அக்குறணை மக்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் – அக்குறணை M.S.M பெளஸர், I.ஐனுடீன் தெரிவிப்பு

ஆளும் கட்சிக்கு நாங்கள் ஆதரவை வழங்குவதன் மூலம்தான் பெரும்பான்மையின மக்களுடன் சேர்ந்து ஒற்றுமையுடன் வாழக் கூடிய ஒரு சூழல் உருவாகும். கட்சி என்பது மதமல்ல. காலத்தின் தேவை அறிந்து ஆளும் தரப்புடன் சேர்ந்து பயணிப்பதுதான் சிறந்த பொறிமுறை. எனவே எமது போராட்டம் என்பது வெறுமனே அபிவிருத்திகளை மட்டும் கொண்டதல்ல. இந்த நாட்டின் பெரும்பான்மையின மக்களுடனும் ஏனைய மக்களுடனும் சேர்ந்து வாழ்வதும் ஒரு போராட்டாம்தான். இந்த அரிய சந்தர்ப்பத்தில் எமது தேர்தல் தொகுதியிலுள்ள திலும் அமுணுகமவுக்கு ஒரு வாக்கை வழங்குவதுடன் மற்றுமொரு வாக்கை எமது சமூகத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாரிஸ் ஹாஜியாருக்கு வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உள்ளது என கல்வியல் துறை கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்பவரும், நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளருமான நாயகம் எம்.எஸ். எம்.பெளஸர் மற்றும் மத்திய மாகாண அரசியல் ஒன்றியத்தின் செயலாளர் ஐ. ஐனுடீன் ஆகியோர் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கே: கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள். அவருடைய வெற்றி வாய்ப்புக்கள் எவ்வாறு உள்ளன?

பதில்: உண்மையிலே அவர் நல்ல மனிதர். எல்லா மக்களையும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் ஒரு சரிசமனாக நேசிக்கக் கூடியர். அவர் இந்த ஆட்சியில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக இருந்தவர். இம்முறை கண்டி மாவட்டத்தில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுடைய ஆமோக விருப்பு வாக்குகளால் வெற்றி பெறுவதில் எந்எந்தவிதமான சந்தேகங்களுமில்லை.

கே: அப்படியாயின் இவரிடம் காணப்படும் நல்ல குணாம்சங்கள் என்ன?

பதில்: அல்லாஹ்வுடைய போதனைப்படி நாம் நன்றியுடையவனாக இருக்க வேண்டும். அடியானுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான் என்று கூறுவார்கள். அவர் எங்கள் தேர்தல் தொகுதியில் வசிக்கக் கூடியவர். இருப்பினும் அவர் எந்தவொரு முன் அறிவித்தலோ வேண்டுகோளோ இல்லாமல் பெரும் உதவிகள் எங்களுடைய அக்குறணைப் பிரதேசத்திற்குச் செய்துள்ளார் என்பது வெளிப்படையான உண்மை. அக்குறணையைப் பொறுத்தவரையிலும் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது வழக்கமாகும். கொவிட்-19 கொரோனா தொற்றினால் அக்குறணை முடக்கப்பட்ட சந்தர்ப்பததில் யாருமே இவை பற்றி அவரிடம் முறையிடாமல் அக்குறணை வெள்ளம் வருவதைத் தடுக்கும் வகையில் ஈடுபட்டுள்ளார். இது உண்மையிலே இக்கட்டான நேரத்தில் அவர் செய்த பெரும் சேவையென அக்குறணை மக்கள் கருதுகின்றனர். விசேடமாக கொரோனா தொற்றினால் அக்குறணை பிரதேசம் முடக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பொல்கொல்ல நீர் அணைக்கட்டின் வான்கதவுகளைத் திறந்து அக்குறணை நகரில் வெள்ளம் பெருக்கெடுக்காமல் உடனே உரிய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கே: அவர் அப்படி இதை ஏன் செய்தார்?

பதில்: அக்குறணை நகர் கடுமையான மழை பெய்தால் தீடீரென வெள்ளத்தில் மூழ்கிவிடும். இந்த அவல நிலை நீண்ட காலமாக நடைபெறுகிறது. அவர் எங்களுடைய அயல் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தமது மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் வாழ்வியலை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றக் கூடியவர். எங்கள் ஊருக்கு வெள்ளம் ஏற்படும் அவல நிலை தொடர்ந்து அவதானித்து வரும் ஒருவர். அந்த வகையில் கொரோனா தொற்றின் காரணமாக நாங்கள் நொந்து போய் முடக்கப்பட்டு இருந்த வேளையில் எங்கள் மீது மனமுவந்து யாருமே சொல்லாமல் செய்த காரியமாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல கடமையும் பொறுப்பும் இருக்கிறது. அவர் எமக்கு மறைமுகமான உதவிகள் பல செய்துள்ளார்.

இந்த இக்கட்டான கால கட்டத்தில் ஏப்ரல் 12 ஆம் திகதி அக்குறணையில் பாரிய மழை பெய்தது. அப்போதே எம்மோடு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தொடர்பு கொண்டார். மழைபெய்தால் உங்கள் ஊர் அக்குறணையில் வெள்ளம் வருவது இயல்பு. அதனால் பொல்கொல்ல மஹாவலி அதிகார சபைக்கும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மற்றும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளேன். கொரோனா தொற்றுக் காரணமாக அக்குறணை முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் கஸ்டத்தில் உள்ளனர். மழை தொடர்ந்து பெய்தால் அக்குறணை நகர் தானாகவே வெள்ளப் பெருக்கு ஏற்படும். முன்கூட்டியே பொல்கொல்ல அணைக்கட்டு வான்கதவுகளைத் திறந்து விட வதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளேன் என எம்மோடு தொடர்பு கொண்டு கதைத்தார்.

உடனே ஜம்மிய்யதுல் உலமாக சபை உலமாக்களிடம் இதை கூறிவைத்தேன். அவர்களும் இதில் இணைந்து அவருக்கு நன்றியைத் தெரிவித்தனர். சங்கடத்திற்கு சிக்குண்ட மக்களுக்கு மற்றுமொரு சோதனை வராமல் இந்த உதவியைச் செய்தேன். இதை நீங்கள் பிரபல்யப்படுத்திக் கொள்ளத்தேவையில்லை என்று அவர் அப்போது உலமாக்களிடம் தெரிவித்தார். இப்படிப்பட்ட நல்ல மனிதரை நாங்கள் மறக்காமல் இத் தேர்தல் காலத்தில் எமது நெஞ்சில் நிறுத்தி எமது விரல்களால் ஒரு புள்ளடியிட்டு கௌரவப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். அதேவேளையில் எமது சகோதரர் ஏ. எல். எம் பாரிஸ் கூட மொட்டுக் கட்சியில் களமிறங்கியுள்ளார். அவருக்கும் ஒரு விருப்பு வாக்கை வழங்கி அவர்களுடைய வெற்றியில் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் நன்றியுடையவர்களாகவும் இருப்போம் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கே: கொவிட் 19 தொற்றுக் காலத்தில் அக்குறணை முடக்கப்பட்ட சமயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம அக்குறணை மக்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பங்களிப்புக்கள் நல்கியதாக அறிகின்றோம். அவர் எவ்வாறான உதவிகளை மேற் கொண்டார் என்று கூறுவீர்களா?

கொவிட் 19 தொற்றினால் அக்குறணை முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எம்மோடு தொடர்பு கொண்டு தற்போதைய அக்குறணையின் நிலைமை என்ன? என்ன செய்ய வேண்டும். எவ்வளவுதான் உங்களிடம் பண வசதிகள் இருந்தாலும் திடீரென உங்கள் ஊர் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கிக் இருப்பார்கள். எனவே நாம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மூலம் அவசர நிதி உதவியைப் பெற்று இரு வாரங்களுக்குத் தேவையான அத்தியாவசியமான உலருணவுப் பொதிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றோம். தற்போது தான் அவசரமாக கண்டி மாவட்ட செயலாளரை சந்தித்து ஒரு கூட்டத்தை
ஏற்பாடு செய்துள்ளேன். சிறு நேரத்தில் அதன் முடிவைச் சொல்லுகின்றேன் என்று எம்மோடு தொடர்பு கொண்டு அறிவித்தார். அதன் பின்னர் தெலும்புகஹவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவில் 998 குடும்பங்கள் உள்ளன. அக்கிராமத்திற்கு அவசரமாக அத்தியாவசிமான உலருணவுப் பொதிகள் இரு வாரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய கிராமங்களுக்கு பின்னர் வழங்குகின்றோம் என்று எம்மிடம் அவர் அக் கூட்டம் முடிந்தவுடன் தெரிவித்தார். இந்த உலருணவுப் பொதிகள் யாவற்றையும் படையினர் மூலமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார். இந்த நற்செய்தி கண்டி ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எச். உமர்தீனிடம் அறிவிக்க வேண்டும் என்பற்காக தொலைபேசியின் மூலம் இணைப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி சியாமும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். அவ்வப்போது இவ்விரு உலமாக்களும்
தொலைபேசி ஊடாக அவருக்கு நன்றியைத் தெரிவித்தார்கள்.

ஆனால் அவ் உலருணவுப் பொதிகள் வழங்குவதில் அவருக்கும் பல சவால்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வழங்கலாம் என தீர்மானம் எடுத்திருந்தார். ஆனால் அனர்த்த முகாமைத்து நிலையத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு கிடைப்பத்தில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பிலான முயற்சியை இடைவிடாது தொடர்ந்து முன்னெடுத்தார். அவர் கண்டி சிங்கள வர்த்தக சங்கத்திடம் கதைத்தார். அக்குறணை முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களின்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கண்டி சிங்கள வர்த்தக சங்கத்தோடு கதைத்தார். அவர்கள் அதற்கு ரூபா 25 இலட்சம் காசோலை உடன் வழங்கியிருந்தார்கள்.

சதொச நிறுவனத்திடமிருந்துதான் உணவுப் பொதிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். காசோலை ஒன்றைத் தந்துள்ளார்கள். ஆனால் காசோலைக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதில்லை. நேரடியாக பணத்திற்கு மட்டும்தான் உணவுப் பொருட்கள் வழங்கலாம் என சதொச நிறுவனத்தினர் தெரிவித்தனர். இது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு எவ்வாறு உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று எம்மிடம் ஆலோசனையினைப் பெற்றார். அந்த வகையில் அங்கு உயர் அதிகாரியாக கடமையாற்றியவன் என்ற வகையில் சதொச நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கதைத்த பின்னர் அப்பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கினார்கள். இந்த உணவுப் பொதிகள் படையினரால் பொதி செய்யப்பட்டது. இதன் செய்தி அறிந்த ஒரு குழுவினர் முடக்கப்பட்ட பகுதிக்குள் தொண்டுப் பணி புரிபவர்களுக்காக வெளியே வந்த நபர்களே இப்பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. முதன் முதலாக என்ன தேவையெனக் கருத்திற்கொண்டு அக்குறணை மனமிரங்கி உதவி செய்தவர் தான் திலும் அமுணுக என்பதை நாங்கள் யாரும் மறக்கக்கூடாது.

குறிப்பாக சிங்கள வர்த்தக சங்கத்தின் மூலம் 25 இலட்சம் காசோலயைப் பெற்று சதொச மூலமாக முதன் முதலில் எமது அக்குறணைப் பிரதேசத்திற்கு அத்தியவசியமான உலருணவுப் பொதிகள் வழங்க முன்நின்றவர். நல்ல மனப்பாங்குகளைக் கொண்ட செயற்திறன்மிக்க திலும் அமுணுகமவின் கரங்களை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் சிங்கள முஸ்லிம் மக்களிடையே காணப்படும் சமூக நல்லிணக்கம், சகவாழ்வு, பரஸ்பரப் புரிந்துணர்வு, பாதுகாப்பு என்பன மேலும் வலுப்படுத்தப்படும். இத்தகைய நல்ல மனிதனுக்கு அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி சியாம் முன் வந்தார். எம்முடைய தொலைபேசியின் ஊடாக இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். அதற்கு அவர் பதிலளிக்கும் போது, நான் அயல்கிராமத்தைச் சேர்ந்தவன். என்னுடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்சினைக்குள் சிக்குண்டுள்ள நிலையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டியது என்னுடைய கடமையும் பொறுப்புமாகும். எனவே இந்த உதவியை செய்வதற்கு நான் பங்காளியாக இருந்தேன் என்று பிறரிடம் நீங்கள் சொல்ல வேண்டாம் என்று அவர் அப்போது எம்மிடம் தெரிவித்தார்.

இக் கொரோனா தொற்று விவகாரம் தொடர்பாக அக்குறணை பிரதேச செயலாகம், சுகாதார சேவைப் பிரிவு எமது ஊர் பள்ளிநிர்வாகம் உள்ளிட்டவர்களுடன் அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்திதம் பிரதேசத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நல்ல மனப்பாங்குகளைக் கொண்ட செயற்திறன்மிக்க திலும் அமுணு கமவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். சிங்கள முஸ்லிம் மக்களிடையே காணப்படும் சமூக நல்லிணக்கம், சகவாழ்வு, பரஸ்பரம் புரிந்துணர்வு, பாதுகாப்பு என்பன வலுப்ப்படுத்தப்படும்.

கே: நீங்கள் அக்குறணை மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: பொதுத் தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் சில நாட்களே எஞ்சி இருக்கின்றன. எமது இருப்பினை தீர்மானிக்கப் போகின்ற சக்திகளாக எமது அக்குறணைப் பிரதேச முஸ்லிம் மக்களுடைய வாக்குகளும் உள்ளன. இச் சந்தர்ப்பத்தில் அவர் நமக்கு சொல்லாமல் செய்த உதவிக்காக கைமாறாக நமது ஒரு வாக்கை வழங்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பும் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகவும் இருக்கும். ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக்கட்சி தான் ஆட்சிக்கு வரும் என்பது வெளிப்படையான உண்மை. இவ்வாறான நிலையில் முஸ்லிம்களுடைய காப்பரணாகத் திகழும் திலும் அமுணுகமவின் கரத்தைப் பலப்படுத்த அக்குறணை வாழ் மக்களாகிய நாங்கள் திடசங்கற்பம் பூணவேண்டும்.

கண்டி மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமற் செய்யவேண்டும் என்பதற்காக சுயேச்சைக்குழுவில் ஒரு அணியினர் களமிறக்கியுள்ளனர். இவர்களுடைய முக்கியமான நோக்கம் ஆசனம் பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அல்ல. முஸ்லிம்கள் பெரும்பான்மையின சகோதரர்களுடன் சேர்ந்து செல்வதைத் தடுப்பதிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஆளும் தரப்பில் இல்லாமற் செய்வதற்குமாகும். மக்கள் ஆதரவற்ற சுயேச்சைக் குழுவுக்கு வாக்களிப்பதனால் எந்தப் பிரயோசனமுமில்லை. திலும் அமுணுகமவையும் அக்குறணை மக்களையும் எவராவும் பிரிக்க முடியாது.

இம்முறை திலும் அமுணுகம வெற்றியில் அக்குறணை மக்களும் ஒரு பங்காளிகளாக இருக்கவேண்டும். சுயேச்சைக் குழுவினர் முஸ்லிம்களுடைய வாக்கை சிதறடிக்கச் செய்து கிடைக்கக் கூடிய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்யும் விடயத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்ல ஒருவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்தி வாழ் நாள் பூராகவும் நன்றிக்கடன் செலுத்தும் மகிமையும் இல்லாமற் செய்துவிடும் போக்கில் உள்ளனர். எனவே அக்குறணை மக்களாகிய நீங்கள் நிதானமாச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக இன்று ஆளுங்கட்சி தான் ஆட்சி பீடம் ஏறப்போகிறது. எமது அயல் கிராமத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் களமிறங்கியுள்ளார். அவர் எம்மை அன்புடன் மிக நெருக்கமாக நேசிக்கின்ற மனிதர். அந்த மனிதனுக்கு நாம் அளிக்கின்ற ஒவ்வொரு விருப்பு வாக்கும் எமது மக்களின் உரிiமைகள், அபிலாசை களுக்கு குரல் எழுப்ப செயற்பட துணையாக அமையும். அவை மட்டுமல்ல எமது அக்குறணை மக்களுடைய விவகாரங்களை உள்ளூர் பொறிமுறைகளினூடாக குறிப்பாக தமது தனித்துமான சமய, கலாசாரப், பண்பாட்டு விடயங்கள், பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைக்கு நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான உத்தரவாதங்களை நாங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஆளும் கட்சிக்கு நாங்கள் ஆதரவை வழங்குவதன் மூலம்தான் பெரும்பான்மையின மக்களுடன் சேர்ந்து ஒற்றுமையுடன் வாழக் கூடிய ஒரு சூழல் உருவாகும். கட்சி என்பது மடுமல்ல காலத்தின்தேவை அறிந்து ஆளும் தரப்புடன் சேர்ந்து பயணிப்பதுதான் சிறந்த பொறிமுறை. எனவே எமது போராட்டம் என்பது வெறுமனே அபிவிருத்திகளை மட்டும் கொண்டதல்ல. இந்த நாட்டின் பெருமான்மையின மக்களுடனும் ஏனைய மக்களுடனும் சேர்ந்து வாழ்வதும் ஒரு போராட்டாம்தான். இந்த அரிய சந்தர்ப்பத்தில் எமது தேர்தல் தொகுதியிலுள்ள திலும் அமுணுகமவுக்கு ஒரு வாக்கை வழங்குவதுடன் மற்றுமொரு வாழ்க்கை எமது சமூகத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாரிஸ் ஹாஜியா ருக்கு வழங்க வேண்டி பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது.

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter