கொரோனா தொடர்பான முழு விபரம்! ராகமை, கெக்கிராவ, பலாங்கொடை, ஹோமாகம, இரத்தினபுரி

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியவர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலரும் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது வெவ்வேறு பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளது. 

அதன்படி இன்றைய தினம் கந்தக்காடு கொரோனா தொற்றாளருடன் தொடர்புடைய 7 புதிய தொற்றாளர்களும், சேனபுர மறுவாழ்வு மையத்தில் மேலும் 04 கொரோனா தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய ஓமானிலிருந்து வருகை தந்து தொற்றுக்கு உள்ளாகிய மூவருடன் சேர்த்து இன்று இரவு 10 மணி வரை 16 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். 

இன்று மாலை நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2662 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 663 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு 1988 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 120 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய தினம் இனங்காணப்பட்டோர்

இன்றைய தினம் இனங்காணப்பட்ட நோயாளர்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில்,

இன்று செவ்வாய்கிழமை ஓமானிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தவிர குண்டசாலை பிரதேசத்தில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்டவரது மனைவி மற்றும் மாமனார் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதே போன்று கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணிபுரிந்த பிரிதொரு அதிகாரியின் உறவினொருவரும் நோயாளராக இனங்காணப்பட்டுள்ளார். அதே போன்று அதிக பாதிப்புக்களைக் கொண்ட இராஜாங்கனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இன்னொரு நபருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமூகத்தில் இது போன்று தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படுவார்களாயின் நாம் அவை பற்றி பொது மக்களுக்கு அறிவிப்போம். அதற்கமையவே இராஜாங்கனையில் இனங்காணப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நாம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். ஆனால் சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு போலியாக கருத்துக்கள் பகிரப்படுகின்றன. கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையங்களில் சேவையாற்றிய அல்லது அங்கு புனர்வாழ்வு பெற்றவர்களை தனிமைப்படுத்தலுக்கான மீள அழைப்பதில் இவ்வாறான போலி செய்திகள் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றன.

இவர்கள் இராணுவம் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களினாலேயே தனிமைப்படுத்தலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆனால் இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளதனவர்கள் என்று சிலரால் தவறாகக் கருதப்படக் கூடும். இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக அழைக்கப்படுபவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் நாம் உடனே மக்களுக்கு அறியத்தருவோம் என்றார்.

ராகமையில் இனங்காணப்பட்ட நோயாளர் தொடர்பில் விளக்கமளித்த அனில் ஜாசிங்க ,

ராகமை தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு

ராகமையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் அந்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர் இம் மாதம் முதலாம் திகதி பிரிதொரு வைத்தியசாலையிலிருந்து இந்த தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்துள்ளார். அதற்கு முன்னர் கடந்த மாதம் 23 ஆம் திகதியளவில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசனைக்காகச் சென்றுள்ளார்.

அவர் அங்கு சென்று வந்ததன் பின்னர் சிறு சுகயீனம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இந்த தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றியுள்ளமையால் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலம் அவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த தனியார் வைத்தியசாலையில் பணியாற்றிய 48 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அதன் முகாமையாளரினால் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் அவர்களில் எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்த வைத்தியசாலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.

கலவான பகுதியில் கடைகள் அடைப்பு

இரத்தினபுரி மாவட்டம் – கலவான பகுதியில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இன்று செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணிமுதல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.

குறித்த பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்று கொரோனா தொற்றுக்குள்ளான நபர் வருகை தந்த இடமாக அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால் அந்த பகுதியிலுள்ள ஏனைய சுமார் 300 விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கலவான வர்த்தக சங்கத் தலைவரது ஆலோசனைக்கமைய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கெகிராவையில் 30 பேர் சுய தனிமைப்படுத்தலில்

கெகிராவை கிதுல்ஹிடியாவை பிரதேசத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இராணுவ அதிகாரி சென்றதாகக் கூறப்படும் வீடுகளிலுள்ளவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கெகிராவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை தியதலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பலாங்கொடையில் 23 பேர் தனிமைப்படுத்தலில்

இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் இனங்காணப்பட்ட நபர் பலாங்கொடை பிரதேசத்திற்கு சென்று அங்கு தொடர்புகளைப் பேணிய 6 பேரும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 23 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை ராஸகல பிரதேசத்தில் மூவரும் சமனலவத்த பகுதியில் ஒருவரும் வெலிபதயாய பகுதியில் ஒருவரும் குருகல பிரதேசத்தில் ஒருவரும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டள்ளனர்.

ஹோமாகவில் 30 பேர் தனிமைப்படுத்தலில்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவையாற்றிய இராணுவ வீரர்கள் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம பிரதேசத்தில் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ வீரர்கள் இருவரும் விடுமுறையில் ஹோமாக கெந்தலந்த மற்றும் கொடகம ஆகிய பிரதேசங்களுக்குச் சென்றுள்ளனர். இந்த பிரதேசங்களில் இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 7 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பெருவதற்காக சென்ற ஹோமாகம பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவரும் அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவரும் , குறித்த இராணுவ வீரர் தங்க நகை வாங்கச் சென்ற நகைக்கடையிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரவில் விற்பனை நிலையத்திற்கு பூட்டு

இரத்தினபுரி – லெல்லோபிடி பிரதேசத்தில் விற்பனை நிலையமொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு அங்கு பணியாற்றிய 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய அதிகாரியினுடைய சகோதரர் ஒருவர் வந்து சென்றமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter