ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் திறன்பேசிகளுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; ஆனால், திறன்பேசி பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அதன் தயாரிப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் என ஒட்டுமொத்த உலகமே தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 5ஜி தொழில்நுட்பம்.
ஆம், சந்தையை பெருக்குவதற்கு திறன்பேசி தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை கவருவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும், நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களும், குறிப்பாக அதிவேக இணைய வேகத்தை பெறுவதற்காக பயன்பாட்டாளர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலிருந்து அவசியம் வரை பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
5ஜி என்றால் என்ன?
ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது முந்தைய 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும்?
5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு முன்னர், இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் குறித்து தெரிந்துகொள்வோம்.
உலகம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பத்திற்கென குறிப்பிட்ட அலைவரிசையும், தரமும், சராசரி வேகமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் இணையதள வேகத்தில் பெரும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது, உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு சராசரியாக 44 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவை பொறுத்தவரை சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் இருப்பதாகவும் ஓபன்சிக்னல் என்னும் சர்வதேச கம்பியில்லா இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த ரேடியோ அலைக்கற்றைகள் குறித்த ஆராய்ச்சியாளரான கதிரவன் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, “வேகம் என்று நாம் சொல்ல வருவது கம்பியில்லாத ரேடியோ தொடர்பாடலில் அலைக்கற்றையின் அகலமாகப் பார்க்கப்படுகின்றது.
இன்று புழக்கத்தில் இருக்கும் 3ஜி அல்லது 4ஜி ஆகிய தொடர்பாடல் முறைமைகள் பயன்படுத்தும் அதிர்வெண்கள் 3 கிகாவுக்கும் குறைவானவை. 5ஜியிலோ 30 கிகா வாக்கில் ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆற்றின் வெள்ளம் 5ஜி என்றால் முந்தையவை கால்வாய் நீர். அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல நாம் பார்க்கலாம்.
30 கிகா மைய அதிர்வெண்ணில் 3 கிகா வேகத்துக்கு தொடர்பாட முடிவதற்கு சமம். 3 கிகா இன்றைய அதிர்வெண்ணில் 300 மெகா வேகம் போன்றது. 10-20 மடங்கு இன்றைய வேகத்திலும் அதிகமாகத் தொடர்பாடலாம்” என்று அவர் கூறினார்.
உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறுகிறது
இணைய வேகத்தை தவிர்த்து 5ஜியின் முக்கியத்துவங்கள் என்னென்ன?
1ஜி முதல் 4ஜி வரையிலான தொழில்நுட்ப மேம்பாடு, சாதாரண கம்பியில்லா குரல்வழி அழைப்புகளை மேற்கொள்வதிலிருந்து தொடங்கி, அதிவேக இணைதள பயன்பாடு வரை பல்வேறு மாற்றங்களை நமது வாழ்க்கையில் புகுத்தியுள்ளது.
அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, 5ஜி தொழில்நுட்பத்தை வாகனங்களில் புகுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். அதுமட்டுமின்றி ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ எனப்படும் பொருள்களுக்கான இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரங்களின் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் துல்லியத்தை புகுத்த முடியும்.
அதுமட்டுமின்றி, வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.
5ஜி தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலை என்ன?
5ஜி தொழில்நுட்பத்துக்கான வன்பொருட்கள் தயாரிப்பு, அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் இன்னும் இழுபறி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தபோதிலும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள், புதிய பெயரில் அங்கீகரிக்கப்படாத 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. முறைப்படுத்தப்பட்ட 5ஜி குறித்த தர நிர்ணய அறிவிப்புகள் வெளிவந்தவுடனே, அவை உண்மையிலேயே 5ஜி வேகத்தை கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும்.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டு இறுதிக்குள் 5ஜி தொழில்நுட்பம் முறையாக அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவை பொறுத்தவரை 2022ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமென்று 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான எரிக்சன் கூறுகிறது.
5ஜி திறன்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டனவா?
இதற்கு முன்னரே குறிப்பிட்டபடி, உலகம் முழுவதும் 5ஜிக்கான தர நிர்ணயம் இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை. ஆனால், வழக்கம்போல் திறன்பேசி தயாரிப்பாளர்கள் முந்திக்கொண்டு தங்களது 5ஜி திறன்பேசிகளை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.
உதாரணமாக, உலகின் முன்னணி திறன்பேசி தயாரிப்பாளரான சாம்சங் கடந்த மார்ச் மாதம் தனது முதல் 5ஜி திறன்பேசியான சாம்சங் கேலக்சி எஸ்10ஐ வெளியிட்டது. அதேபோன்று, ஹுவாவேய், ஓப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது 5ஜி திறன்பேசிகளை வெளியிட்டுவிட்டன. இந்நிலையில், அடுத்த வாரம் ஒன்பிளஸ் நிறுவனமும், அதைத்தொடர்ந்து மற்ற தயாரிப்பாளர்களும் தங்களது 5ஜி திறன்பேசிகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அறிகுறியே இல்லாத நாடுகளை சேர்ந்தவர்கள், சாதாரண திறன்பேசிகளை விட சற்றே கூடுதல் விலை கொண்ட 5ஜி திறன்பேசிகளை தற்போதைக்கு வாங்காமல் இருப்பதே சரியான முடிவாக இருக்கும்.
ஏனெனில், 5ஜி தொழில்நுட்பம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு முழுமையாக வெளியிடப்படுவதற்கு முன் உங்களது திறன்பேசி அக்காலத்துக்கு ஏற்ற சிறம்பம்சங்களை கொண்டிராமல் பயனற்று போவதற்கான வாய்ப்புகளுள்ளன.