கள் முன்னிலையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்த போலிப் பிரசாரம் குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இவற்றுக்கு முகம்கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒருபோதும் பின்நிற்காது என்றார்.

ஊடகப்பிரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter